ஆத்ம நிச்சயம்

now browsing by category

 

ஆத்மநிச்சயம் (பகுதி – 7)

உண்மையில், ஜீவாத்மாவே பரமாத்மாதான். ஆனால், இதை உணராதவனுக்கு ‘துவம்’ என்ற பதத்திற்கு விளக்கம் தெரிந்து கொள்ளாமல் சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுகின்றான்.

இவன் பரமாத்மாவை மற்ற வஸ்துக்களைப் போன்று தனக்கு வேறானதாகவும், சரீரத்தினால் அறியப்பட வேண்டியது போலவும் எண்ணுகின்றான். ஆத்மா இவனுக்கு பிரத்யக்ஷமாக தோன்றுவதில்லை. அனாத்மாவான சரீரம்தான் பிரத்யக்ஷமாக தோன்றுகின்றது.

இது எப்படியென்றால், மஞ்சள்காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றது. ஆனால், இவன் காணும் வஸ்துக்கள் மஞ்சள் நிறத்தில் இல்லை. அது இவனது கண்ணின் குறைபாடாகும்.

அதுபோன்று, இவனுக்கு தன்னுள் இருக்கும் சைதன்யம் எங்கோ வெளியில் இருப்பது போன்று தெரிகின்றது.

மோக்ஷம் அடைய விரும்புபவனுக்கு ஆத்மா, அனாத்மா இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாச அறிவும், வேத வாக்கியமும் சேர்ந்துதான் ஞானத்தைக் கொடுக்கும். ஆத்ம, அனாத்ம விவேகம் மட்டும் இருந்தால் போதாது. அனுமானத்தினால் புத்தி, அந்தக்கரணம் போன்றவைகள் ஆத்மா அல்ல என்று மட்டுமே அறிந்துகொள்ள முடியும். முடிவான ஞானம் பெறுவதற்கு இது போதாது. சுருதி வாக்கியம் மட்டுமே (தத்துவமஸி) அதைக்கொடுக்கும்.

வேதவாக்கியத்தை பிரமாணமாக ஏற்காமல், அனுமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆதாரமாக எண்ணினால், லக்ஷியத்தை அடையாமல், கஷ்டமான நிலையும் உண்டாகும்.

உதாரணமாக, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் வேதத்தை ஏற்காமல், அனுமானத்தையும், புத்தியையும், யுக்தியையுமே மட்டும் ஆதாரமாக ஏற்றதினால், ஆத்மாவே கிடையாது என்றும், சூன்னியம் மட்டுமே எஞ்சியுள்ளது என்ற தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர்.

வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது என்ற ஞானம் இவர்கள் வேதத்தை அறியாததினால் தெரியாமல் போனது பரிதாபத்திற்கு உரியது.

ஆத்மாவுக்கு துக்கம் என்பதே கிடையாது. அது சிருஷ்டிக்கப்பட்டவைகளைச் சேர்ந்தது அல்ல என்ற உண்மை வேறு எங்கு இருந்தும் பெறமுடியாது என்று வேதமே கூறுகின்றது. இதை தவறு என்று கூறவோ, மறுக்கவோ முடியாது. ஆகவே வேதம் நம்பத்தகுந்த பிரமாணம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்படிப் பிரமாணங்களினால் அனாத்மாக்களைப் பற்றிய சந்தேகங்களெல்லாம் நீக்கப்பட்டபின் சுருதி வாக்கியத்தில் எவ்வித சந்தேகமும் ஏற்பட இடமில்லை. அறிவிற்குப் புலனாகும் உலகத்தைப் பொருத்து மட்டுமே சந்தேகம் ஏற்பட வாய்புண்டு. ஆனால், ஆத்மாவை அறிந்த பின் அறிவுக்கு விசயமாகும் இதர வஸ்துக்களே இல்லை என்று ஏற்பட்டபின் வேதவாக்கியத்தில் கூறியிருக்கும் விசயத்தில் சந்தேகம் ஏற்பட நியாயமே இல்லை.

உண்மையில் சந்தேகத்திற்கு காரணமாக உள்ள பொருள் ஆத்மாவாக இருக்க முடியாது. வேதவாக்கியம் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது. ஆனால், நமக்கு அந்த தத்துவார்த்தம் விளங்கவில்லையே என்றால், அதற்கு வேதம் காரணமில்லை. நாமேதான் காரணம் ஆகும்.

இதற்குக் காரணம் ஏற்கனவே கூறப்பட்ட உவமானத்தினைப் போன்றே மஞ்சள் காமாலை வந்தவனுக்கு அனைத்தும் மஞ்சளாகத் தெரிவது போன்று, இவனது புத்திக் குறைவினால், இவனால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதே ஆகும்.

மேலும் வேதத்தின் தத்துவார்த்தம் (அபரோக்ஷானுபூதி) அதற்கு யோக்கியதை உடைய உத்தம அதிகாரிக்கு மட்டுமே புலப்படும். ஆகவே நாம் நம்மை உத்தம அதிகாரிகளாகச் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி சாதன சதுஷ்டயம் அறிய வேண்டும்.

பொதுவாக, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹா வாக்கியத்தின் உண்மைப்பொருள் அஹம் என்பது அந்த ஆத்மாவைக் குறிக்கின்றது. அதைவிடுத்து,  நான் என்று இந்த உடலை நினைத்துக் கொண்டிருக்கின்றவன் மஹா வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாமல், நானோ ஒரு வரம்பிற்குட்பட்டவன், துக்கமுடையவன் என்பதினால் நான் (அஹம்)  எப்படி பிரம்மம் ஆக முடியும் என்ற சந்தேகம் உண்டாகலாம்.

ஆனால், வேதவாக்கியம் ஆதீதமான ஆத்மாவைக் குறிக்கின்றது. அதனால், எண்ணுபவன், எண்ணம், எண்ணப்படுகின்ற வஸ்து ஆகிய இந்த மூன்றும் அடங்கிய இந்த உலகமும், மாறுதலுக்கு உட்படாத ஆத்மாவும் வெவ்வேறு என்று வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஆத்மாவைத்தான் வேதம் தத்வமஸி என்றுபோது குறிப்பிட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சுகமும், துக்கமும் மாறுதலுக்கு உட்பட்டவையே, இவைகளுக்கு மீறி எது இருக்கின்றதோ அதுவே அறிவு மயம், ஆனந்த ஸ்வரூபம், அந்த பரப்பிரம்மம், இதுவே சுருதியின் தாத்பர்யம் ஆகும்.

வேதப்பிரமாணத்தினை வைத்து இந்த மஹாவாக்கியத்தின்படி ஏற்றுக் கொள்ள முடியாது என்பவர்கள் கருத்துப்படி, புதிய பிரமாணங்களின் வாயிலாக நிருபிக்கப்படவேண்டும் என்று எண்ணினால், அதற்கு செய்கை தேவை. அப்படிப்பார்க்கின்ற பொழுது, செய்கைக்கு ஆசை தேவை, ஆத்மா நமக்குள்ளேயே இருப்பதினால், அது எங்கோ வெளியில் இருப்பதைப் போன்று அதற்கு ஆசைப்பட்டு, காரியத்தை செய்ய முடியாது. ஏனெனில், ஆத்மா வேறு எதனாலும் அறியக்கூடிய வஸ்து இல்லை.

ஆத்மா பார்க்கப்பட முடியாதது, அளவிடப்பட முடியாதது, இந்திரியங்களுக்கு லக்ஷியமாக முடியாது. பிரத்யக்ஷ அறிவிற்கு விசயமாகாது. தேசம், இடம், காலம் முதலியவைகளை மீறியது. ரூபமற்றது, ஸ்வயம் பிரகாசமானது. ஆகையால்தான் வேதம் பார்க்கும் சக்தியை, பார்ப்பவனை நாம் பார்க்கமுடியாதுஎன்றது.

அனுமானத்தினாலும் ஆத்மாவைக் காணமுடியாது. அனுமானம் உண்டாக வேண்டுமானால், எண்ணப்படுகின்ற வஸ்துவுக்கும், எண்ணத்திற்கு காரணமான வஸ்துவுக்கும் சம்பந்தம் நேரிடையாக இருக்க வேண்டும். அப்படியான நேரிடைப்பார்வை வெளியில் உள்ள தனிப்பட்ட வஸ்துவைப் பொருத்துத்தான் முடியும். ஆத்மாவைப் பொருத்து இவ்விதம் ஊகங்கள் செய்ய முடியாது.

பிரத்யக்ஷம், அனுமானம் முதலிய பிரமாணங்களினால் வரும் அறிவு ஆத்மாவிற்கு வெளியான வஸ்துக்களைப் பொருத்தது. அவைகளைப் பொருத்துத்தான் அறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆகவே, இதர அறியும் கருவியோ, காரணங்களோ, இல்லாமலேயே தானாகவே ஆத்மாவைப் பற்றிய இரண்டற்ற நிலை விளங்கக்கூடியது.

இருத்தல், இல்லாமை என்று மேலே கூறப்பட்ட சோதனைகளினால் சரீரம், இந்திரியங்கள், பிராணவாயு இவைகள் ஆத்மாவல்ல என்று தெரிந்துக் கொண்ட பிறகு நமக்குள் நான் யார்? என்ற கேள்வி பிறக்கின்றது. அப்போது வேதம் கூறுகின்றது தத்வமஸி, (நீ அதுவாக இருக்கின்றாய்) என்று.

