Vedanta Saram

now browsing by category

 

வேதாந்த ஸாரம் – 8

அத்யாரோபம் – விளக்கம்

அத்வைத வேதாந்தத்தில் ‘அத்யாரோபம்’ என்பது மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதனை ‘அத்யாஸம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதனை மற்றொரு உதாரணத்தின் வாயிலாக காணலாம். ஒரு நதிக்கரை ஓரத்தில் மங்கலான நீரில் வெள்ளி நாணயங்கள் சிதறிக்கிடப்பதாக நினைத்து, அதன் அருகே சென்று அதனை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளி நாணயம் போன்ற ஒளிரும் தன்மை பெற்றுள்ள முத்துச் சிப்பிக்கள் என்று தெரியவருகின்றது.

இவ்வாறு, முத்துச்சிப்பியின் மீது வெள்ளி அத்யாஸம் ஆகின்றது. இதனையே உள்ள வஸ்துவில் இல்லாத ஒன்றை ஏற்றிப்பார்த்தல் என்கின்றோம். இதனையே வேதாந்தத்தில் பிரம்மத்தின் மீது இந்த உலகத்தை உண்மை என்று ஏற்றிப் பார்க்கிறோம். இதனை “அத்யாரோபம்” என்று 32 – வது ஸ்லோகத்தில் குறிப்பிடுகின்றார்.

அடுத்து 33 – வது ஸ்லோகத்தில் வஸ்து – அவஸ்து என்ற இரண்டின் தன்மையை விளக்கமளிக்கின்றார். இதில் சச்சிதானந்தமும், இருமையற்றதுமான பிரம்மமே வஸ்து என்றும், மற்ற எல்லா ஜடப்பொருட்களின் கூட்டமே அவஸ்து என்றும் அறிவிக்கின்றார்.

அப்படிப்பட்ட வஸ்து ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்பதை சாஸ்திரத்தின் வாயிலாகவும் அறிய முடிகின்றது.

“ஸதேவ ஸோம்யேத மக்ர ஆஸீத்” (சாந்தோக்ய உபநிஷதம் – 6.2.1)

குழந்தாய் படைப்பிற்கு முன்பு இந்த உலகம் இரண்டற்றதாக ஸத்தாக இருந்தது’.

“ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம”. – (தைத்திரீய உபநிஷதம் – 2.1)

உண்மையானதுமான, ஞானவடிவானதுமான, எல்லையற்றதுமானது பிரஹ்மம் என்கின்றது.

“ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம” – (சாந்தோக்ய உபநிஷதம் – 6.2.1)

பிரம்மம் இரண்டற்ற ஒன்றேயாகும் என்று உபநிஷதம் அந்த இரண்டற்ற ஒன்றை அறிவிக்கின்றது.

அறியாமையிலிருந்தே படைப்பானது தொடங்குகின்றது. அஞ்ஞானத்தினால் தோன்றியுள்ள ஆகாயம் முதல் தொடங்கி, பூமி வரையிலும் உள்ள எல்லா ஜடப்பொருட்களும் ‘அவஸ்துவே’ ஆகும்.

எவையெல்லாம் புலன்களால் உணரப்படுகின்றனவோ, உறுப்புகளுடன் கூடியுள்ளனவோ, மாறுபாடு அடையும் தன்மை உடையனவோ அவ்வனைத்தும் அழியத்தக்கது ஆகும். அதனால்தான் பிரம்மம் என்ற வஸ்துவைத்தவிர, பிரம்ம லோகம் முதற்கொண்டு அனைத்து உலகங்களும், உலகப்பொருட்களும் அழியக்கூடியதை அவஸ்து என்கின்றது சாஸ்திரம்.

அஞ்ஞானத்தின் ஸ்வரூபம்

அத்வைத வேதாந்தத்தின் விதிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் அஞ்ஞானத்தின் ஸ்வரூபம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதை இங்கு விரிவாகக காணலாம்.

“ஸத்” என்ற வஸ்து எப்பொழுதும், எங்கும் ஒரே தன்மையுடன், மாற்றத்திற்கு உட்படுத்த முடியாத ஏக ஸ்வரூபமான, அறிவையும், ஆனந்தத்தையும் உடையதாகும்.

“அஸத்” என்றால், முயலின் கொம்பைபோன்று, அல்லது மலடியின் மகனைப் போன்று எங்குமே காண முடியாத ஒன்றாகும். அதனால், அஞ்ஞானமானது இந்த இரண்டிற்கும் வேறுபட்டு இருப்பதினால், அதை ஸத், என்றோ அல்லது அஸத் என்றோ விவரிப்பதற்கு இயலாததாகும்.

உபநிஷத்துக்களில், பகவத்கிதையில் ’பிரக்ருதி’ அல்லது மாயை என்று எதைக் குறிப்பிடுகின்றதோ, அதுவே இங்கு அஞ்ஞானம் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த அஞ்ஞானத்திற்கு சத்துவ குணம், ரஜோ குணம், மற்றும் தமோ குணம் என்ற மூன்று குணங்களும் காணப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின் கலவையான வடிவம்தான் அஞ்ஞானம் என்பதாகும்.

ஆத்மஞானம் ஏற்பட்டவுடன் இவைகள் மறைவதால், ஞானத்தின் விரோதிகள் என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களையும் கடந்த “குணாதீதன்” என்ற நிலைதான் ஞானியின் நிலை ஆகும்.

பொதுவாக அஞ்ஞானத்திற்கு ஆவரணம் மற்றும் விக்ஷேபம் என்ற இரண்டு சக்திகள் உள்ளன. அறியாமையின் ஆவரண சக்தியானது பிரம்மத்தை மறைத்து, இந்த முழு உலகத்தையும் தோன்றுமாறு செய்து விடுகின்றது.

அதாவது, மரத்தால் செய்யப்பட்ட யானையில் மரம் என்ற அறிவு இன்றி பார்க்கும் குழந்தைக்கு அது உண்மையான யானை போன்று மயக்கத்தைக் கொடுக்கும். இந்த தோற்ற மயக்கத்தை “ஆவரண சக்தி” (உள்ளதை மறைப்பது) என்கின்றோம்.

இதில் பொதிந்துள்ள அறியாமையை நீக்கி ஞானத்தின் வாயிலாக அது மரத்தால் செய்யப்பட்ட யானை என்ற அறிவைக் கொடுத்தவுடன், யானை மறைந்து மரம் மட்டுமே தெரியும்.

இவ்வாறு பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள உலகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் காட்டிக்கொடுக்கின்ற முறைதான் “அபவாதம்” என்கின்றோம்.

இது போன்று, ஜீவாத்மாவின் மூன்று வடிவங்களான விச்வன், தைஜஸன், ப்ராஜ்ஞன், மற்றும் ஸ்தூல, சூக்ஷும, காரண சரீரங்கள், அன்னமய கோஷம், பிராணமயய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் மற்றும் ஆனந்தமய கோஷம் என்ற பஞ்ச கோஷங்களையும், பரமாத்மாவின் ஈஸ்வரன், ஹிரண்யகர்பன், மற்றும் விராட் என்ற மூன்று வடிவங்களையும், பூர், புவ என்ற 14 உலகங்களையும், இந்த உலகங்களில் உள்ள ஜீவர்களின் சரீரங்கள், இந்த சரீரங்களுக்கு காரணமான ஐந்து தன்மாத்திரைகள், மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் என்னும் இவை அனைத்தையும் அஞ்ஞானத்தின் ஸ்வரூபம்தான் என்பதையே “விக்ஷேப சக்தி” (இல்லாததை தோற்றுவிப்பது) என்கின்றோம்.

