சமஸ்க்ருதமும், தமிழும் !

now browsing by category

 

அத்யாரோபம் – அபவாதம்

அபவாதம் எனில் அறியாமை எனும் அஞ்ஞானத்தால் கயிற்றிலே தோற்றம் கொண்டுள்ள பாம்பை புறகணித்து, அறிவு (ஆத்ம ஞானம்) ஏற்பட்ட உடன் அது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை அறிவது போல, அத்யாரோபம் எனும் முறையில் பிரம்மவஸ்துவின் மீது ஏற்றப்பட்ட பொய்யான இந்த உலகத்தைப் வேதாந்த சாத்திரங்கள் எனும் பிரமாணங்கள், யுக்தி, அனுபவங்களின் மூலம் புறக்கணித்து, அது பிரம்மம் தான் என்று அறிய வைக்கும் முறைதான் அபவாதம் ஆகும்.

பிரம்மத்திடம் இருந்து எந்த முறையில் இந்த உலகமானது `தோற்றம்` கொண்டதோ அதற்கு எதிரான முறையில் இந்த உலகத்தை பிரம்ம வஸ்துவிடம் `ஒடுக்கும்` பொழுது (லயம் ஏற்படச் செய்யும் பொழுது), பிரம்மம் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும்.

அத்யாரோபம் என்பது சமசுகிருத மொழியில் உண்மையான ஒரு பொருள் மீது வேறு ஒரு பொருளை ஏற்றி வைத்தல் ஆகும். (உண்மையான ஒரு பொருளை வேறு ஒரு பொருளாக காண்பது – மங்கிய இருளில் கயிற்றை பாம்பு என காணுதல்). இதனை அத்யாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

அத்யாரோபம் அல்லது அத்யாசம் எனும் சொற்கள் சமசுகிருத மொழியில் பரி பாக்ஷை (மறைமுகமாக உணர்த்தும் சொற்கள்) ஆகும்.

மங்கிய இருளிலே, கயிற்றின் உருவமானது சரியாக தென்படுவதில்லை. அப்பொழுது அறியாமையால், கயிற்றின் மீது பாம்பை ஏற்றிக் கூறுவது போல, பிரம்ம வஸ்துவின் தன்மையை சரியாக அறிந்து கொள்ளாமல், அறியாமையால் (அஞ்ஞானத்தால்பிரம்மத்தின் மீது இந்த உலகத்தை ஏற்றிக் கூறுவதுதான் `அத்யாரோபம்` ஆகும்.

அவ்வாறு பொய்யாக பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்த உலகத்தை இறக்கி வைக்கும் (நீக்கும்) முறைக்கு அபவாதம் என்பர்.

பரோக்ஷம், அபரோக்ஷம்

பரோக்ஷ ஞானம், அபரோக்ஷ ஞானம் என்று இரண்டு அறிவு சார்ந்த விசயங்களை அறிவதில், பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்யமாயிருப்பது.

அபரோக்ஷம் என்பது இதற்கு எதிரானது, அதாவது,  நமக்கு நன்றாகத் தெரிவது.

உதாரணமாக, திருப்பதி லட்டு என்ற வார்த்தையை எத்தனை விதமாக, எத்தனை நபர்கள் கூறக்கேட்டாலும், அவர்களின் வர்ணனையினால், அதை சுவைக்காமல் அனுபவமாகாது. இப்படி அனுபவத்தை அடையாமல் கேள்விப்படுகின்ற அனைத்துமே “பரோக்ஷ ஞானம்” ஆகும்.

அதுவே, அந்த லட்டை தின்று அதன் சுவையை ஆனந்தமாக இரசித்து உண்ணும் போது அது அனுபவமாகின்றது. இந்த அனுபவத்தை அடைவதே “அபரோக்ஷ ஞானம்” என்று அறியவும்.

அதாவது, கேள்வியறிவு பரோக்ஷம்.

அநுபவ அறிவு அபரோக்ஷம்.

அநுபவத்துக்கு வராதவரையில் ஒன்றைப் பற்றிய அறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

ஆத்மாவுக்கான விஷய சாரங்களை எவ்வளவுதான் புத்தகத்தில் பார்த்தும், படித்தும் அதைப்பற்றி பேஎசியும் பயனில்லை. குருவே உபதேசம் செய்தும்கூட, அது காது வழியாக மூளைக்குள்ளே போனாலுங்கூட, பயனில்லை. அதுவரை அது பரோக்ஷம்தான்.

ஆத்மாவிலேயே அது அநுபவமாக மாறவேண்டும். அப்போதுதான் அபரோக்ஷம்.

இதிலே வேடிக்கை என்னவென்றால்,  குரு உபதேசம் மூளையில் ஏறியவுடன் நமக்கு ரஹஸ்யமாக இருப்பது போன்று தோன்றவில்லை. மூளைக்கு நன்றாக விஷயம் புரிகின்றது. ஆனாலும் அது உயிரின் அநுபவமாக இல்லாததால் அதை பரோக்ஷ ஞானம் என்றே வைக்கவேண்டும்.

எப்போது அது உயிருக்கு உள்ளேயே சென்று அநுபவமாகின்றதோ அப்போதுதான் அதற்கு அபரோக்ஷ அநுபூதி என்ற பெயர்.

இதிலேதான், முரண்பாடு உள்ளது போன்று தெரியும்.

எப்படியென்றால், குருவின் உபதேச வாக்கியத்தின் வாயிலாக நன்றாகத் தெரிந்து, மூளைக்கு அது எட்டும்போது, அதற்கு ‘ஒளித்து வைத்தது’, ‘ரஹஸ்யமானது’ என்று அர்த்தம் புரியும் பொழுது அது, ‘பரோக்ஷ’ ஞானம்’ ஆகின்றது!

பரமரஹஸ்யமாக இருக்கப்பட்ட உயிரின் உள்ளுக்குள்ளே அந்த ஆத்ம அனுபவம் தோய்ந்து, உறைந்து போய், புலன்களுக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற வாக்கு, மூளை எல்லாம் மறைந்து, அந்த ஆத்ம அனுபவத்தில் நிலைப்பெற்றிருப்பதை ‘அபரோக்ஷ ஞானம்’ ஆகின்றது.