ஆத்மாவிற்கும், அனாத்மாவிற்கும் வித்தியாசம் நன்கு அறிந்தவனுக்கு ‘தத்வமஸி’ என்ற வேத வாக்கியத்தின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது, நம்முடைய சரீரமும், இந்திரியங்களும், மனம் போன்ற அந்தக்கரணமும் அறியப்படக்க்கூடியவை. ஆகவே, இவைகள் அறிபவனை விட வேறானவை. எவைகள் உண்டாகின்றனவோ, இருக்கின்றனவோ, மாறுபாட்டையும், நாசத்தையும் அடைகின்றனவோ அவைகள் எல்லாம் அனாத்மாவே ஆகும்.

இப்படி மாறிக்கொண்டு வரும் வஸ்துக்களின் ஆரம்பத்தையும், முடிவையும் அறியும் சாக்ஷியானவர் தனக்கு எவ்வித மாறுதலும் இல்லாமல், இதர வஸ்துக்களிடமிருந்தும் வேறுபட்டவராவார்.

மனிதர்களின் இந்திரியங்களினால் அறியப்படுகின்ற வஸ்துக்கள் அனைத்துமே அனாத்மா ஆகும். இப்படிப்பட்ட அனாத்மாவான வஸ்துக்கள் வந்துக்கொண்டும், போய்க்கொண்டும் இருக்கின்றன. இவைகளின் வருகையையும், போவதையும் பார்ப்பவன் வேறு. ‘நான்’ என்ற அஹங்காரமும், ஆத்மாவும் ஒன்றாகாது.

ஆத்மநிச்சயம் (பகுதி – 6)

இவ்வாறு, வேதாந்தத்தின் சித்தாந்தத்தில் இரண்டு முடிவான விசயங்கள் உள்ளன. அவைகள், 1. ஆத்மா, 2. அனாத்மா என்பனவாகும்.

இதில், ஆத்ம, ஆனாத்ம பேதத்தை மட்டும் அறிந்தால் போதாது, ஆத்மாவைத் தவிர மற்ற அனாத்மாக்கள் அனைத்துமே உண்மையல்ல. அவை கற்பிக்கப்பட்டவைகள் என்ற ஞானம் அவசியம். ஆத்மா மட்டுமே சத்தியம் என்ற அத்வைத ஞானமும் உண்டாக வேண்டும். இதைத்தான் வேதத்தின் மஹாவாக்கியங்கள் உண்டு பண்ணுகின்றன.

இதிலே சாங்கியர்கள் அனாத்மாவான இந்த பிரக்ருதியை மித்யா என்று ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது இந்த அஞ்ஞானம் அவர்களை பிரம்மத்தை அறிய தடையாக உள்ளது.

இந்த ஆத்மா, அனத்மா என்ற இரண்டில் அஞ்ஞானம் (அறியாமை) எதனுடன் சேர்ந்தது என்று பார்த்தால், பெரும்பாலனவர்களின் நினைப்பு அறியாமையே அறியாமைக்குக் காரணம் என்பதாகும்.

ஆனால், இங்கு ஒரு உண்மை நன்கு புலப்படவேண்டும். அதாவது அறியாமையே அறியாமைக்கு காரணமாக எப்படி இருக்க முடியும். அதாவது, இல்லாமையிலிருந்து இந்த உலகம் எப்படி உண்டாக முடியும்? ஒன்றுமில்லாத சூன்யத்திலிருந்து ஏதாவது உண்டாக முடியுமா? என்று வேதமே கேள்வி கேட்கின்றது.

இங்கு அறியாமை என்றால், அறிவு இல்லை என்ற அர்த்தம் கொள்ளக்கூடாது. இது ஒரு இருத்தலேயன்றி இல்லாமையல்ல. கனவு காணாத ஆழ்ந்த தூக்கத்தின் போது, ஒரு வஸ்துவையும் நாம் அறிவதில்லை. அதனால், இதை அறியாமை என்று கூறிவிட முடியாது. இது ஒரு இருத்தலையே காட்டுகின்றது. அது எப்படியென்றால், ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன், நான் நன்றாக தூங்கினேன் என்று கூறினான் என்றால், அவன் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினான் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லாமை என்பது ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். அதாவது, ஒரு புத்தகம் இந்த அறையில் இல்லை என்று கூறுவது, அந்த புத்தகத்தையும், அந்த அறையையும் அறிந்தவனால் மட்டுமே அப்படிக் கூறமுடியும். ஆழ்ந்த துக்கத்தில் அப்படிப்பட்ட ஒரு பொருளையோ, அறையையோ ஒருவன் உணர்வதில்லை. உணர்வது என்றால் அவனது தூக்கம் கலைந்துவிடுமே!, ஆகையால், தூக்கத்திலுள்ள அறியாமை அறியாமையின் வெளிப்பாடு என்று கூறமுடியாது. அதாவது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை என்பதினால் அறிவே இல்லை என்று நினைப்பது தவறு ஆகும்.

ஒருவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் சில ஞாபகத்திற்கு இல்லாமல் போகலாம், அதனால், அவனுக்கு அறிவு இல்லை என்று கூறமுடியுமா?

அதனால், அறியாமை (அஞ்ஞானம்) என்பது அறிவின் இல்லமை என்று கூறிவிட முடியாது. அது ஒரு வஸ்து இருத்தலையே குறிக்கின்றது. ஆழ்ந்த தூக்கத்தில் எல்லா வஸ்துக்களைக் குறித்தும் அறிவின்மை இருக்கின்றது. ஆனால், அந்த வஸ்துக்களுக்கு தனியாக இருத்தல் என்ற நிலை கிடையாது. இதிலிருந்து ஆத்மஸ்வரூபமானது கூட அஞ்ஞானத்தினால் தோற்றுவிக்கப்படுகின்றது என்பதை அறியலாம்.

இதை மேலும் ஒரு உதாரணத்தின் வாயிலாக அறியமுற்படலாம்.

ஆகாசம் எங்கும் நிறைந்து இருக்கின்றது என்பதற்காக ஒரு பானைக்குள் இருக்கும் ஆகாசமும், பானைக்கு வெளியே உள்ள அறையில் இருக்கும் ஆகாசமும் ஒன்றாகி விடாது. அதன் இருப்பு நிலை இடத்திற்கு தக்கதாக மாறி அமைகின்றது. காரணம் பானை சிறியது, அந்த அறை பெரியது. ஆகவே இரண்டும் ஒன்று என்று எப்படிக் கூறுவது? என்ற சந்தேகம் வரும். இங்கு குடத்தில் உள்ள ஆகாசமும், அறையில் உள்ள ஆகாசமும் குணத்தால் ஒன்று, ஆனால் இருத்தலினால் வேறுபடுகின்றது என்பது புரிகின்றது.

அதுப்போல, தத்வமஸிஎன்ற வாக்கியத்தினால் ‘தத்’ என்ற பதத்திற்கு கண்ணுக்குத் தெரியாத அந்த பிரம்மத்தையும், ‘துவம்’ என்ற பதத்திற்கு கஷ்டத்தை அனுபவிக்கும் மனிதனையும் குறிக்கும்பொழுது, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையான சேதனத்தத்துவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய, அந்த சேதன தத்துவத்தின் இருப்பிடத்தைப் பார்த்து, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று அர்த்தம் செய்துக் கொள்ளக்கூடாது.

உண்மையில், அந்த சேதனத்தத்துவத்தின் இருப்பிடமான மனிதன் துக்கங்களற்ற ஆனந்த ஸ்வரூபி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மா என்பது சுத்த சின்மயமானது. இதுவே, ஜீவனிடத்தில் பிரகாசிக்கின்றது. இந்த பிரகாஷமான சைதன்யத்தின் பிரதிபிம்பமே அந்தக்கரணத்தில் பிம்பித்து அறிவைக் கொடுக்கின்றது. அந்த அறிவுக்காரணமான சேதன தத்துவம் மனிதனிடத்தில் இல்லாவிட்டால், அவனால், நான் நன்றாக தூங்கினேன்என்றும் ஆழ்ந்த தூக்கத்தில் என் அருகே என்ன நடந்தது என்பதுக்கூட எனக்குத் தெரியாது என்று கூறவே முடியாது. இதிலிருந்து அறியாமைக்கூட அந்த சேததத்துவத்தின் அறிவின் வாயிலாக மட்டுமே பிரதிபிம்பிக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நீ அதுவாகவே இருக்கின்றாய் என்ற வாக்கியத்திலுள்ள நீ என்று கூறப்பட்ட அந்தக் காரண விருத்தியுடன் கூடிய ஜீவனுக்கு, ஆதாரமாக உள்ள ஆத்ம சைதன்யத்தைக் குறித்தே இரண்டிற்கும் ஒற்றுமை கூறப்படுகின்றது என்பதை அறிய வேண்டும்.

மேலும், அந்தக்கரணத்திற்கு (புத்திக்கு) தானாக அறியும் சக்தி உண்டு. இந்த அம்சத்தில் இதற்கும், ஆத்மாவிற்கும் சாமான்யமான ஒற்றுமை இருக்கின்றது. சில வேற்றுமைகளும் இருக்கின்றது. மனது பலவிதமான வஸ்துக்களின் தன்மைகளை அதனதன் ரூபங்களினால் அறிகின்றது. ஆனால், ஆத்மாவோ எந்தவிதமான மாறுதலுமில்லாமல் ஸ்வயம் ஜோதி பிரகாசமாக இருக்கின்றது. மேலும் அந்தக்கரணங்களினால் உண்டாகும்  அறிவு அந்தந்த வஸ்துவைப் பொருத்தமட்டில் உள்ளே ஏற்படுவதுதான், ஆனால், ஆத்மா விசயத்திலோ எந்த விதமான வரம்பிற்கும் உட்படாமல், அகண்டமான ஸ்வயம் பிரகாசமான அறிவு ஆகும்.