அதாவது, பிரம்மத்திடம் இருந்து எந்த, எந்த முறையில் இந்த உலகம் வெளிப்பட்டு தோன்றியதோ, அதற்கு எதிரான முறையில் இந்த உலகத்தை மீண்டும் ஒவ்வொன்றாக பிரம்மத்திடம் ஒடுக்குவதினால் அந்த பிரம்மம் மட்டுமே இறுதியில் எஞ்சி நிற்கும்.

அதுப்போலவே, ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை, அதன் சேதனத்தன்மையில் மட்டுமே அறிய வேண்டுமே ஒழிய, ஜீவனின் அல்பமான, அழியக்கூடிய சரீரத்தினை முன் நிறுத்தி அறிய முயல்வது அறியாமையாகும். இந்த சேதனத்தின் வாயிலாக உண்டாகின்ற ஒற்றுமை ஜீவ – ஈஸ்வர ஐக்கியத்தை உண்டாக்குகின்றது. இந்த ஒற்றுமையானது அனுபவத்தால், ஞானத்தால் வரவேண்டும்.

இந்த ஞானமும், அனுபவமும் ஏற்படுவதற்காக முமுக்ஷுவானவன் சாதனை செய்ய வேண்டும். சாதனைகளில் “சிரவணம்” (வேதாந்த சாஸ்திரத்தை குருவின் வாய் மொழியாக, இவனுடைய காதுகளால் கேட்டல்) என்பது முதலாவதாகும்.

வேதாந்த ஸாரம் – 7

குருவின் அவசியம்

ஒருவனுடைய தலையில் நெருப்பு பிடித்துக்கொண்டவுடன், அவன் அதை அணைக்க எப்படி அருகே இருக்கும் நீரை நோக்கி ஓடுவானோ, அதுப்போல, பிறப்பு, இறப்பு என்ற சம்ஸார நெருப்பினால் கொதிப்படைந்தவன், அந்த நெருப்பை அணைக்க பிரம்ம நிஷ்டனாக விளங்கும் குருவைச் சென்று சரணடைகின்றான். அந்த குருவிற்கு கொடுப்பதற்கு தன்னிடம் ஒன்றுமில்லாவிட்டாலும், அவருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற சாஸ்திர நியதி இருப்பதினால், அன்றைய உபநிஷத்து காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் அனைவருமே குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததினால், அக்னி காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால், அவர்களது யாகத்திற்குக் கொடுக்க ஸமித்து என்ற குச்சிகளை கொண்டு காணிக்கையாக கொடுத்தாவது இந்த வேதாந்த சாஸ்திரத்தை அறிந்துகொண்டனர். இப்படி குருவைத்தேடி சாஸ்திரத்தை அறிந்து மோக்ஷத்தை விரும்புகின்றவனே “முமுக்ஷு” அல்லதி “ஜிக்ஞாஸு” என்று அழைக்கப்படுகின்ற அதிகாரி ஆவான்.

ஆத்ம ஞானத்தை குருவின் மூலமாக பெறவேண்டிய அவசியத்தை இவ்விதம் கூறப்பட்டுள்ளது. முண்டக உபநிஷத்தில் உள்ள இந்த வாக்கியத்தை விவரிக்கும் பொழுது சங்கரபகவத்பாதர்

“சாஸ்தரஜ்ஞோபி ஸ்வாதந்த்ரயேண ப்ரஹ்மஞானான் வேஷணம் ந குர்யாத்” ||

சாஸ்திரத்தை நன்கு அறிந்தவன் கூட, சுதந்திரமாக பிரம்மஞானத்தை தேடுதல் கூடாது என்று கூறியுள்ளார். நிச்சயமாக ஒரு குருவின் வாயிலாகத்தான் தத்துவத்தை அறிய வேண்டும்.

அதாவது,

“ஆசார்யவான் புருஷோவேத |”

குருவைப் பெற்றுள்ள புருஷனே (தத்துவத்தை) அறிவான். (சாந்தோக்ய உபநிஷதம் 6.14.2). என்று குருவின் அவசியத்தை 30 – வது ஸ்லோகத்திலும், அடுத்து வருகின்ற 31 வது ஸ்லோகத்தில் அந்த குருவின் அளவற்ற கருணையால் அத்யாரோப – அபவாத நியாத்தின் மூலமாக சீடனுக்கு உபதேசம் செய்யப்படுவதை விளக்குகின்றார்..

அபவாதம் எனில் அறியாமை எனும் அஞ்ஞானத்தால் கயிற்றிலே தோற்றம் கொண்டுள்ள பாம்பை புறக்கணித்து, அறிவு (ஆத்ம ஞானம்) ஏற்பட்ட உடன் அது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை அறிவது போல,  அத்யாரோபம்  எனும் முறையில் பிரம்ம வஸ்துவின் மீது ஏற்றப்பட்ட பொய்யான இந்த உலகத்தை  வேதாந்த சாத்திரங்கள் எனும் பிரமாணங்கள், யுக்தி, அனுபவங்களின் மூலம் புறக்கணித்து, அது பிரம்மம் தான் என்று அறிய வைக்கும் முறைதான் அபவாதம்”ஆகும்.

பிரம்மத்திடம் இருந்து எந்த முறையில் இந்த உலகமானது `தோற்றம்` கொண்டதோ அதற்கு எதிரான முறையில் இந்த உலகத்தை பிரம்ம வஸ்துவிடம் `ஒடுக்கும்` பொழுது (லயம் ஏற்படச் செய்யும் பொழுது), பிரம்மம் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும்.

அத்யாரோபம் என்பது சமசுகிருத மொழியில் உண்மையான ஒரு பொருள் மீது வேறு ஒரு பொருளை ஏற்றி வைத்தல் ஆகும். (உண்மையான ஒரு பொருளை வேறு ஒரு பொருளாக காண்பது – மங்கிய இருளில் கயிற்றை பாம்பு என காணுதல்). இதனை அத்யாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

அத்யாரோபம் அல்லது அத்யாசம் எனும் சொற்கள் சமசுகிருத மொழியில் பரி பாக்ஷை (மறைமுகமாக உணர்த்தும் சொற்கள்) ஆகும்.

மங்கிய இருளிலே, கயிற்றின் உருவமானது சரியாக தென்படுவதில்லை. அப்பொழுது அறியாமையால், கயிற்றின் மீது பாம்பை ஏற்றிக் கூறுவது போல, பிரம்ம வஸ்துவின் தன்மையை சரியாக அறிந்து கொள்ளாமல், அறியாமையால் (அஞ்ஞானத்தால்பிரம்மத்தின் மீது இந்த உலகத்தை ஏற்றிக் கூறுவதுதான் “அத்யாரோபம்” ஆகும்.

அவ்வாறு பொய்யாக பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்த உலகத்தை இறக்கி வைக்கும் (நீக்கும்) முறைக்கு “அபவாதம்” என்பர்.

இந்த அத்யாரோப – அபவாத விசயம் குறித்த புகழ்பெற்ற ஸ்லோகம் ஒன்றும் உள்ளது. அதனையும் காணலாம்.

‘அத்யாரோபாபவாதாப்யாம் நிஷ்ப்ரபஞ்சம் ப்ரபஞ்சயதே |

சிஷ்யாணாம் போதஸித்தயர்த்தம் தத்வஜ்ஞை கல்பித: க்ரம: ||

உலகத்தை மீறி நிற்கும் தத்துவமானது, அத்யாரோபம் – அபவாதம் மூலம் விவரிக்கப்படுகின்றது. இது சீடர்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு தத்துவஞானிகளால் கற்பிக்கப்பட்டுள்ள முறையாகும்.

இதே வழிமுறையில் நாரத மஹரிஷி ஸனத்குமாரரை சென்றடைந்து, ஐயனே! எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டார். அதற்கு ஸனத்குமாரர் “உமக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதை முதலில் தெரிவியுங்கள் அதற்கு மேல் உமக்கு உபதேசிப்போம்” என்று கூறினார். (சாந்தோக்ய உபநிஷதம் – 7.1.1).