மனம் எதை உணர்கின்றதோ, அதைப்பொருத்தமட்டில் மட்டுமே அறிவு உடையதாக இருக்கின்றது. இந்த அறிவு ஏற்படும் அம்சத்தில் இந்த அறிவு ஆத்மசைதன்யத்திற்கு சமமானது என்று கூறலாம்.

புத்தியின் விசயத்தில் அறியப்படும் பொருள், அறியும் தன்மை இரண்டிலும் வித்தியாசத்தைக் காணலாம். ஆனால், ஆத்மாவிடத்திலோ அது ஸ்வயம்ஜோதி ஆனதாலும், சாசுவதமானதாலும், ஸர்வவியாபியானதாலும், மேலே கூறப்பட்ட பேத அம்சங்களை அதில் காணமுடியாது.

இதில் இந்த புத்தி நான் என்ற நிலையில் சில சமயம் மறைந்து விடுகின்றது. உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் புத்தி வேலை செய்யாது. ஆனால், சாக்ஷியாக சைதன்யம் மட்டுமே உள்ளது. ஆகவே, புத்திக்கும், சைதயத்திற்கும் வித்தியாசத்தை நாம் உணரலாம். ஆத்மா சுத்த ஞான மயமானது. எப்போதும் உள்ளது. ஆகையால், அதில் காண்பது, காணப்படுவது என்ற வித்தியாசமே கிடையாது.

ஆத்மா சின்மயமானது, முக்காலத்திலும் உள்ளது. ஆகவே, அதற்கு இரண்டாவதாக ஒரு வஸ்துவே கிடையாது. மனது ஆத்மாவின் அறிவை பெற்றுக்கொண்டு பிரதி பிம்பிப்பதால், அதனால், தானாக அறியும் சக்தி கிடையாது. மேலும் மனது நாசத்தை உடையது, அது ஆத்மாவைப்போல சாசுவதமானதல்ல.

அதுபோலவே, அந்தக்கரணத்தின் அறிவு நிலையும் அந்தந்த வஸ்துவைப் பொருத்து அந்தந்த சமயத்தில் மட்டுமே ஏற்படுகின்றது. ‘நான் புத்தகத்தை அறிகின்றேன்’, ‘நான் சுகமானவன்’, ‘நான் துக்கமானவன்’ என்று சமயம்வெவ்வேறானவை.

வெளித்தோற்றத்தை அளிக்கும் சரீரத்தினடத்தில் உள்ள புலன்களைக் கொண்டு அறிந்தே மனமானது செயல்படுகின்றது. ஆனால், ஆத்மாவின் வியாபகம் ஆகாசம் போன்று எங்கும் பரவிக்கிடக்கின்றது.

புதியதாக அனுபவமோ, அல்லது அபிப்பிராயமோ ஏற்படும் போது மனது அறிகின்றது என்கின்றோம். ஆனால், ஆத்மா தானே அறிவு மயமானது. அதனால், புத்தியினால் உண்டாகும் அறிவுக்கு சந்தர்பங்களும், காரணங்களும் உண்டு. ஆத்மாவி அறிவுக்கு எந்தக் காரணங்களும் இல்லை. அது ஸ்வயமாக எப்போதும் இருக்கின்றது.

உதாரணமாக, நம்முடைய மனதில் தோன்றும் எண்ணங்கள் சில அனுகூலமாகவும், சில பிரதிகூலமானதாகவும் இருப்பதினால், அதை ஒப்புக்கொள்ளவும், தள்ளவும் முடிகின்றது. இதில் ஒப்புக்கொள்ளவு, தள்ளவும் வேண்டும் என்று தீர்மானிக்கின்ற மாறுதலுக்கு உட்படாத ஒரு பேரறிவு இருக்கவேண்டுமல்லவா? அதனால்தான் பேரறிவு இருக்கின்றது, அது மனதிற்கு அப்பாற்பட்டது.

இப்படி மாறுதலை அடையும் வஸ்துக்கள் அனைத்துமே அனாத்மா என்று தத்வமஸி என்ற மஹாவாக்கியம் உணர்த்துவதுடன், சிருஷ்டிக்கு காரணம் அஞ்ஞானமே என்றும், அந்த அஞ்ஞானத்தை அறியவைப்பது ஆத்மஞானமே என்றும் போதிக்கின்றது.

மேலும், அறியாமையினால் மங்கிய இருட்டில் கயிற்றை பாம்பு என்று நினைப்பது போன்று, துவம் (நீ) என்ற பதத்தை சரீரத்துடன் ஒப்பிட்டுக்கொள்கின்றனர். அதுவே, வெளிச்சம் வந்தவுடன் அந்தக் கயிறு பாம்பல்ல என்பதை அறிவது போன்று, விசாரத்தினால் ஆத்ம ஞானம் உண்டாகியவுடன் இந்த சரீரம் நான்” அல்ல. தன்னுள்ளே இருக்கின்ற சேதனம் மட்டுமே ஆத்மா என்பதை அறிகின்றான். இந்த அனுபவ ஞானம் வேதத்தினலே அவனுக்கு தெளிவாகியுள்ளது. இந்த சாஸ்திர அறிவு ஒளியினாலேயே அவன் சரீரம், புலன்கள், அந்தக்கரணமான மனம் போன்ற எல்லாமே அனாத்மா என்பதை அறிகின்றான். இப்படி அறிபவனே தன்னுள்ளே இருக்கின்ற ஆத்மாவை உற்று நோக்குகின்றான். அவனுக்கு தான் தனியானவன் என்ற எண்ணம் நீங்குவதுடன் துவம் என்ற பதத்திற்கு அர்த்தமான வஸ்துவில் தத் என்ற அர்த்தம் உட்புகுந்திருப்பதையும் அறிவான்.

ஆத்மநிச்சயம் (பகுதி – 5)

ஜீவனும், பிரம்மமும் ஒன்றென்றால், ஜீவனிடத்தில் காணப்படுகின்ற சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காதா? என்றால், அந்த ஆத்மாவுக்கு இதில் எதுவுமே சம்பந்தம் கிடையாது.

உதாரணமாக, ஆகாயத்தை நீல நிறமாக எண்ணுகின்றான். ஆனால், உண்மையில் ஆகாயத்திற்கு நிறமில்லை. அதுப்போல, இவனுக்கு வருகின்ற சுக, துக்கங்கள் இவனை பாதிப்பதாக எண்ணுவதினால், அவ்வாறு தோன்றுகின்றது.

அதனால், இவனது கற்பனையான நீல நிறம் எப்படி ஆகாயத்தைப் பாதிக்காதோ, அதுப்போல, இவனது, சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காது. இதுபோன்ற மனதில் தோன்றும் தேவையற்ற கற்பனைகளால், இவனது அந்தக்கரணம் ஆத்மா ஆகிவிடமுடியாது.

இவ்வாறு அந்தக்கரணத்தின் வாயிலாக பார்க்கப்படும் வஸ்துவக்கும் (உலகத்துக்கும்), ஆத்மாவுக்கும் அறியப்படுகின்ற சம்பந்தம் ஏற்படுகின்றது. வஸ்துவிடத்தில் தோன்றும் சைதன்யம் அந்தக்கரணத்தின் மூலம் சம்பந்தப்படுவதால், நான் இதை அறிகின்றேன், பார்க்கின்றேன் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இவ்வாறு அஹங்காரத்தின் மூலமே திருஷ்யம் (பார்க்கப்படும் பொருள்), திருஷ்டா (பார்க்கின்றவன்) இரண்டிற்கும் சம்பந்தம் உண்டாகின்றது. இந்த அஹங்காரம் நீங்கினால், அந்த நிலையும் நீங்கி அத்வைத நிலை உண்டாகும்.

அப்படியானால், அஹம் பிரம்மாஸ்மி என்பதில் ‘அஹம்’ என்ற பதமும், ‘பிரம்மம்’ என்ற பதமும் எப்படி ஒன்றாகும்? என்ற சந்தேகம் வருகின்றது.

இங்கும் அஹம் என்பது அந்தக்கரணத்தை குறிப்பிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் (சுஷுப்தி) அந்தக்கரணம் வேலை செய்வதில்லை. ஆனாலும், நான் நன்றாக உறங்கினேன் என்ற ஒன்றை அறிய முடிகின்றது. அல்லது எனக்கு நல்ல தூக்கத்தில் என் அருகே என்ன நடந்தது என்று தெரியவில்லை என்ற ஒன்றையும் அறிய முடிகின்றது.

இந்த நன்றாக உறங்கினேன் என்பதுவும், என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்பதுவும் அந்தக்கரணம் அறிவதுப் போல தெரிந்தாலும், உண்மையில் ஆத்மாவின் சேர்க்கையினால் அவ்வாறு தெரிகின்றது.

இதையும் ஒரு உதாரணத்தின் வாயிலாக அறிய முற்படலாம்.

ஒரு இரும்புக் கம்பியை நெருப்பில் காட்டிச் சூடு செய்யும் பொழுது, அந்த கம்பி நெருப்பின் வெப்பத்தைப் பெற்றுக் கொண்டு சிவந்த பொன் நிறமாக ஒளிர்கின்றது. மேலும், அது வெப்பமடைந்தும் காணப்படுகின்றது. இப்பொழுது, அந்தக் கம்பியை தொட்டால் சுட்டுவிடும்.

ஆனால், உண்மையில் அந்த இரும்புக்கம்பியின் சுபாவம் குளிர்ச்சியானது. அதை எப்பொழுது தொட்டாலும் சுடாது. ஆனால், நெருப்புடன் சம்பந்தப்படுவதினால், அது சுடுகின்றது.

அதுபோல, அந்தக்கரணம் ஆத்மாவுடன் சம்பந்தப்படுவதால், அது தன்னை (அஹம்) நான் என்று நினைத்துக் கொள்வதைப் போன்று தோன்றுகின்றது.