இதிலிருந்து அனைத்தையும் அறிந்த மஹான்கள்கூட குருவினை நாடிச் சென்று இந்த ஆத்ம ஞானத்தை அடைந்திருக்கின்றார்கள் என்பதாகும்.

குருவானவர் கருணை செய்யாவிட்டால், ஞான உபதேசம் செய்வதோ, அந்த உபதேசம் பலன் அளிப்பதோ இயலாமல் போய்விடும். அருள் நிறைந்த குருவின் இலட்சணத்தை ஸர்வஜ்ஞாத்மா என்ற முனிவர் தம்முடைய “ஸம்க்ஷேப சரீரக” என்னும் நூலில் பின் வருமாறு கூறுகின்றார்.

“ஏததேவ ஹி தயாலுலக்ஷணம் யத்வினேயஜனபுத்தி வர்தனம்” ||

‘நல்வழிப்படுத்துவதற்கு உரிய தகுதிவாய்ந்தவர்களின் ஞானத்தை அதிகப்படுத்துவதுதான் அருள் நிறைந்த குருவின் இலட்சணமாகும்.’

வேதாந்த ஸாரம் – 6

26 – வது ஸ்லோகத்தில் அமைதியுடையவனாகவும், புலன்களை அடக்கியவனும், குற்றங்கள் அற்றவனும், கூறுவதைப் போன்றே நடப்பவனும், குண்ங்கள் நிறைந்தவனும், எப்பொழுதும் குருவை அனுசரித்து நடப்பவனுமாகிய இத்தகைய சீடன் கிடைத்தான் என்றால், அவனுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்பது குருவிற்கு பொருந்தும் நியமம் ஆகும்.

ஆசார்ய ஸ்யாபி அயம் நியமோ யன்ன்யாயப்ராப்த சச்சிஷ்ய நிஸ்தாரணம் அவித்யா மஹோததே: |

நியமங்களுக்குப் பொருத்தமானதாக, தன்னிடம் வந்துள்ள நல்ல, தகுந்த சீடனை, அஞ்ஞானக் கடலைக் கடக்க வைப்பது என்பது ஆச்சாரியருக்கும் நியமமாக உள்ளது என்று ஸ்ரீ சங்கரர் முண்டக உபநிஷத்திற்கு எழுதியுள்ள விளக்க உரையில் கூறியுள்ளார்.

அடுத்ததாக, விஷயத்தைப் பற்றி 27 – வது ஸ்லோகத்தில் ஜீவனும், பிரம்மமும் ஒன்று என்பதுதான் “விஷயம்” ஆகும்.

இங்கு வேதாந்த சாஸ்திரம் நம்முடைய உண்மையான ஸ்வரூபமாக உள்ள ஆத்மாவைக் குறித்தும், இவ்வுலகத்தின் படைப்பு, இருப்பு, அழிவு என்பனவற்றிற்கு ஆதாரமாக உள்ள பிரம்மத்தைப் பற்றியும் கூறி, அவ்விருவரின் ஐக்கியத்தைப் பற்றி விவரிப்பதே வேதாந்த சாஸ்திரத்தின் “பிரமேயம்” ஆகும்.

இந்தப் பிரமேயம்தான் வேதாந்தத்தின் விஷயமாகும். பிரமேயம் என்றால் அறியப்படும் பொருள் எனப்பொருள்படும். அறிபவனே பிரமாதா ஆவான். ஆனால், தூய்மையான சைதன்யமாக உள்ள அந்த பரப்பிரம்மத்தை சாஸ்திரத்தின் துணை இல்லாமல் வேறு எந்த பிரமணத்தின் வாயிலாகவும் அறிய முடியாத வஸ்துவாக இருப்பதால் இங்கு அதனை பிரமேயம் (அறியப்படுகின்ற பொருள்) என்ற கண்ணோட்டத்தில் காண்கின்றோம்.

இந்த உலக வாழ்க்கையில் விழுந்து உலன்றுக் கொண்டு இருக்கும் ஜீவனுக்கும், இந்த உலகத்தையே படைத்து இரட்சிக்கின்றவனும் ஆகிய பரப்பிரம்மத்திற்கு ஒற்றுமையை எப்படி கூறவியலும்?

இதனை தன்னிடம் உள்ள அறியாமையை நீக்கி, ஆத்மாவின் மீதும், மாயையால் பிரம்மன் மீதும் கற்பித்துள்ள உபாதிகளை புறக்கணித்துப் பார்க்கும் பொழுது அந்த இரண்டும் தூய்மையான சைதன்யம் என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

அதாவது, சைதன்யம் என்ற கண்ணோட்டத்தில் காணும் பொழுது அந்த இரண்டும் ஒரு வஸ்துதான் என்னும் ஞானம் உண்டாகின்றது. ஜீவ – பிரம்ம ஐக்கியம் என்பதை சாதாரணமான நீரும், பாலும் கலக்கின்றபொழுது உண்டாகின்ற ஐக்கியம் போன்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இங்கு ஐக்கியம் என்பதின் பொருள் பிரம்மத்திலிருந்து ஜீவன் வேறுபட்டதல்ல என்பதைக் குறிக்கின்றது.

அடுத்த 28 –வது செய்யுளில் அந்த அறியப்படும் பொருளான பரப்பிரம்மத்தை அறிவிக்கும் பிரமாணமான சாஸ்திரத்திற்கும், அது விவரிக்க உள்ள விஷயத்திற்கும் உள்ள சம்பந்தத்தை கூறுகின்றார். இது “போத்ய, போதக பாவக” என்று கூறப்படுகின்றது.

அதாவது, தெரியப்படுத்துவது போதகம் என்றும், அறியப்படுவது போத்யம் என்றும் கூறி உப நிஷத்துக்களின் வாயிலாக அந்த ஜீவ – பிரம்ம ஐக்கியத்தை அறியப்படுகின்றது என்று விளக்கப்படுகின்றது.

இந்த ஜீவ – பிரம்மத்தினைடம் சைதன்யத்தில் ஒற்றுமை உள்ளதை விஷயமாக கூறி, அந்த ஐக்கிய அனுபவமே நமக்கு ஏற்படாமல் தடுப்பது நம்முடைய அறியாமைதான் என்று கூறி, வேதாந்த அத்யயனமான நன்கு விதமான சாதனங்களின் வாயிலாகவும், வேதாந்த சிரவணத்தின் வாயிலாகவும் அறியாமையானது நீங்கி நம்முடைய உண்மை ஸ்வரூபம் இயல்பாகவே ஆனந்தமானது என்ற பிரயோஜனத்தை இந்த 29 – வது செய்யுளில் விளக்குகின்றார்.

அதாவது பிரயோஜனம் என்பது ஜீவ – பிரம்மத்தின் ஐக்கியம் என்னும் பிரமேயத்தின் வாயிலாக அறியாமை அகன்று, உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை அடைவது ஆகும்.

“ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை தாண்டுகின்றான்”. (சாந்தோகிய உபநிஷதம் 7.1.3). ”ப்ரம்ம ஞானியானவன் பிரம்மமாகவே ஆகின்றான்” (முண்டக உபநிஷதம் 3.2.9) இது போன்று சுருதியின் மூலம் அறியப்படுவது “பிரயோஜனம்” என்று அறியவேண்டும்.