மெலும் ஆத்மா இல்லாமல், அந்தக்கரணம் தனியாக இருக்க முடியாது. ஆத்மாவின் சித் (ஒளி) அந்தக்கரணத்தில் பட்டால்தான் அது வேலை செய்யும். அதனால், வேதத்தில் கூறப்பட்ட மஹாவாக்கியத்தில் அஹம் என்ற வார்த்தை ஆத்மாவைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

அதனால், ஆத்மா கர்த்தா அல்ல. அதன் சிதாபாசத்தினால் அந்தக்கரணம் மட்டுமே கர்த்தாவாக செயல்படுகின்றது. இதனால், அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம், மற்றும் அஹங்காரம் அனைத்துமே ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்படுகின்றது. அதனால், சுக, துக்கம் உண்டாகின்றது.

இதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால், ஒரு ஸ்படிகத்தின் அருகே ஒரு செம்பருத்தி பூ வைக்கப்பட்டதும் அந்த ஸ்படிகம் உடனடியாக அந்த செம்பருத்தி பூவின் நிறத்தை தன் மீது ஏற்றிக்கொண்டு, காண்பதற்கு சிவந்த நிறமாக மாறிவிடுகின்றது.

ஆனால், உண்மையில் அந்த ஸ்படிகம் அந்த நிறத்தை அடைந்து விட்டதா என்றால், இல்லை. அந்த செம்பருத்தி பூவின் நிறத்தை தன்மீது ஏற்றிக் கொண்டு காண்பதற்கு அப்ப்டி இருக்கின்றது.

உண்மையில் இந்த சுக, துக்கத்திற்கும், ஆத்மாவிற்கும் சம்பந்தம் இல்லை. ஆத்மாவிற்கும், அந்தக்கரணத்தின் செயலுக்கும் சம்பந்தமே கிடையாது

ஆத்மா சுத்த சைதன்யம், மாறுதல் இல்லாதது. ஆனாதி காலமாக வந்த அவித்தையின் (அஞ்ஞானத்தின்) காரணமாக ஆத்மா சுக, துக்கங்களை அடைவது போன்று தோன்றுகின்றது.

அதுப்போல, பிரம்மத்தின் மீது இந்த உலகம் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அந்த பரமா(ஆ)த்மா எந்த குணங்களுடனும் சம்பந்தப்படாத அஸங்கன் என்பதே உண்மையாகும்.

ஆத்மநிச்சயம் (பகுதி – 4)

நேரடியாக மோக்ஷத்தை கர்மாவினால் கொடுக்க முடியாது. ஞானம் உண்டாகுவதற்கு உபயோகமான சூழ் நிலைகளை வேண்டுமானாலும் கர்மா உண்டாக்க முடியும். எனென்றால், உண்டுபண்ணுதல், அடைதல், தூய்மைப்படுத்துதல், மாறுபாடு செய்தல் போன்ற எந்த கர்மாக்களினாலும் மோக்ஷம் சித்திக்காது. அதனால், மோக்ஷத்திற்கு கர்மா சாதனமல்ல என்பது நிச்சயம்.

இதுவரை கர்மா தானாகவே மோக்ஷத்தை கொடுக்காது என்று அறிந்தோம், இனி கர்மா ஞானத்துடன் சேர்ந்து மோக்ஷத்தை உண்டாக்குமா?

இதிக் கர்மாவினால் சித்த சுத்தி உண்டாகி, அதன் வாயிலாக அவன் ஞானத்த அடைய தக்க சூழ்நிலை உண்டாகி, அவன் கர்மா செய்ததினாலோ, அல்லது கர்மாவை விட்டதினாலோ ஞானம் சித்தியாகின்றது என்றவுடன், கர்மா முடிந்த பின்புதான் இது உண்டாகும்.

ஆக, மோக்ஷத்தை அளிப்பதில் இரண்டும் சமமான சாதனமாக இருக்கலாமா என்றால், அதுவும் முடியாத காரியம். காரணம் ஒன்றுக்கு ஒன்று விரோதமானவை. கர்மாவை செய்வதற்குக் காரணமே அஞ்ஞானம் ஆகும். அஞ்ஞானம் நீங்கினால்தான் ஞானம் உண்டாகும். இதிலிருந்து இரண்டும் ஒன்றுக்கு ஒன்று விரோதமானவை ஆகும்.

கர்ம ஸாதனம் எதுவும் நிரந்தரமில்லை. அது மாறுதலுக்கு உட்பட்டது. உண்மையில்லாதது. இது அஞ்ஞானத்தினாலும், மாயையினாலும் தோன்றுவது. ஆகவே, கர்மமும், ஞானமும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அதாவது, இருட்டும், வெளிச்சமும் எப்படி ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காதோ, அதுபோல, கர்மாவும், ஞானமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்க முடியாது.

ஒருவன் ஆத்மஞானியானவுடன் அவனுக்கு காரியம் என்பது எதுவும் கிடையாது. அதனால், அவன் வேதத்தின் கட்டு, திட்டங்களுக்கு அப்பாற்பட்டவனாகின்றான். தேக சம்பந்தமில்லாத ஞானி அந்த தேகத்தை வைத்து எந்த கர்மாவும் செய்யமாட்டான்.

ஒரு குழந்தை எப்படி மரக்குதிரையை உண்மையான குதிரையாக நினைத்து அதன் மீது ஏறி சவாரி செய்கின்றதோ, அதுபோல, அஞ்ஞானி இந்த சரீரத்தை உண்மை என்று எண்ணி அதையே ஆத்மாவாக நினைக்கின்றான்.

இந்த கர்மமும், ஞானமும் அஞ்ஞானிய்டம் மட்டுமே காணப்படும். அது எவ்வாறு எனில், ஒரு மங்கிய வெளிச்சத்தில் ஒரு மரக்கிளையைப் பார்த்த ஒருவன் அதைப் பிசாசு என்று பயந்து ஓட்டம் பிடிக்கின்றான். இந்த இடத்தில் அவனது ஞானம் அது பிசாசு என்பதினால், அவனது செயல் ஓட்டமாக மாறியது.

ஆனால், ஞானியின் விசயத்தில், அவன் தெளிந்த அறிவைக் கொண்டவனாதலால், அவன் இதற்கெல்லாம் மயங்கமாட்டான்.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு அறிவு தேவையாகின்றது. அந்த காரியத்தைப்பற்றிய அறிவு இன்றி அந்த காரியத்தைச் செய்ய முடியாது. ஆனால், ஆத்மஞானம் என்பது காரியமாகாது. அது அறியாமையை நாசம் செய்து வந்துள்ளதால், அவன் செய்ய வேண்டிய காரியமோ, செய்யப்படும் வஸ்துவோ எதுவும் இல்லை.

அஞ்ஞானி அறியாமையினால் ஆசை உண்டாகி, அந்த ஆசையினால் அவன் செயல் செய்கின்றான். ஆனால், ஞானியோ ஆசை அற்றவனாக இருப்பதினால், அவனது அனைத்து செயல்களுக்கும் கர்தாவாக அந்த இறைவனே இருக்கின்றான். அதனால்தான் ஞானி எந்த கர்மாவும் செய்வதில்லை என்று அறியவேண்டும்.

இதில் ஒருசிலர், நானேபிரம்மம்என்ற வாக்கியத்தினால், உண்டாகும் ஞானம் மட்டுமே அஞ்ஞானத்தைப் போக்கடித்து விடாது என்றும், அதைத் தொடர்ந்து அபியாஸம் செய்து அதனால் உண்டாகும் ஞானத்தினால்தான் அஞ்ஞானம் நீங்கும் என்றும், இதன் காரணமாக ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் இருக்கின்றது என்று வாதிடுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர், நானே பிரம்மம்என்ற வார்த்தையினால் மட்டுமே ஒருவனுக்கு ஆத்மசாஸாத்காரம் உண்டாகிவிடாது என்றும், அது அறிவு என்ற ஒரு எண்ணத்தினால் உண்டானது என்றும், இது சுத்த பிரம்மத்தைக் காட்டாது என்றும், அந்த பிரம்மத்தை இடைவிடாது தியானிப்பதினால் மட்டுமே ஒரு புதிய ஞானம் உண்டாகி, அதன் வாயிலாக மட்டுமே அவன் மோக்‌ஷத்தை அறிகின்றான் என்றும் வாதிடுகின்றனர்.

இங்கு கூறப்பட்ட மேற்கண்ட இரண்டு கருத்துக்களுமே தவறானது என்பதை இனி காணலாம்.

ஒருவன் நானேபிரம்மம் என்று தினம், தினம் கூறிக்கொண்டே வருவது என்பது, அவனது மனதை ஒரே நிலையில் இருக்கும்படிச் செய்து, அந்த மனதில் வேறு இடையூறான எண்ணங்களோ, தோற்றங்களோ வராமல் தவிர்ப்பதற்காகத்தான் ஆகும். இதனால், அவனது மனம் ஒரு நிலைப்பட்டு நானேபிரம்மம் என்ற தத்துவார்த்தத்தில் நிலைப்படும். இங்கு கர்மாவிற்கு சிறிதும் இடம் கிடையாது. அதனால், ஞானமும், கர்மாவும் சேர்ந்து இருப்பது சாத்தியமாகாது என்று நிருபிக்கப்படுகின்றது.

இருப்பினும் மற்றொரு உதாரணத்தின் வாயிலாக இதை மேலும் அறிய முயற்சிக்கலாம். ஜீவனும் பிரம்மமும் ஒன்றே என்ற அடிப்படையில் கூறுவதை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களில் இரு பிரிவினர் உள்ளனர்.

ஒரு பிரிவினர், ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு என்றும் ஆனால், ஜீவனும், பிரம்மமும் ஒன்றாகாது என்கின்றனர்.