சோகம் என்றால் அறியாமையினால் கூடிய துயத்துடன் வாழும் வாழ்க்கையாகும். ஆத்மாவை உணர்ந்த ஞானிக்கு அந்த ஆத்ம ஞானத்தினால் “நான் சைதன்யம்” என்னும் அனுபவத்தைப் பெற்றவுடனேயே, உடலின் மீதிருந்த பற்று விலகி விடுகின்றது. அத்துடன் அந்த உடலைக் கொண்டு இதுவரை அனுபவித்து வந்த சோகமும் நீங்கி விடுகின்றது. சாந்தோக்கிய உபநிஷத்தில் வருகின்ற கீழ்க்கண்ட வாக்கியம் இதையே உறுதிப்படுத்துகின்றது.

இந்த வாக்கியம் சிஷ்யரான நாரதமஹரிஷி தனது குருவான ஸனத்குமாரரிடம் கேட்ட சுருதி வாக்கியமாகும். அது,

ஸோஹம் பகவோ மந்த்ரவி தேவாஸ்மி

நாத்மவித்ச்ச்ருதம் ஹ்யேவ மே பகவத் த்ருசேப்ய தரதி

சோகமாத்ம வித் இதி ஸோஹம் பகவ: சோசாமி தம் மா

பகவன் சோகஸ்ய பாரம் தாரயது இதி || (சாந்தோக்ய உபநிஷதம் 7.1.3)

 “ஐயனே! நான் கர்மக்காரியமான மந்திரத்தை உபாசனை செய்ய மட்டுமே அறிந்திருக்கின்றேனே தவிர, ஆத்மாவை அறியவில்லை. தங்களைப் போன்றவர்களிடமிருந்து ஆத்மாவை அறிந்தவனே சோகத்தைக் கடப்பான் என்று கூறக் கேட்டிருக்கின்றேன். நான் சோகத்தால் ஆட்பட்டிருக்கின்றேன். அத்தகைய என்னை சோகத்தை தாண்டும்படிச் செய்விக்க வேண்டும்” என்று கேட்கின்றார்.

ஆத்மானுபவம் ஏற்படுகின்ற வரையிலும் சோகமானது இருக்கும். ஆத்மானுபவம் ஏற்பட்டவுடனேயே சோகம் அகன்றுவிடும் என்பதை இதிலிருந்து அறியவேண்டும்.

அதாவது, ஆத்மாவை உணர்ந்த ஞானியானவன் சோகத்தைக் கடந்து ஏதோ ஒரு புதிய நிலையை அடைகின்றான் என்று குழப்பிக் கொள்ளக்கூடாது. அதாவது சாஸ்திர விசாரத்தினால், தெளிந்த அறிவை அடைந்து, அதன் வாயிலாக “நான் ஆத்மா” என்ற ஞானம் உண்டாகி, அந்த ஞானத்தினாலேயே “நான் பிரம்மம்” என்றஉணர்வு உண்டாகிவிடுமானால், அவன் பிரம்மமாகவே ஆகின்றான் என்று முண்டக உபநிஷதமும் இதே கருத்தை வலியுறுத்துகின்றது.

இதையே அஷ்டாவக்ர கீதையும், “தன்னை முக்தன் என்று கருதுவோன் முக்தன், பக்தன் என்று கருதுவோன் பக்தன், ஆக அவன் மதி எதுவோ, அவன் கதி அதுவே” என்று ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது.

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ: |

ஆத்மந்யேவ ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் வித்யதே || (கீதை – 3.17)

நைவ தஸ்ய க்ருதேநார்தோ  நாக்ருதேநேஹ கஸ்சந |

ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய: || (கீதை – 3.18)

மேலும் பகவத்கீதையிலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும், ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும், ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கின்றானோ, அவனுக்கு செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை என்றும், அந்த மாமனிதன் இந்த உலகில் கர்மங்களைச் செய்வதாலும் எந்த விதமான பயனும் இல்லை, கர்மங்களைச் செய்யவிட்டாலும் ஒரு பயனுமில்லை. அதுபோன்றே, உயிரினங்கள் அனைத்திலும் எதினிடமிருந்தும் தனக்காக ஆக வேண்டியது அவனுக்கு என்று ஒன்றுமே இல்லை என்று உறுதிப்படுத்துகின்றார்.

வேதாந்த ஸாரம் – 5

செய்யுள் 15 முதல் 25 வரை நான்கு விதமான சாதனங்கள், மற்றும் அதன் வாயிலாக வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் எத்தகையவை என்றும், அந்த நற்பண்புகளால் அடையும் பலன்களையும் காணலாம்.

  1. நித்யாநித்ய வஸ்து விவேக: |
  2. இஹாமுத்ரார்த பலபோகவிராக: |
  3. சமாதிஷட்க ஸம்பத்தி: |
  4. முமுக்ஷுத்வம் சேதி | போன்ற நான்கு சாதனங்கள் ஆகும்.

இதில், விவேகம் என்பது (நித்யாநித்ய வஸ்து விவேக:) எது நித்யம்?, எது அநித்யம்? என்ற அறிவினை அறிதல், அதாவது இந்த உலகத்தில் எந்தப் பொருளும் நித்தியமாக இருப்பதில்லை, எல்லோரும் அழிந்து போகின்ற அநித்திய பொருளின் மீதே ஆசை வைக்கின்றனர்.  நித்தியமான, என்றும் அழியாத அந்த பரம்பொருளை யாரும் விரும்புவதில்லை.

இதற்கு காரணம் மனிதனின் மனதில் உள்ள விருப்பு, வெறுப்புக்களே அவனது விவேக சக்தியை அழித்து விடுகின்றன. ஒருவன் தான் செய்யும் செயல்களை, நான்” செய்கின்றேன் என்ற பற்று வைக்காமல், அவனது அறிவைப் பயன்படுத்தி, அனைத்து செயல்களும் இறைவன் என்னைக் கருவியாக பயன் படுத்திக் கொண்டு, ஈஸ்வர காரியமாகவே இந்த பிரபஞ்சச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற புரிதலுடன், செய்யும் செயல் எதுவும் என்னுடையது அல்ல. அனைத்தும் அவன் செயல் என்று, செயல்களின் பலன்களை ஈஸ்வரார்பணமாக அர்பணித்து, கர்ம யோகப்படி வாழ்ந்தால், அவனுக்கு விவேகம்” உண்டாகி, அந்த விவேகத்தின் பலனாக வைராக்கியம்” உண்டாகின்றது.

வைராக்கியம் என்பது (இஹாமுத்ரார்த பலபோகவிராக:) இந்த பூலோகத்தில் இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட்கள், மற்ற லோகங்களான சொர்க்கம் போன்ற லோகத்தில் இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட்கள் என, நம்முடைய கர்ம பலத்தினால் கிடைக்கின்ற போகப் பொருட்கள் மீது பற்றுக்களை வைக்காமல் இருப்பதே வைராக்கியம்”  எனப்படும்.

ஸமாதி ஷட்க சம்பத்தி என்பது, சம:, தம:, உபரம:, திதிக்ஷா, ஸ்ரத்தா, மற்றும் ஸமாதானம் என்ற ஆறு நற்பண்புகளை கொண்டவையே  ஸமாதி  ஷட்க சம்பத்தி”  என்று அழைக்கப்படுகின்றது.

சம:                      –              மனக் கட்டுப்பாடு.

தம:                     –              இந்திரியக் கட்டுப்பாடு.

உபரம:              –              விலகி இருத்தல்.

திதிக்ஷா         –              சகிப்புத்தன்மை.

ஸ்ரத்தா          –              நம்பிக்கை.

ஸமாதனம் –              மன ஒருமைப்பாடு.

ஆகிய ஆறு நற்பண்புகளையே ஸமாதி ஷட்க சம்பத்தி” என்கின்றோம்.

அந்த ஆறு நற்பண்புகளையும் விரிவாக இனி காணலாம்.

சம: – மனக் கட்டுப்பாடு

சம: என்பது மனோ நிக்ரஹம் ஆகும். அதாவது மனம் என்ற அந்தக் கரணத்தை உறுதியுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல். மனதை கட்டுப்படுத்த பிரார்த்தனை, ஜபம், மற்றும் தியானம் போன்றவைகளால் நல்ல எண்ணங்கள் உருவாகி, மனம் தூய்மை அடைந்து விட்டால், அந்த மனம் எளிதில் அனைதியடைந்து கட்டுப்படும்.

மனதை அமைதிப்படுத்துவதால், வைராக்கியத்தை அதிகப்படுத்தும். இந்திரியக் கட்டுப்பாடு வரும்.

உடலுக்கு ஒரு வாய். மனதுக்குப் பத்து வாய்கள் என்பார்கள்.

எனவே மனதுக்குத் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தம: – இந்திரியக் கட்டுப்பாடு

தம: என்பது இந்திரிய நிக்ரஹம் ஆகும். அதாவது கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். குறிப்பாக ஞானேந்திரியங்களான கண், காது, மூக்கு, நாக்கு முதலியவற்றை நன்முறையில் பயன்படுத்துதல்.

புலன்களுக்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுக்காமலிருத்தல். எந்தச் சூழ்நிலையில் இருந்தால் கட்டுப்பாட்டை இழப்போமோ, அந்தச் சூழ்நிலையில் இருந்து விலகி இருத்தல்.

உபரம: – விலகி இருத்தல்

சமம், தமம் முதலியவற்றைத் தொடர்ந்து செய்தல், தேவையற்றதிலிருந்து விலகி உன்னுடைய, நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை மட்டும் செய்தல் (ஸ்வதர்ம அனுஷ்டானம்) முதலியன உபரமம் எனப்படும்.

உபரமத்தை அடைவதினால், சம, தமம் தொடந்து நம்மிடையே நிற்கும். வேதாந்த விஷயங்களை மனம் ஒன்றி கேட்பதற்கு உதவும். இதுவே சிரவணம் எனப்படும்.

திதிக்ஷா – சகிப்புத்தன்மை

திதிக்ஷா என்ற சொல்லுக்குப் பொருத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் என்றுபொருள். அதாவது, குளிர், வெப்பம், மானம், அவமானம் போன்ற எதிரெதிர் அனுபவங்களான இருமைகளை சகித்துக் கொள்ளுதல். கஷ்டமான சூல்நிலை இயற்கையாக வரும் பொழுது அதை நீக்க முழு முயற்சி செய்ய வேண்டும். மனதளவில் குறை சொல்லாமல் எதையும் செய்தல்.

பொறுமையைப் பழகியே பொறுமையாக இருக்க வேண்டும். எதை மாற்ற முடியாது என்று தெரிகிறதோ அதைப் பொறுத்துக் கொள்ளும் அறிவைப் பழக வேண்டும். மாற்ற முடியுமெனில் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். மாற்ற முடியாத துன்பங்களை தவமாகப் பாவித்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தை தாங்கும் சக்தியுடையவனே பலமுள்ளவன்.

(நாயமாத்மா பலஹீனேன லப்யதே – இந்த ஆத்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை என்று கீதையில் பகவான் கூறுகிறார்.)

ஸ்ரத்தா

ஸ்ரத்தா என்பதற்கு நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று பொருள்.

எதில் நம்பிக்கை வேண்டும்?

குரு வேதாந்த வாக்யேஷூ விஸ்வாஸ: ஸ்ரத்தா

குரு மற்றும் வேதாந்த வாக்யங்களில் நம்பிக்கை வேண்டும். குருவினுடைய வார்த்தைகளும், சாஸ்திரத்தின் வார்த்தைகளும் சாட்சாத் ஈஸ்வரனிடமிருந்து வருகின்றன என்ற நம்பிக்கை வேண்டும். ஏற்கனவே தெரிந்த ஒன்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை, தெரியாத ஒன்றை அடையும் வரை அதன் மீது நம்பிக்கை வேண்டும்.

ஸ்ரத்தையே ஞானத்தின் முதல் படி. அறிவு வந்துவிட்டல் ஸ்ரத்தையின் தேவை இல்லை. ஸ்ரத்தையே ஞானமாகப் பரிமாணம் அடைகிறது.

“ஸ்ரத்தாவான் லபதே ஞானம்” என்கின்றது கீதை. 


வேதாந்த விஷயத்தில் ஞானம் ஏற்படும் வரை  ஸ்ரத்தை தேவை.

ஸமாதனம்               

ஸமாதனம் என்பது மன ஒருமுகப்பாடு ஆகும். அதாவது நம்முடைய இலட்சியத்தில் இருந்து விலகாமல், சித்தத்தை ஒருமுகமாக வைத்துக் கொள்ளுதல். யோக சாஸ்திரம் இதையே ஸமாதி என்கிறது.

தியானிக்க வேண்டிய பொருளில் இருக்க வேண்டிய மன ஒருமுகப்பாடே ஸமாதானம்” எனப்படுகிறது.

இந்த ஆறு பண்புகளையும் எவன் ஒருவன் கடைப்பிடித்து வாழ முற்படுகின்றானோ, அவனது வாழ்வில் நிச்சயமாக ஞானம் கிடைக்கப் பெற்று, என்றும் நிலையான மன மகிழ்ச்சியுடன் இருப்பான்.

முமுக்ஷுத்வம்

முமுக்ஷுத்வம் என்பது, மோக்ஷம் வேண்டும் என்கிற தீவிர ஆசை. இந்த விருப்பம் தீவிரமாக வளர்ந்து, மற்ற தேவையற்ற ஆசைகளை மறுத்து, மோக்ஷத்திற்காக மட்டுமே நம்மை தயார்படுத்துவது என்பதாகும்.

இந்த உடல், புலன்கள், மனம் போன்றவைகளை வைத்துக் கொண்டு “நான்” என்று தவறாக புரிந்துக் கொண்ட அறியாமையினால், பிறப்பு, வியாதி, மூப்பு, மரணம் போன்ற விளைவுகள உண்டாகின்றது. இதை ஞானத்தினால் மட்டுமே நீக்க முடியும். இந்த ஞானத்தின் வாயிலாக நான் சச்சிதானந்த ஆத்மா, நானே பிரம்மம் என்ற ஆனந்த அனுபவத்தில் நிலைத்து நிற்கின்றோம். இந்த நிலையில் எல்லாப் பிணைப்புகளும் அகன்று விடுகின்றன. இதைத்தான் “மோக்ஷம்” என்கின்றோம்.

வேதாந்த ஸாரம் – 4

அடுத்து, 6 வது செய்யுளில் வேதத்தினையும், வேதத்தின் அங்கங்களையும் பயின்று, அதன் வாயிலாக விரும்பிய பொருளை முற்பிறவிகளிலோ, அல்லது இப்பிறவியிலோ, அடையும் நோக்கத்துடன் இருப்பவனுக்கு அறிந்த விசயங்களில் உறுதியான அறிவு இன்றி, செய்கின்ற செயல்களினால் பயனில்லை என்றும், அன்றாடம் செய்கின்ற இறைவழிபாடு, பிராயச்சித்த செயல்களை ஒழுங்காகச் செய்து, நியமங்களை கடைப்பிடித்து, அதன் வாயிலாக, தூய்மையான மனதினை அடைந்து, நான்கு வித சாதனங்களைப் பெற்றுள்ள இயல்பான ஞானத்தைக் கொண்டவனே இதற்கு “அதிகாரி” என்றும் கூறுகின்றார்.