மற்றொரு பிரிவினர், ஜீவனாக இருக்கும் நிலையில் பிரம்மத்திடமிருந்து வேறுபட்டதுதான், ஆனால், அவன் முக்தி அடைந்த பிறகு ஒற்றுமை உண்டு என்கின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தாலும் கர்மாவும், ஞானமும் ஒன்றாக இணைய முடியாது என்பதையும் காணலாம்.

இதை எப்படி அறியலாம் என்றால், ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் எதில் ஒற்றுமை என்று அவர்கள் நினைத்தாலும், சிலவற்றில் ஒற்றுமை இல்லை என்று நினைத்தாலும் அந்த பேதமை என்பதே அறியாமை எனப்படும். அதனால், அவர்கள் கர்மாவினால் இதை நீக்கிக் கொள்ள முடியாது. அல்லது ஞானத்தினால் பிரம்மத்தை அறிந்தும், அதை தெரியவிடாமல் ஏதோ ஒன்று மறைத்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினாலும், அதை மாற்ற மேலும் ஒரு புதிய கோணத்தில் உபதேசிக்கப்படும் ஞானத்தினால்தான் முடியுமே தவிர கர்மாவினால் முடியாது.

அடுத்து, ஜீவனும், பிரம்மமும் வேறு, வேறு என்று கூறினால், அங்கும் கர்மாவினால் இதை நிருபிக்க முடியாது. எப்படியென்றால், இரண்டும் தனித்தனியான சத்தியப் பொருளாக இருப்பின் அவைகள் இரண்டும் இணைந்து ஒன்றாக முடியாது என்பதினால், பாரமார்த்திக சத்தியம் என்ற உண்மை அடிப்பட்டு விடும். இதனால், என்ன பிரச்சனை உண்டாகும் என்றால், பிரம்மத்திற்கு வேறான மற்றொரு சத்திய வஸ்து இருப்பின் அது பிரம்மத்திற்கு விரோதமாக செயல்படும் என்ற நிலை உருவாகிவிடும். இதனால் பிரம்மத்தின் இருப்பும், மதிப்பும் பொய்யாகிவிடும்.

இதனால், ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி பிரம்மமாக மாற முயற்சித்து, பற்பல கர்மங்களை வருண பேதத்தின் அடிப்படையில் மாற்றி, மாற்றி செய்து, இது உயர்ந்த பிரம்மம், இது தாழ்ந்த பிரம்மம் என்ற பேதமை புத்தி உண்டாகிவிடும்.

இதில் பிரம்மம் தனியாக இருக்கும், ஒவ்வொரு ஜீவனுக்கும் பலவாக இருக்கும், அதாவது பல ஆத்மாக்களாக இருக்குமென்று கூறினாலும், அந்த அந்த ஜீவர்கள் அவரவர்களுக்கு உகந்த கர்மாக்களைச் செய்து, அவர்கள் அடைய விரும்பும் மோக்ஷமான சாயுஜ்யம், சாமீபம், சாலோகம் போன்ற முக்திகளினால் அங்கும் பேதமை இருப்பதைப் பார்ர்கின்ற பொழுது, இந்த கர்மாக்களினாலும் பயன் இல்லை என்பதை அறிய முடிகின்றது.

இதைப்போன்றே, ஒருசிலர், நித்ய கர்மாக்களை மட்டுமே செய்து, இனிவர இருக்கின்ற பாவ கர்மாக்களை தவிர்த்து, மோக்‌ஷத்தை அடையலாம் என்று கருதுகின்றனர்.

இங்கும் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒருவனுடைய பிராரப்த கர்மாவை அவன் அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். அதில் எந்த மாற்றமும் செய்யமுடியாது. ஆனால், பாவ கர்மாக்களை கழிக்க, பல புண்ணிய கர்மாக்களை ஆகாமிய கர்மாக்களாகச் செய்து பாவத்தைக் கழிக்கலாம் என்றாலும், அதிலும் பிரச்சனை உள்ளது. எப்படியென்றால், இந்த புண்ணிய கர்மாக்களினால் உண்டாகின்ற பிறவியை தடுக்க முடியாது. அதன் பயனாக மீண்டும் வருகின்ற சுக, துக்கங்களை தவிற்க முடியாது. இதுபோன்ற எந்த கர்மாவைச் செய்தாலும் அதன் பலன் நன்மையோ, தீமையோ நிச்சயம் உண்டு. இதிலிருந்து ஒருவன் தப்பிக்க முடியாது.

அதனால், எந்த கர்மாவைச் செய்தாலும் பிரம்மத்தை அறிய முடியாது. கர்மாவை கர்மாவினால் மாற்ற முடியாது.

இதற்கு ஒரே தீர்வு ஆத்ம ஞானம் மட்டுமே ஆகும்.

இந்த அத்ம ஞானத்தினால் ஒருவன் அடைந்த உண்மை ஸ்வரூபம் அவனை கர்மங்களில் பந்தப்படுத்தாது. ஞானத்தினால் அந்த கர்மங்கள் அனைத்தும் நிஷ்காமிய கர்மமாக மாறிவிடுவதினால், அவனுக்கும் புதியதான ஆகாமியமோ, சஞ்சிதமோ உண்டாகாது. பிராரப்தத்தை அவன் உடல் இருக்கின்றவரை அனுபவித்துத் தீர்ப்பான்.

அப்படியானால், கர்மாவினால் எந்த பயனும் இல்லையா என்றால், அப்படியும் கூற வழியில்லை. இந்த கர்மாவினால் ஒருவன் தன்னுடைய மனதினை செம்மைப்படுத்தி, அதன்பிறகு அந்த ஈஸ்வரனை அவன் அறிந்து, ஞானத்திற்கு வரவேண்டும் என்பதாகும். இதில் ஞானம் என்பது அறிவு சார்ந்த விஷயமாக இருப்பதினால், அது அனைவராலும் அடைந்திட முடியாது என்பதை அறியவேண்டும்.

ஆம், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அனைவருமே அறிவாளிகளாக இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியதோ, அதுப்போல, இந்த ஞானத்திற்கு அனைவருமே தகுதியானவர்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் அஞ்ஞானமாகும்.

ஒரு சூரியனுடைய பிரதி பிம்பம் பிரதி பிம்பிக்கின்ற தண்ணீர் பானையின் நீரின் தெளிந்த தன்மையைப் பொருத்தே பிரகாசமாக பிரதி பிம்பிக்கும். கலங்கிய, மங்கிய, அழுக்கான நீரில் அந்த சூரியனின் பிரதி பிம்பம் அவ்வளவு பிரகாசமாக இருக்காது.

அதுபோல, மனித மனம் தெளிந்து இருந்தால், அந்த அறிவின் வெளிப்பாடு ஞானமாக பிரகசிக்கும். அதுவே கலங்கிய, மந்தமான, கெட்ட மனம் கொண்ட மனிதர்களில் அறிவு வெளிப்பாடு அவ்வளவு எளிதாக வெளிப்படாது.

இது அனைத்துமே உபாதிகளின் தன்மையைப் பொருத்தே இருக்கின்றது. அதனால், இப்படிப்பட்டவர்கள் கர்மத்தினால் மட்டுமே நல்ல மனதினைப் பெற்று, ஞானத்திற்கு வர முடியும். அதற்கு பல பிறவிகள் கூட உண்டாகலாம். இதில் நம் செயலாவது ஒன்றுமில்லை என்பதை அறியவேண்டும்.

ஆத்மநிச்சயம் (பகுதி – 3)

கர்மா தேவையற்றதா?

அப்படியானால், கர்மா முற்றிலும் தேவையற்றதா? என்ற சந்தேகம் வரலாம். அப்படியில்லை, கர்மாக்களும் ஒருவன் படிப்படியாக ஞானத்தைப் பெற உதவுகின்றன. எப்படியென்றால், ஒருவன் உலகில் உள்ள கஷ்டங்களினால், மனம் நொந்து போகும் போது, நித்ய கர்மாக்களை செய்வதினால் வைராக்கியத்தைப் பெறுகின்றான். நரகத்திற்குப் பயந்து பாவ கர்மாக்களைச் செய்யாமலும், காமியக்கர்மாக்களைச் செய்வதினால் பலன் உண்டாகும் என்ற பயத்தினாலும், நித்ய கர்மாக்களை மட்டுமே அன்றாடம் செய்து வருகின்றான். இதனால், அவனது பாவங்கள் நீங்கி மனம் பரிசுத்தமாக ஆகின்றது. அந்த மனம் சுத்தியானதினால், அவன் தான் செய்யும் கர்மாக்களின் பலனை அவன் விரும்பாமல், அதனை ஈஸ்வரார்பணமாகவே செய்கின்றான்.

இந்த உலக சுகங்களிலும், மேல் உலக சுகங்களிலும் ஆசைகள் அற்றவனாக ஆகின்றான். இவன் மனம் எதிலும் ஆசைப்படுவதில்லை. விருப்பு, வெறுப்பு என்ற இருமைகள் இவனை பாதிப்பதில்லை. வெளி உலக வஸ்துக்கள் இவனை இழுப்பதில்லை. மனம் நிர்மலம் ஆனதினால், இவனால் ஆன்மாவைத் தியானிக்க முடிகின்றது. இவனது மனம் உள் நோக்கித் திரும்புகின்றது. இவனுக்கு அடைய வேண்டியது என்பது எதுவும் கிடையாது. கர்மாக்களினால் ஏற்படுகின்ற ‘சித்தசுத்தி’ என்ற பலன் கிடைத்து விட்டது. அதனால், கர்மாக்களின் மீது முடிவும் ஏற்பட்டுவிட்டது. அவனது நிஷ்காமிய கர்மத்தினால், அவனுக்கு சித்தசுத்தி உண்டாகி, அதன் பயனாக மோக்ஷத்தின் மீது அவனுக்கு நாட்டம் உண்டாகிவிட்டது.