பிறகு 7 வது செய்யுளில் பயனை விரும்பும் கர்மமான சொர்கம், குழந்தைகள், செல்வம் போன்றவைகளை விரும்புவது ‘காம்ய கர்மம்’ என்றும், 8 வது செய்யுளில் தவிற்க வேண்டிய செயல்களான மது அருந்துதல், விபச்சாரம், பொய் பேசுவது, திருடுவது போன்ற செயல்களை ‘நிஷித்த கர்மம்’ என்றும், 9 வது செய்யுளில் சந்தியாவந்தனம், அக்னி ஹோத்ரம், காயத்ரி மந்திரம் போன்ற அன்றாட வழிபாடுகளை தினசரி செய்வதற்கு ‘நித்ய கர்மம்’ என்றும், 10 வது செய்யுளில் தனிப்பட்ட நோக்கம், அல்லது காரணத்திற்காகச் செய்கின்ற குழந்தைப் பிறந்தவுடன் செய்யப்படுகின்ற ஜாதேஷ்டியாகம், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பித்ருக்களுக்கு செய்யப்படுகின்ற சிரார்த்தம், தர்பணம் போன்ற கர்மங்களை ‘நைமித்திக கர்மம்’ என்றும், 11 வது செய்யுளில் ஒருவன் செய்த பாவத்தைப் போக்குவதற்கு சாஸ்திரத்தில் கூறப்பட்ட பாவத்தை அழிக்கக் கூடிய கர்மங்களைச் செய்வதை ‘பிராயச்சித்த கர்மம்’ என்றும் பல கர்மங்களை கூறியுள்ளார்.

அதன் பிறகு, 12 வது ஸ்லோலத்தில் சகுண பிரம்ம (உருவம் குணம் கொண்ட ஈஸ்வரன்) வழிபாடுகளில் அந்த இறைவனை குறித்த மனதினால் உபாஸிக்கின்ற மந்திர ஜபம், தியானம் போன்றவைகளினால் மனம் தூய்மையடைந்து, ஒருமுனைப்பாட்டைப் பெறும் பொழுது, அது நிர்குண பிரம்மத்தின் மீது நிதித்யாஸனம், செய்வதற்கு உறுதுணையாக அமைவது ‘உபாஸனை’ என்றும், கூறுகின்றார். அதனைப் பயிலும் பயிற்சிகளில் சாண்டில்ய வித்தை  என்ற வித்தையைப்பற்றி சாந்தோக்ய உபநிஷதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இதே சாந்தோக்ய உபநிஷத்தில் புருஷவித்தை, ஸம்வர்க வித்யை, சோடசகல வித்யை, உபகோஸலவித்யை, அக்ஷிபுருஷவித்யை, பஞ்சாக்னி வித்யை, பூம வித்யா, தஹர வித்யை என்ற அனேக வித்யைகள் காணப்படுகின்றன.

இந்த வித்யைகள் அனைத்துமே சகுண பிரம்ம உபாஸனைக்கு உறுதுணையாக பல இயல்புகளை விவரித்து, அந்த பிரம்மனே நம் உள்ளே வீற்றுள்ள ஆத்மா என்றும், அது அணுவைக் காட்டிலும் நுண்ணியதானதாகவும், மிகப்பெரியதை விடப் பெரியது என்றும், இத்தகைய சிரத்தை இருப்பவன் மரணத்திற்குப் பிறகு அதையே அடைகின்றான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் பிறகு 13 வது ஸ்லோகத்தில் நித்ய கர்மம் போன்ற அன்றாடம் செய்யும் கர்மங்களினால் உண்டாகும் பலனைக்கூறுகின்றார். நைமித்திக கர்மம் மற்றும் பிராயசித்த கர்மம் என்ற இரண்டையும் இந்த நாள்தோறும் செயும் கர்மங்களுடன் சேர்த்துக் கொண்டு இவைகளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பரம பிரயோஜனம் என்பது மனம் தூய்மையடைவது மட்டுமே ஆகும் என்றும், இந்த தூய்மையான மனதினால் காலப்போக்கில் மஹாவாக்கியங்களின் பொருளைக் கிரகித்துக் கொள்ளும் திறமை ஏற்படுகின்றது. இவ்வாறு கர்மத்தினால் மனம் தூய்மையடைகின்றது என்று அறியமுடிகின்றது.

இவ்வாறு நாள்தோறும் செய்யும் கர்மங்களினால், மனம் தூய்மையடைந்து மோக்ஷத்திற்கு அவனை எவ்வாறு அழைத்துச் செல்கின்றது என்பதை ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார் என்ற ஞானி தன்னுடைய நைஷ்கர்ம்யசித்தி என்ற நூலில் எப்படி அழகாக விவரித்துள்ளார் என்று காணலாம்.

“நித்யகர்மானுஷ்டானாத் தர்மோத்பத்தி: தர்மோத்பத்தே: பாபஹானி: தத:, சித்தசுத்தி: தத: ஸம்ஸாரயாதாத்மய அவபோத:, தத: வைராக்யம், தத: முமுக்ஷுத்வம், தத: ததுபாயபர்யேஷணம், தத: ஸர்வகர்ம தத் ஸாதன ஸன்யாஸ: தத: யோகாப்யாஸ: தத: சித்தஸ்யப்ரத்யகப்ரவணதா, தத: தத்வமஸ்யாதி வாக்யார்த்தபரிஞ்ஞானம், தத: அவித்யோச்சேத ததச்ச ஸ்வாத்மனி ஏவ அவஸ்தானம் ||”

‘நாள்தோறும் செய்யத்தக்க கர்மங்களை முறையாகச் செய்வதால் தர்மம் என்னும் நல்லபேறு தோன்றுகின்றது. இந்த நற்பேறு பாபத்தை அழிக்கிறது. அதனால் வாழ்க்கையின் உண்மையான இயல்பைக் குறித்த அறிவு ஏற்படுகிறது. அதனால் வைராக்கியமும், வைராக்கியத்தால் மோட்சம் அடையவேண்டும் என்னும் விருப்பமும் ஏற்படுகின்றது. அதனால், மோக்ஷத்திற்கான வழியை தேடுகின்றான். அதனால், எல்லா கர்மங்கள் மற்றும் எல்லா சாதனங்களையும் விட்டொழித்து, அதன்பிறகு யோகத்தை மேற்கொள்ளுவதும் ஏற்படுகின்றது. இதனால் மனம் உட்புறமாகத் திரும்புகின்றது. தத்வமஸி என்ற வேதாந்த மஹாவாக்கியங்களைக் குறித்த ஞானம் உண்டாகின்றது. அதன் வாயிலாக அறியாமை அகன்று தன் ஆத்மாவின் மீதே நிலை பெறுகின்றான்.’

அடுத்து 14 வது ஸ்லோகத்தில் நித்ய நைமித்திக கர்மங்களுக்கும், உபாஸனைகளுக்கும் முறையே பித்ருலோகம் (அதாவது மூதாதையர்கள் உலகத்தை அடைவது) மற்றும் ஸத்யலோகங்களை அடையும் பயன் கிடைக்கின்றது. கர்மத்தினால் பித்ரு லோகமும், உபாசனையினால் தேவலோகமும் கிடைக்கின்றது என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது.

வேதாந்த ஸாரம் – 3

செய்யுள் – 2

==============

அத்வயானந்தர் என்ற பெயரையுடைய குருவை பூஜித்து, இந்த வேதாந்த ஸாரத்தை நான் உணர்ந்து கொண்ட வகையில் எனக்கு என் அறிவிற்கு எட்டிய வகையில் விளக்க முற்படுகின்றேன். அதாவது, அந்த இரண்டற்ற ஏகனான குருவை நமஸ்கரித்து இந்த வேதாந்த ஸாரத்தைக் கூற முற்படுகின்றேன் என்கின்றார். இது இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பணிவையும், அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத கொள்கையையும் காட்டுகின்றது இந்த இரண்டாம் ஸ்லோகம்.

அடுத்து, வேதாந்தம் என்றால் என்ன என்பதின் பொருளை விளக்குகின்றார்.

வேதத்தின் இறுதிப்பகுதிகளாக உயர்ந்த உபதேசத்தில் ஞானத்தை அடைய இரண்டு வகையான பிரமாணங்களான பிரத்யக்ஷ ஞானம் ( நம்மிடையே உள்ள புலன்களைக் கொண்டு நேரடியாக அறிதல்), பரோக்ஷ ஞானம் (பிற வழிகளில் அறிதல்) என்ற வழிமுறைகள் உள்ளன என்றும், இதில் பிரத்யக்ஷம் என்பதை அனுமானம் (ஊகம்), ஆகமம் (வேதாகமம்), உபமானம் (ஒப்பீடு), அர்த்தாபத்தி (மற்றொன்றில் பொருத்திப் பார்த்தல்), அனுபலப்தி (உணரப்படாமை) என்ற ஐந்து வழிகளில் அறியலாம்.

ஆனால், இந்த வழிமுறைகளில் புலன்களுக்கு எட்டாத அந்த பரம்பொருளை அறிந்து கொள்ள வேதாகமம் என்ற வேதம் மட்டுமே பிரமாணம் என்று கருதி அதனை உபநிஷதங்களின் வாயிலாக அறிந்து கொள்வது மட்டுமே சாத்தியம் என்கின்றார்.

மேலும், இங்கு சாரீரக ஸூத்ரானி என்று கூறுவதும், ஜீவனின் (சாரீரகம் – ஜீவன்) உண்மையான ஸ்வரூபத்தை விவரிக்கும் வேதாந்த சூத்திரங்களான பிரம்ம சூத்திரத்தையும் பிரமாணமாக இந்த மூன்றாவது செய்யுளின் வாயிலாக அறிவிக்கின்றார்.

அடுத்து நான்காவதாக உள்ள செய்யுளில், சாஸ்திரத்தின் ஒரு பகுதியுடன் தொடர்புடைய பொருத்தமான நூலை பிரகரணம் என்று ஞானிகள் அழைக்கின்றார்கள். அப்படிப்பட்ட பிரகரண கிரந்தங்களில் உள்ள அனுபந்தமான அந்த நூலின் விசயம், தொடர்பு, மற்றும் பயன் என்பனவற்றை கூறி, அந்த நூலை கற்று அறிய விரும்பும் அதிகாரியையும், அந்த பொருளை (விசயத்தை) புரிந்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் உண்டாகும் பிரயோஜனம் போன்றவற்ற சம்பந்தம் என்று ஐந்தாவது செய்யுளில் தெளிவு படுத்துகின்றார்.

வேதாந்த ஸாரம் – 2

மங்கலாசரணம்

இப்படிப்பட்ட உயர் ஞானத்தை அடைந்து, அந்த பிரம்ம ஸ்வரூபமாகவே தன்னில் தானாய் கரைகின்ற அந்த சரணாகதி நிலையை அடைவதை அறிவிக்கும் பிரமாணமான இந்த வேதாந்த ஸாரம் என்ற புத்தகம் தங்கு தடையின்றி நிறைவேறவும், புத்தகத்தைப் படிக்கின்ற அனைவரும் அந்த ஆத்மானுபவத்தைப் பெற வேண்டி முதல் செய்யுளின் வாயிலாக மங்கலாசரணம் செய்கின்றார் இந்த நூலாசிரியர்.

செய்யுள் – 1

===========

அகண்டமாக உள்ளவனும், ஸத் – சித் – ஆனந்த வடிவானவனும், சொல், மனம் இவைகளுக்கு எட்டாதவனும், அனைத்து அண்ட சராசரங்களுக்கும், அதில் காணப்படுகின்ற அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவனும் ஆகிய ஆத்மவை என்னுடைய இந்த விருப்பமானது ஈடேற வேண்டும் என்பதற்காகச் சரண் அடைகிறேன்.

இங்கு அவர் குறிப்ப்டுகின்ற ஆத்மாவானது புலன்களுக்கு எட்டாதது என்பதினால் அதை விவரிக்க சொற்கள் இல்லை. அதை எப்படிப்பட்டது என்று எண்ணுவதற்கு எண்ணங்களும் இல்லை. அப்படிப்பட்ட ஆத்மாவை உபநிஷதங்கள்

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ |”

அதாவது யாரை அடையமுடியாமல் மனமும், வாக்கும் திரும்புகின்றனவோ அவரே இறைவன் ஆவார் என்கின்றது. (தைத்திரிய உபநிஷதம் – 2/4, 2/9).

“நைவ வாசா ந மனஸா ப்ராப்தும் சக்யோ ந சக்‌ஷுஷா |”

அதாவது, வாக்கினாலோ, மனதினாலோ, கண்களினாலோ அந்த பரம்பொருளை அடைய முடியாது. (கட உபநிஷதம் – 2/3/12).

அப்படியானால், இதிலிருந்து ஒன்றை அறிய முடிகின்றது. அதை அடைவது என்பதை விட அதுவாகவே இருக்கின்றாய் என்பதே இங்கு சரியாக இருக்கும்.

இதைத்தான் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர்

“மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி கணா இவ |”

என்பதை, ஒரு சரட்டினால் கோர்க்கப்பட்ட மணிகள் எப்படி ஒன்றை ஒன்று இணைத்துக்கொண்டு, ஒரு மணி மாலையாக காட்சியளிக்கின்றதோ, அதுப்போல, இந்த உலகம் அனைத்தும் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.

அதாவது அந்த மணி மாலைக்கு ஆதாரம் எப்படி அந்த சரடோ, அதுப்போல, இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமே அந்த பரமா(ஆ)த்மா என்று விளக்கம் கிடைக்கின்றது.

அடுத்து குருவை நமஸ்கரிக்கின்றார்.

வேதாந்த ஸாரம் (ஸ்ரீ ஸதானந்தர்) – 1

புருஷார்த்தம்


பரம்பொருள், உலகம், மனிதன் என்ற இந்த மூன்றிற்குமான தொடர்புகள்!

வேதாந்த ஸாரம்

முன்னுரை

இந்த உலகில் எத்தனையோ விதமான ஜீவராசிகள் இருக்கின்றன. இவைகளின் அன்றாட செயல்களை கவனித்தோமானால், உணவு, உறக்கம், பயம், இனப்பெருக்கம் போன்ற அத்யாவசியச் செயல்களைச் செய்து வாழ்கின்றன.

ஆனால் மனிதனால் மட்டுமே தன்னுடைய புத்தி சக்தியைக் கொண்டு திட்டமிட்டு செயல்களைச் செய்ய முடியும். அவனது செயலின் சிறப்பே அவனிடம் உள்ள ஆறாவது அறிவு ஆகும்.

இந்த அறிவின் வாயிலாக அவன் வாழுகின்ற வாழ்க்கைக்கு “புருஷார்த்தம்” என்று பெயர். அதாவது, அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கினுள் ஏதாவது ஒன்றில் மனிதனுடைய செயல் நிச்சயமாக அடங்கும்.

இதில் மனிதன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அவன் நாடும் உணவு, உடை, வசிக்க இருப்பிடம் போன்றவற்றை  நாடிச்செல்வதை பொருள் தேடி செல்வதாகவும், தன்னைப்போன்றே தன்னைச் சார்ந்தவர்களுக்கு செய்கின்ற உதவிகளை அறச் செயல்களாகவும், இந்த செயல்களினால் அடைந்த திருப்தியில் உண்டாகும் சிறு, சிறு சந்தோஷங்களை இன்பம் என்றும் வைத்துக்கொண்டு வாழும் மனிதன் தன்னுடைய புருஷார்த்தங்களில் கூறப்பட்டுள்ள இறுதி நிலையான வீடுபேறு என்பதை அறிய மறுப்பது ஆச்சரியமாக உள்ளது.