இந்த கர்மாக்கள் நேரடியாக மோக்ஷத்தைக் கொடுக்காது, இந்த கர்மாக்களின் பலனாக முதலில் சித்தசுத்தி உண்டாகி, அதன் வாயிலாக மோக்‌ஷம் என்பதை அறிய முடிகின்றது.

இதனைத்தான் பகவத் கீதையில் 6-வது அத்தியாயத்தில், 3-வது ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “பரம்பொருளைச் சிந்தித்து இருக்கின்றவன், யோகத்தை அடைவதற்கு நிஷ்காமியமாக கர்மங்களைச் செய்வதுதான் காரணம் என்று கூறுகின்றார்”.

நித்ய, நைமித்ய கர்மங்களுக்கு சில தர்மங்கள் உள்ளன. அதன் பயனாக அதைச் செய்பவன் பாவங்கள் நசிக்கின்றன. மனம் தூய்மை அடைகின்றது. இந்த உலகம் அநித்யம் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அதன் காரணமாக இந்த உலகத்தின் மீது இருந்த ஆசை குறைந்து, மோக்‌ஷத்தின் மீதான ஆசை உண்டாகின்றது.

இதனால், மோக்ஷத்தை அடைய பிரயத்தனம் செய்வதினால், மேற்படி கர்மாக்களை விடுத்து, தியானத்தின் மீது மனம் திரும்புகின்றது. மனம் உள் நோக்கித் திரும்புகின்றது. அதன் வாயிலாக தத்வமஸி என்ற மஹாவாக்கியத்தினை உணரப்படுகின்றது.

ஆத்மநிச்சயம் (பகுதி – 2)

அறியாமை

ஆத்மஞானம் என்பது புத்தியினால் புரிந்து கொண்டு, அதன் வாயிலாக அடைகின்ற அறிவு ஆகும். இந்த அறிவை கர்மாவினால் அடைய முடியாது.

இதனை சில உதாரணங்களினால் அறியலாம்.

தன்னிடத்தில் ஒரு வஸ்து இருக்கின்றதை அறியாமல், அதை அடைய விரும்புவது ஒரு நிலை என்றால், தன்னிடம் இல்லாத ஒன்றை, அது இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை நீக்க முயற்சிப்பது.

அடுத்து, இல்லாததை வேண்டுவது, இருப்பதை தேவையில்லை என்று தள்ளுவது.

இந்த நான்கில் முதலாவதாக ஒருவன் தான் அணிந்துக்கொண்டுள்ள மூக்குக் கண்ணாடியை, அணிந்து இருப்பதை மறந்து, எங்கோ தவறுதலாக வைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு அனைத்து இடங்களிலும் தேடுவது. இரண்டாவது ஒருவன் தன்னுடைய நிழலைப் பார்த்து, அதைப் பிசாசு என்று பயந்துக்கொண்டு, அதை ஓட்ட நினைப்பது.

இந்த முதல் இரண்டையும் பார்க்கின்ற பொழுது, ஒருவன் அணிந்துக் கொண்டுள்ள மூக்குக் கண்ணாடியை மற்றொருவன் அதை நீங்கள் அணிந்துக் கொண்டே, தவறவிட்டதாகத் தேடுகின்றீர்கள் என்ற அறிவைக் கொடுத்தவுடன் அந்த பொருள் இருப்பதை அவர் அறிந்து கொள்கின்றார்.

அதுபோலவே, மற்றொருவனுக்கும் அது பிசாசு இல்லை, உன்னுடைய நிழல்தான் என்ற அறிவைக் கொடுத்தவுடன் அது அவனுக்கு புரிந்து விடுகின்றது.

மேற்கண்ட இந்த இரண்டு விசயங்களுக்கும் கர்மா எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு அது இருக்கின்றது என்ற அறிவு உண்டானால் மட்டுமே போதும். இடையில் தோன்றிய அறியாமை அறிவு உண்டானவுடன் மறைந்து விடுகின்றது.

ஆனால், அடுத்து உள்ள மூன்றாவது மற்றும் நான்காவதான விசயங்களில் இல்லாததை வேண்டுவதற்கும், இருப்பதை தள்ளுவதற்கும் செயல் (கர்மா) அவசியம ஆகின்றது.

இதுப்போல, ஆத்மா நம்மிடையே இருக்கின்றது. அதைத் தெரிந்துக் கொள்ள ஞானம் மட்டுமே அவசியம். அதற்கு எந்தவிதமான கர்மாவும் தேவையில்லை. நாம் நம்முடைய அஞ்ஞானத்தினால் நாம் ஆத்மா அல்ல என்று நினைக்கின்றோம். ஆகையால் ஆத்மாவை அறிவதற்கு ஞானம் ஒன்றுதான் வழி. கர்மாவினால் ஆத்மாவை அறிய முடியவே முடியாது.

இதில் கர்மாவிற்கும், ஞானத்திற்கும் வித்தியாசம் உள்ளது. அது எப்படியென்றால், ஒருவன் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கர்மகாரியமாக யாகம் செய்து முடித்து விட்டாலும், அதன் பலனை அவன் அடைய சில வருடங்கள் கூட ஆகலாம்.

ஆனால், சாஸ்திரத்தை கற்பதினாலும், குரு உபதேசத்தினாலும், அவனிடம் உள்ள ஆத்மாவை அவன் அறிய அந்த ஞானம் வந்த மறுவி விநாடி போதும், கர்மாவைப் போன்று காலதாமதம் தேவையில்லை. ஞானம் ஏற்பட்டவுடன் அஞ்ஞானம் நீங்கி விடுகின்றது.

ஒருசிலர், ஞானம் வந்த பிறகும், அஞ்ஞானத்தினால் பாதிக்கப்படுவது போன்று தோன்றுகின்றதே என்று கருதாலாம். அதை தவறான அபிப்ராயம் என்றுதான் கூற வேண்டும். காரணம், ஞானம் பூர்ணம். இதில் எந்த குறையும் தோன்றாது. ஞானம் வந்த உடன் அஞ்ஞானம் மறைந்து விடுகின்றது. அதில் எந்த குற்றங்குறைகளையும் காணமுடியாது.

உதாரணமாக, மூக்குக்கண்ணாடியை அணிந்துக் கொண்டே தன்னிடம் இல்லை என்று தேடிக்கொண்டிருப்பவருக்கு, அவரிடமே அது இருக்கின்றது என்பதைக் காட்டிக் கொடுத்தவுடன், அவர் அது தன்னிடத்திலேயே இருக்கின்றது என்ற ஞானத்தை அடைந்து விட்டார். இனி, அவர் அந்த மூக்குக் கண்ணாடியைத் தேட மாட்டார்.

அதுப்போல, நீ ஆத்மா மட்டுமே நீ, இந்த உடல் அல்ல. என்ற ஞானத்தை ஒருவன் அடைந்த பிறகு அவன் அந்த உடலின் மீது பற்று இல்லாமல் மட்டுமே இருப்பான்.

இல்லையே, பெரும்பாலனவர்கள் அறிவினால் இதை அறிந்து கொண்டாலும், உடல் பற்று வைத்துள்ளனரே என்று கேட்டால், உண்மையில் அந்த ஆத்மாதான் தான் என்று அறிந்த ஞானிகள் கூட மற்றவர்களின் பார்வைக்கு இந்த பிராரப்த கர்மா தீரும் வரை இந்த உடலை பராமரித்துத்தான் ஆகவேண்டும். அதனால் பற்று இருக்கின்றது என்று நினைப்பது தவறு.


உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.
 

மேற்கண்ட திருமந்திரப் பாடல்கள் இரண்டுமே ஞானியின் உடம்பினைப் பற்றி போற்றுகின்றன.

அப்படி உடலுடன் இருக்கின்ற ஞானி தன் உடல் மீது பற்று வைத்துக்கொண்டு இல்லாவிட்டாலும் உடல் அறிவற்றது  உயிர் அறிவுடையது என்பது அவருக்கு தெரியும். உடல் போனால் அறிவும் போய்விடும். உடலை நன்றாக வைத்துக் கொண்டு இருந்தால் உயிர் நன்றாக இருக்கும். அறிவும் நன்றாக இருக்கும்.

அந்த அறிவுத் தேடலுக்கு,  முழுமையான அறிவை நோக்கிய உயிரின் பயணத்துக்கு உடல் தேவைப்படுகின்றது என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தின் வாயிலாக உணர்த்துகின்றார்.

வேதத்தில் கூறப்பட்ட கர்ம காரியங்களுக்கு அதிகாரியானவன் அஞ்ஞானம் கொண்டவனே ஆவான்.

காரணம் சரீரத்தை அவன் ஆத்மா என்று எண்ணுகின்றான்.

அதனால், வேதத்தில் கூறப்பட்ட பல வர்ணத்தினர்களுக்கு (பிராமணன், சத்ரியன், வைசியன் போன்றவர்களுக்கு) பல கர்மாக்கள் கூறப்பட்டுள்ளது.

இப்படி, பிராமணர்களுக்கு, சத்திரியர்களுக்கு என்று பல விதமான கர்மங்கள் கூறப்பட்டுள்ளதால், இது சரீரத்தின் பிறப்பினால் உண்டான பாகுபாடுகளான பிராமணன், சத்திரியன் என்ற அடிப்படையில் கர்மங்கள் இருப்பதினால், இது ஆத்மாவுடன் சம்பந்தப்பட்டதல்ல.

ஆகையால், வேதத்தில் கூறப்பட்ட கர்மாக்களில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்றால், அது நம் அஞ்ஞானத்தை வெளிப்படுத்துகின்றது. அந்த அஞ்ஞானத்திலிருந்து நாம் விடுபடுவோமானால் நாம் வேதத்திற்கு கட்டுப்படாதவர்களாக ஆகின்றோம்.

அதவது, இதை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்றால், மூக்குக் கண்ணாடி அவரிடமே இருக்கின்றது என்ற ஞானத்தை ஒருவர் காட்டிக் கொடுத்தவுடன், அவருக்கு நன்றி கூறிவிட்டு, அவரை கூடவே வைத்துக் கொள்ள முடியாது அல்லவா?, அதுப்போல, தன்னை ஆத்மா என்ற ஞானத்தைக் கொடுத்த வேதத்தை காட்டிக் கொடுத்த குருவையும், சாஸ்திரத்தையும் மதிக்க வேண்டும், ஆனால், இனி அதில் கூறப்பட்டுள்ள கர்மாக்களை கடைப்பிடிக்க  வேண்டும் என்ற அவசியம் தேவையில்லை.

ஆனால், நம் மனதில் அஞ்ஞானம் இருக்கின்ற வரையில் வேதத்தில் கூறப்பட்ட விதி, நிஷேதக் கட்டளைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றோம். இதனால், புண்ணியக்கர்மாக்களைச் செய்வதினால் தேவர்களாகவும், பாவ கர்மாக்களைச் செய்வதினால் மிருகங்களாகவும், நரகத்திலும், இரண்டையும் கலந்து செய்வதினால் மனிதர்களாகவும் வருகின்றோம்.

இதுபோன்று, ஆசைகளினால் பாவ, புண்ணிய செயல்களைச் செய்து, சுக, துக்கங்கள் போன்ற பலன்களை அடைய உடல்களை மாற்றி, மாற்றி பிறக்கின்றோம், இறக்கின்றோம். மீளாத்துயரங்களை தொடர்ந்து அனுபவிக்கின்றோம்.

ஆகவே, ஆசைகளை விட வேண்டுமென்றால், அதற்கு ஞானம் அவசியம். இந்த ஞானம் மட்டுமே  மோக்ஷம் என்ற பேரானந்த நிலையைக் காட்டிக் கொடுக்கும்.

ஆத்மநிச்சயம் (பகுதி – 1)

  1. கர்மமும், ஞானமும்

ஒருவனின் ஆசைதான் கர்மாவிற்குக் காரணம், அவனின் அறியாமையே ஆசைக்குக் காரணம் ஆகும். அதனால், முதலில் அறியாமை அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட அறியாமை ஒருவனிடமிருந்து நீங்க வேண்டுமென்றால், அதற்கு சாஸ்திரம் மட்டுமே பிரமாணம் ஆகும்.

இதில் சாஸ்திரத்தை அறியாததினால், நமக்கு நாமே எது நன்மை?, எது தீமை? என்று தெரியாமல், நம்மிடையே உள்ள அறிவைக்கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் தீர்மானிக்கின்றோம்.

இந்த அறியாமையே ஆசைக்கு காரணமாகி, அந்த ஆசையே கர்மாவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

இதனால், செய்யப்பட்ட கர்மாவானது, அவனது சம்ஸ்சாரத்திற்கு காரணமாக அமைகின்றது. சம்ஸ்சாரம் என்பது பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்தில் இந்த ஜீவனைச் சுற்றவைத்து அவனை அழிக்கின்ற மிகக் கொடிய நோய் என்பதை அறிய வேண்டும்.

இந்த சம்ஸ்சாரத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க விரும்பினால், அவன் நிச்சயமாக சாஸ்திரத்தைக் கற்று அதன் வாயிலாக அறிவை அடைந்து, அந்த அறிவினால் தன்னை உணர்ந்துகொண்டு, இந்த தரணியில் வாழும்பொழுதே ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, வாழ்ந்து முடித்த பின்பும், என்றும் எக்காலத்திலும், அழியாத அந்த பரம்பொருள் ஸ்வரூபமாகவே மாறிவிடவும் முடியும்.

இதை அறிந்தவனே அறிவாளியாவான். அவனே ஞானி என்று அழைக்கப்படுகின்றான்.

இப்படித் தன்னை அறிந்த தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்பர். பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர். சென்னியில் வைத்த சிவன் அருளாலே.

அதாவது, இவர்களிடத்திலே சாஸ்திரத்தைக் கற்றதினால் உண்டான அறிவு, அவர்களை கர்ம வினைகளை கையாளும் தகுதிக்கு உயர்த்தி விடுகின்றது.

அந்த சாஸ்திர அறிவைக் கொண்டு, இவனது கர்மங்களினால் உண்டான பாவ, புன்ணியங்களும். அந்த பாவ, புண்ணியங்களினால் உண்டான சுக, துக்கங்களும் ஆத்மாவை பாதிப்பதில்லை, ஆத்மா என்றுமே ஆனந்த மயமானது என்றும், இந்த சுக, துக்கங்கள் அனைத்தும் இந்த சரீரத்தையே பாதிக்கின்றன என்பதை அறிந்து, இந்த உடலின் மீது உள்ள பற்றை முதலில் விடுகின்றான்.

இந்த ஆத்மா எப்படி ஆனந்த மயமானது என்றால், ஒருவனது உறக்கத்தில், அவன் ஆழ்ந்து தூங்கும் பொழுது, (சுஷுப்தி நிலை) அவனுக்கு, இந்த உலகம், உலகப் பொருட்கள், போகப் பொருட்கள், அருகே படுத்துக் கொண்டிருக்கின்ற மனைவி, மக்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால், அவனால் இந்த எதுவும் தெரியாத நிலையிலே ஆனந்தமாக தூங்க முடிகின்றது என்றால், அந்த உண்மை நிலையே ஆத்மாவின் ஆனந்த நிலை என்பதை அறிய வேண்டும்.

அதாவது, பரம்பொருள் என்ற பரமா(ஆ)த்மா சுக, துக்கங்கள் அற்ற என்றும், எக்காலத்திலும் இருக்கின்ற, அறிவுமயமான ஆனந்த ஸ்வரூபம் ஆகும். அப்படிப்பட்ட ஆனந்த ஸ்வரூபமான பரப்பிரம்மத்துடன், இந்த சிருஷ்டிக்கும், இந்த சிருஷ்டியில் படைக்கப்பட்ட எதற்கும் சம்பந்தம் இல்லை.

அதாவது, இந்த சிருஷ்டியில் உள்ள படைப்பில் உள்ளவைகளினால் உண்டாக்கிக் கொள்ளப்படும் சுக, துக்கங்களுக்கு அந்த பரமாத்மா காரணம் இல்லை. மேலும், இதனால் பாதிப்படைவதும் இல்லை.

இந்த சிருஷ்டியில் காணப்படுகின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் மனிதனின் ஆசையினாலே, அவனால் உண்டாக்கி கொண்ட எண்ணங்களினால் எழுந்த அறியாமையின் மன மயக்கமே ஆகும்.

அப்படியானால், சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்கள் எல்லாம் எதை அடைப்படையாகக் கொண்டு இருக்கின்றன என்று பார்த்தோமானால், அந்த கர்மங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிப்பட்ட பலன் இருப்பதாக சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால், அந்த பலனின் இறுதி நிலை அதை அடைபவன் பெருகின்ற மன மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதையும் அறிய வேண்டும்.

உதாரணமாக, ஒருவனுக்கு குழந்தை இல்லை என்ற துயரத்தினால், அவன் சாஸ்திரத்தில் கூறப்பட்ட ‘புத்திர காமேஷ்டி யாகம்’ என்ற ஒரு யாகத்தை அவனது கர்மாக்களில் ஒன்றாகச் செய்தான் என்றால், அதன் பலனாக அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. அவ்வாறு அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததின் அடுத்த பலனாக அவனுக்கு மன மகிழ்ச்சி உண்டாகின்றது.

இந்த மன மகிழ்ச்சிக்காகவே மனிதன் அனைத்து கர்மாக்களையும் செய்கின்றான். ஆனால், இது அவனது அறியாமையினால் அவன் ஏற்படுத்திக் கொண்ட  நிலையற்ற ஆனந்தம் ஆகும்.

அதுவே, நிலையான ஆனந்தத்தை ஒருவன் விரும்பினால், அவன் இதே சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்களை விடுத்து, இந்த சாஸ்திரத்தை கற்றறிவதினால் உண்டாகின்ற அறிவு, அவனை அந்த நிலையான பரமாத்மாவிடம் இருக்கின்ற பேரானந்தத்தை அவன் அனுபவிக்கும்படி செய்து விடும்.

அப்படிப்பட்ட பரமானந்தத்தைக் கொடுக்கக்கூடிய “மோக்ஷம்” என்ற ஜீவன் முக்தி நிலையைப் பற்றி சாஸ்திரம் கூறும்பொழுது, அந்த பரமானந்தத்தை பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி என்ற மூன்று வழிகளில். சுருதியின் வாயிலாக மட்டுமே ஆத்மாவை அறிய முடியும். அப்படிப்பட்ட ஆத்மா சுகஸ்வரூபமானது, துக்கக்கலப்பில்லாதது, என்பதையும் அறிய முடியும்.

அது எப்படியென்றால், ஒருவன் சுகத்தை அடைய விரும்புவதும், துக்கம் வரக்க்கூடாது என்று நினைப்பதுவும் அவனது மனம் சார்ந்த எண்ணங்களினால் உண்டான விசயம். அதாவது, அவனது இந்த எண்ணத்திற்கும், சாஸ்திரத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஏனெனில், இந்த எண்ணம் சாஸ்திர அறிவே இல்லாத பசு, பன்றி முதலிய மிருகங்களுக்கும் உண்டு. அதனால், இதை செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்பது ஆத்ம ஞானம் இல்லாதவனுக்கு கூறப்பட்டதேயன்றி, சாஸ்திரத்தை அறிந்த ஞானிகளுக்கு இது பொருந்தாது.