ஆனால், சாஸ்திரம் இந்த நான்கில் இறுதி நிலையான வீடுபேறு என்பதை என்ன என்று அறிந்துக் கொண்டு அந்த மோக்ஷத்தின் பாதையில் பயணம் செய்வானாகில் அவன் வாழுகின்ற வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும், வாழ்ந்து முடித்த வாழ்க்கை அனைவராலும் வாழ்த்துகின்ற வாழ்க்கையாக அமையும்.

அந்த வாழ்க்கைக் கல்வியைத்தான் இந்த வேதாந்தம் அறிவுறுத்துகின்றது.

ஆனால். இந்த வாழ்க்கைக்கல்வியில் பலவிதமான பாகுபாடுகள் காணப்படுகின்றன. கல்வி முறையில் எத்தனையோ தத்துவங்கள் உள்ளன. அவைகள் பரம்பொருள், உலகம், மனிதன் என்ற இந்த மூன்றிற்குமான தொடர்புகளை அலசி ஆராய்கின்றது.

அந்த வகையிலே பாரத நாட்டில் புகழ் பெற்ற ஆறு தரிசனங்களான நியாயம், வைசேசிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்ஸா, மற்றும் உத்தர மீமாம்ஸா என்பனவாகும்.

இதை பூர்வ மீமாம்ஸம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்ஸம் (ஞான காண்டம்) என்று இரு காண்டங்களாக பிரித்துள்ளனர்.

பூர்வ மீமாம்ஸம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும்.

உத்தர மீமாம்ஸத்தை தொகுத்தவர் வியாசர். நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள  வேதாந்தங்களான  உபநிடதங்களை  உத்தர மீமாம்ஸம் என்பர்.

வேதாந்தம்  என்பது வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும்.

ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு.

அவை மந்திரங்கள்பிராமணங்கள்ஆரண்யகங்கள்உபநிடதங்கள் ஆகும்.

வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான ஆரண்யகம் மற்றும் உபநிடதங்களை கொண்டது.

வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை.

வேதாந்தத் தத்துவத்தின் தனிப்பண்பு, இது மனிதச் சார்பற்றது என்பது. எந்த ஒரு தனிமனிதனோ, மகானோ இதனை நிறுவவில்லை. மேலும் எந்த தனி மனிதனை மையமாக வைத்தும் பின்னப்படவில்லை. எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. வேதாந்தம் கூறும் அடிப்படை உண்மை மனிதன் தெய்வீகமானவன் என்பது ஆகும்.

வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களையும் மதிக்க வேண்டும் என்பது வேதாந்தத்தின் தனிச் சிறப்பு. மேலும் ஜாதிமுறை வேதாந்தத்திற்கு முரணான ஒன்று.

ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது.

ஆனால் இந்த நம்பிக்கை நான் என்ற இந்த உடல் சார்ந்தது அல்ல. அதையும் கடந்த அனைத்து ஜீவர்களுக்கும் ஆதாரமான ஆத்மா ஒன்றையே “நான்” என்று காண்கின்றது. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் அத்வைத கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள்.

இந்த வேதாந்த சாஸ்திரத்திற்கு பல ஆச்சாரியர்கள் விளக்க உரை எழுதியுள்ளனர். அந்த வகையிலே அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பல பாதைகளில் வந்த ஆச்சாரியார்கள் அவரவர்களுக்கு பிடித்த பாதையில் இருந்துகொண்டு விளக்கம் கொடுக்கும் பொழுது, சில விசயங்கள் முரண்பாடுகள் போல காணப்படும்.

ஆனால், இதில் அத்வைத வேதாந்தமானது மட்டுமே விஞ்ஞானம் சார்ந்த அதனுடைய தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்புகளால் நம் நாட்டில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் உள்ளவர்களை ஈர்க்கும் வல்லமை பெற்று திகழ்கின்றது.

இந்த அத்வைத சாஸ்திரம் ஸ்ரீ கௌடபாதர், ஸ்ரீ சங்கரர் போன்ற மஹான்களின் வாயிலாக 14 நூற்றாண்டுகள் முதற்கொண்டு இன்று வரை தங்கு தடையின்றி அனைவருக்கும் சென்று சேர்க்கப்படுகின்றது.

அத்வைத சம்பிரதாயத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இயற்றப்பட்டாலும், அவற்றில் மிக முக்கியமாக உபநிஷதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் என்ற மூன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு கையாளப்படுகின்றது. அதனால், இதை “பிரஸ்தான த்ரயம்” என்று நம் முன்னோர்கள் அழைத்தனர்.

இந்த நூல்களுக்கு விளக்க உரையாக அனேக நூல்கள் திகழ்கின்றன. அவைகளை “பிரகரண கிரந்தங்கள்” என்று அழைத்தனர். அந்த வரிசையில் ஸ்ரீஸதானந்தர் எழுதிய இந்த “வேதாந்த சாரம்” என்ற நூலும் மிகவும் உயர்ந்த, சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

இவரே “அத்வைத பிரம்ம ஸித்தி” என்ற நுலையும் எழுதியுள்ளார். ஆனால், இந்த நூலாசிரியரைப்பற்றி அதிக விளக்கங்கள் காணப்படவில்லை. ஆயினும் நாம் அவற்றை ஆராயாமல், இந்த நூல் கூற வருகின்ற கருத்துக்களை மட்டுமே காண வேண்டும்.

இந்த வேதாந்த ஸாரம் என்ற நூலிற்கு ஆறு விளக்க உரைகள் காணப்படுகின்றன. 1. ஸ்ரீ அபதேவர் எழுதிய பாலபோதினீ, 2. ஸ்ரீ நரசிம்ஹ ஸரஸ்வதி எழுதிய ஸுபோதினீ, 3. ஸ்ரீ இராமதீர்த்தரின் வித்வன் மனோரஞ்சினீ, 4. வேதாந்த ஸாரடீகா, 5. வேதாந்த ஸாரடிப்பணீ மற்றும் 6. ஸ்ரீ இராமசந்திரானந்த ஸரஸ்வதி எழுதிய “வேதாந்த ஸாரவ்யாக்யா” என்பனவாகும். இதில் 4, 5 என்ற இரண்டு நூல்களையும் எழுதியவர்கள் தெரியவில்லை.

வேதாந்த தரிசனமானது (தத்துவமானது) பிரம்மத்தைக் குறித்து விவரிப்பதுடன் மட்டுமின்றி, அந்த பிரம்மத்தை அடையத்தக்க வழியையும் காட்டுகின்றது. இதனை அறிந்துகொள்ள விரும்புகின்ற சாதகர்கள் வேத அத்யயனம் செய்து, வழிபாட்டு முறைகளையும் மேற்கொண்டு, மனதினை தூய்மை செய்துக் கொள்ள வேண்டும்.

தூய்மையான மனதினால் மட்டுமே விவேகம், வைராக்கியம் போன்ற உயர் பண்புகளும், சம:, தம: முதல் முமுக்‌ஷுத்துவம் போன்ற ஆறு சம்பத்துக்களும் உண்டாகும்.

இதில் நித்திய, அநித்திய வஸ்து விவேகம் முதலில் உண்டாகவேண்டும். இதன் பலனாக மோக்ஷத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டாகின்றது. இந்த ஆசையின் உந்துதலினால், அவன் உயர்ந்த குருவை தேடிக் கண்டுகொண்டு, அவரின் வாயிலாக சிரவண, மனன, நிதித்யாஸனம் செய்து அஞ்ஞானத்தினை நீக்கி தெளிந்த ஞானத்தை அடைந்து, அவனது பிராரப்த கர்மம் முடிவடைகின்ற காலம் வரை ஜீவன் முக்தனாக இருந்துவிட்டு, இந்த உடல் வீழும் போது விதேக முக்தியை அடைகின்றான்.