இதனால், ஆதம ஞானத்தை அடைய விரும்புகின்ற ஜிக்ஞாஸுக்கு மட்டுமே இந்த சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்கள் தேவை இல்லை. மற்ற அனைவருமே இந்த ஜிக்ஞாஸுவுக்கு சித்த சுத்தி உண்டானது போன்று, தங்களுக்கும் உண்டாகும் வரை நித்ய கர்மாக்களை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இதனால், மோக்ஷத்தை விரும்புகின்றவர்களுக்கு கர்மா தேவையில்லை என்பதையும், அதனால், அடைய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மநிச்சயம்

முன்னுரை

 

உலக மக்கள் அனைவருமே துயரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புகின்றார்கள். ஆனால், அதற்கான வழிமுறையை மட்டும் அறிந்து கொள்ள விருப்பம் யாரிடத்திலும் இல்லை.

சாஸ்திரம் கூறும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களின் உடலின் மீது கொண்ட பற்று, மற்றும் தன்னை சார்ந்த உற்றார், உறவினர்களின் மீது கொண்ட பற்று என்று இந்த பந்தம் அனைத்துமே அழியக்கூடிய இந்த உடலைச் சார்ந்து இருப்பதுவே அவர்களின் துயரத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது என்கின்றது

இந்த உடல் கிடைத்ததற்கே காரணம் பூர்வ ஜென்ம வினைகளே ஆகும் என்றும், செய்ய வேண்டியதை செய்யாததும், செய்யக்கூடாததை செய்வதுமே வினைகளின் பலனாக அமைகின்றன. அதாவது மக்களிடையே உள்ள விருப்பு, வெறுப்பு, எது நல்லது, எது கெட்டது என்ற புரிதல் இல்லாமை, மற்றும் இந்த உலகம் உண்மையானது”, இந்த உலகத்தில் வாழும் நாமும் எப்பொழுதும் இருப்போம் என்ற இந்த அறியாமையே அவர்களை மேலும், மேலும் துன்பத்தில் ஆழ்த்துகின்றது.

இதற்குக் காரணம் இரண்டற்ற அந்த ஏகனான பரம்பொருளை அறியாமல், அழியக் கூடிய உலகியல் பொருட்களை விரும்புவதே இவர்கள் துயரங்களுக்கு காரணமாக அமைகின்றது.

இந்த அறியாமை நீங்கி அறிவு உண்டாக வேண்டுமானால், அது சாஸ்திரத்தை கற்பதினால் மட்டும் சாத்தியம் என்று வேதம் வலியுறுத்துகின்றது.

அப்படிப்பட்ட வேதத்தை இன்றைய மக்கள் கற்காமல் இருப்பதே இதுபோன்று கஷ்டங்களுக்கு காரணம் என்று எத்தனையோ மஹான்களும், ரிஷிகளும், ஞானிகளும் மக்களின் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த காலகட்டங்களில் பல விதமான உபதேசங்களையும், வழிகாட்டுதல்களையும் கூறியும் இந்த மக்கள் மட்டும் ஏற்கவேயில்லை, இன்று வரை மாறவேயில்லை.

அதற்கு மிக முக்கியக் காரணம் நம்முடைய பாரத தேசத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு, சுதந்திரம் அடைந்த பின்பும், அவர்களது கல்வி முறையான மெக்காலே கல்வித் திட்டங்களை,  நவீன கல்வி முறை என்று அப்படியே நடைமுறைப்படுத்தி வந்த ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தவறினால், நற்பண்புகளை கற்பதற்குப் பதிலாக, தீய பண்புகளை உண்டாக்கும் நவீன நாகரீகத்தை கற்று, அதனிடம் சிக்கிக்கொண்ட மக்களின் மனம் அவர்களினால் மாற்றப்பட்ட கல்வியைக் கற்று, அதை உண்மையென்று கருதி, மன மயக்கத்திலேயே வாழ் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்ற இத்தகைய மோசமான சூழ் நிலைகளை நாம் இன்று காண முடிகின்றது.

அதாவது, ஒருவனுக்கு அறிவைக் கொடுக்கும் கல்வி மட்டும் சரியான முறையில் அவனிடம் நற்பண்புகளை கொண்டு சேர்க்காமல் விட்டால், அவன் கற்ற கல்வியினால் உண்டான தீய பண்புகளும், அதன் பாதிப்புகளும், அனைத்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

அது எவ்வாறு எனில், இந்த சமுதாயத்தை நடத்துகின்ற சாதாரணமாக நகராட்சி குப்பை அள்ளும் வேலை ஆட்கள் முதற்கொண்டு, அரசாங்கத்தை நடத்துகின்ற ஆட்சியாளர்கள் வரை இந்த கல்வி முறை சீர்கேட்டினால், சுய நலம் கொண்டு, அவரவர்கள் வாழ்க்கையை மட்டும் செம்மையாக வாழ வேண்டும் என்றும், மற்றவர்கள் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மன நிலையை அவர்களிடம் இயற்கையிலேயே இந்த கல்விமுறைக் கொண்டு வந்து விடுகின்றது.

இந்தக் கல்வி போதிக்கப்படும் பொழுதே ஒழுக்கம், அன்பு, மரியாதை, அஹிம்சை போன்ற நற்பண்புகளை கற்றுக் கொடுக்காமல், இந்த பாடங்களைப் படிப்பதினால் இந்த தொழிலுக்குச் சென்று இந்த அளவு பணம் சம்பாதிக்கலாம், என்ற பணத்தை மட்டுமே சார்ந்த பொருளாதரக் கல்வியாக மாறி விட்டதினால், நம்முடைய சனாதன தர்மம் உபதேசித்த புருஷார்த்தங்களான அறம், பொருள், இன்பம், மற்றும் இறுதியில் வீடுபேறு அடைகின்ற நற்பண்புகளை இன்றைய இளைய சமுதாயம் கற்பதற்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

இப்படிப்பட்ட பொய்யான கல்வியை கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த சமுதாயத்தில் எந்த வேலை வாய்பைப் பெற்றுக் கொண்டு வாழ வந்தாலும், அவர்களிடத்தில் நற்பண்புகள் இல்லாத காரணத்தினால், அந்த தொழிலை வைத்துக் கொண்டு, பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, அவர்கள் தவறான வாழ்க்கை வாழ முற்படுவதின் காரணமாக எங்கும், எந்த தொழிலிலும், லஞ்சம், திருட்டு, கலப்படம், ஏமாற்றுவேலை, அராஜகம் போன்ற எண்ணிக்கையில் அடங்காத தவறுகளை இன்றைய சமுதாயம் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது.

இதே சூழ்நிலைகள் தொடந்து நீடிக்கும் பட்சத்தில், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் சுய நலப்போக்கினால் அதிக கேடுகளைச் செய்துக் கொண்டு, இந்த மனிதப் பிறவியின் மகத்துவம் அறியாமலேயே மாண்டு விடுகின்ற மட்டமான செயலைக் காண முடிகின்றது.

அறிதான இந்த மானிடப் பிறவியின் மகத்துவம் அறியாத இந்த மக்கள் மிருகங்களைப் போன்றே உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது, மற்றும் உண்டதை கழிவிறக்கம் செய்வது போன்று, சிறிது கூட மிருகங்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல், வாழ்ந்து, தங்கள் வாழ் நாட்களை முடித்துக் கொள்கின்றனர்.

இதில் இன்னும் சிலரின் போக்கு மிருகங்களை விட கேவலமாக தன்னுடைய சுய நலத்திற்காக மற்றவர்களை துன்புறுத்தியும், தகாத செயல்களைச் செய்தும், எதிர்காலத்திற்கு பணம் சேகரிப்பு என்று தவறான வழிகளில் பணத்தை சம்பாதித்து, சேமித்து வைத்துக் கொண்டு, மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலை இன்றி கீழான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இவர்கள் மனிதர்களின் சட்ட, திட்டங்களுக்கும், இறைவனின் (இயற்கையின் நியதிகளுக்கு) சட்ட, திட்டங்களுக்கும் சிறிதும் மதிப்பளிப்பதில்லை.

இதனால், மனித இனம் மட்டுமின்றி, மற்ற ஓர் அறிவு உயிர்களிலிருந்து, ஐந்து அறிவு கொண்ட உயிர்கள் வரை, இவர்களின் சுய நலத்தினால் பாதிப்படைந்து, அதனால், இயற்கைப் பேரழிவுக்கு காரணமாக அமைகின்றனர்.

இதுபோன்ற ஒரு மிக மோசமான சூழ் நிலைகளை இனி வரும் சமுதாயம் எதிர்கொள்ளாமல் தவிற்க விரும்பினால், நிச்சயமாக இனி வரும் சந்ததிகளுக்கு நம் பாரத தேசத்தின் சனாதன தர்மம் போதிக்கும் வாழ்க்கைக் கல்வியான வேதத்தை அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அந்த வேதக் கல்வி மட்டுமே ஒருவனை தன்னை அறியும் தத்துவ ஞானியாக மாற்றி, அதன் வாயிலாக இந்த உலகத்திற்கு அனேக நன்மைகளை செய்யக்கூடிய நல்லவர்களை உண்டாக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதை அறியாமல் மனம் போனபடி வாழும் கல்வியைக் கற்பதினால், கடுமையான பின் விளைவுகளை இனி வரும் சமுதாயம் சந்திக்கும் என்றால் அது மிகையாகாது.

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.