ஞானியும், அஞ்ஞானியும்

ஞானிகள் அஞ்ஞானம்  நீங்கப்பெற்றத்தால், அவர்கள் உறங்கினாலும், கண்விழித்தாலும் சத்து, சித்து, ஆனந்தம் கலந்த அந்த ஜீவ ஜோதியை பொருந்தி இருப்பதால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை  என்ற மூன்று ஆசைகளிடமும் இவர்கள் பொருந்துவதில்லை.

ஆனால், அஞ்ஞானிகள் உறங்கி எழுந்தவுடன் அவர்களிடம் உள்ள அறியாமை (அஞ்ஞானம்) நீங்காததால், அவர்களிடம் இந்த மூன்று ஆசைகளும் உண்டாகின்றது.

இன்பமாகவோ, துன்பமாகவோ, நமக்கு விளையும் அனுபவங்களுக்கு ஆதாரமனவற்றை ‘விஷயம்’ என்பர்.

நாம் இன்ப, துன்பங்களாக அனுபவிக்கும் விஷயங்கள் கணக்கற்றவைகளாக உள்ளன. நாம் பற்று வைக்கின்ற விஷயங்கள், நம்முடைய விருப்பங்கள் எண்ணற்றவைகளாகவும் உள்ளன.

ஆசைகள் அனேகம் இருக்க, இந்த மூன்றையும் மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்றால்,

எல்லா ஆசைகளும், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய  இந்த மூன்று ஆசைகளுள் அடங்கிவிடும் என்பதினால்தான் பெரியவர்கள் இந்த மூன்று ஆசைகளை மட்டும் குறிப்பிடுகின்றார்கள்.

மனைவியும், மக்களும், பொன்னும் மமதை செய்தமுதம் போல நினைவினா னேயஞ் செய்து நீணிலத்துள்ள வெல்லா மனையவர்க்காகச் செய்வர்“- யோகவாசிஷ்டம்.

‘மனைவி, குழந்தைகள் மற்றும் பொன் ஆகியவற்றின் மீது கொண்ட பற்றால், தம்முடையவை என்னும் மமதை (என்னுடையது என்னும் பற்றே மமகாரம்) கொண்டு, அவற்றை, அமுதம் போல நேசித்து, அவற்றுக்காகவே உலக விவகாரங்களில் ஈடுபட்டு எதையும் செய்வர்’ என்பது இதன் பொருள்.

இப்படி, ஆசைகள் கொண்ட விசயத்தில், ஞானியர்கள் மட்டுமா ஆசைகளற்றவர்களாக இருக்கின்றார்கள்? சில அஞ்ஞானிகளும் கூட, மனைவி, மக்கள் (குழந்தைகள்), மற்றும் பொருளாசைகள் அற்றவர்களாக இருப்பதையும் காணமுடிகின்றதே என்றால்,

‘ஆசை இல்லாதவர்களை ஞானிகள்’ என்று அழைப்பது பொருத்தமற்றதல்லவா?

இது ஆசைகளை அறுத்தவர்களான அஞ்ஞானிகள் முதற்கொண்டு எல்லோரும் ஞானிகள் என்றும் பொருள் ஆகிவிடுமே என்றால், அஞ்ஞானிகள், வேறு ஏதேனும் காரணங்களினால், மூன்றுவித ஆசைகளை மட்டுமே தியாகம் செய்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஞானம் இல்லாததினால், அவர்களால் பிரபஞ்சத்தை, பரப்பிரஹ்ம ஸ்வரூபமாக காண இயலாது.

ஞானத்தினாலேயே ஒருவர் விருப்பு, வெறுப்பின்றி பிரபஞ்சத்தின் உண்மைச் சொரூபத்தை அறிய முடியும்.

அதனால், அஞ்ஞானிகளுக்கு, பிரபஞ்சத்தின்கண் உள்ள பார்வை, அவர்களது அறியாமையினாலேயே மறைக்கப்பட்ட தோஷ திருஷ்டியாகும்.

முக்காலத்திலும் நிலைத்திருப்பது எதுவோ அது சத்தியம் என்றும், உருவாகி, அழியும் காலம் வரை நிலைத்திருப்பதைப் போலத் தோற்றமளிப்பவை  மித்யா” என்றும் வேதாந்தம் வகுக்கின்றது.

இவ்வாறு பிரபஞ்சம் மித்யா எனக் கற்றறிவது, கேட்டறிவது போன்ற கேள்வி ஞானங்கள் எல்லாமே  பரோக்ஷ ஞானம்” எனப்படும்.

ஆத்ம ஞானத்தினால், தானே அதுவாகி உணர்வாய் நிலைப்பது  அபரோக்ஷ ஞானம்” எனப்படும்.

ஆசைகளை அறுத்த அஞ்ஞானிகளின் புத்தியை பரோக்‌ மித்யா புத்தி” என்கின்றார்கள்.

அதாவது, பரோக்‌ஷ ஞானத்தினால், உலகம் மித்யா என அறிந்து கொண்டு, அதனிடம் விரக்தி உண்டாவதால், ஆசைகளை அறுத்தவர்கள் ஆகின்றார்கள் ஞானிகள்.

ஞானமுணர்ந்தவர்கள், ஜீவ பிரஹ்ம ஏகத்தை அபரோக்‌ஷமாக, உணர்ந்தறிவதால், பரப்பிரஹ்மத்தில் நிலைத்திருக்கும் புத்தி, அபரோகஷ சத்திய புத்தி” ஆகும்.

அதுவே அடையத்தக்கது. அதுவே பிரபஞ்சத்தில் கீர்த்தியுடன் இருக்கவைப்பது.

பரோக்‌ஷ  ஞானம் மட்டுமே உள்ள அஞ்ஞானிகளுக்கு, தற்சமயம் குறைபாடுடையதாகத் தோன்றும் விஷயங்களே, காலப்போக்கில், நாட்பட நாட்பட, நல்லவைகளாகத் தோன்றும்.

(அதாவது அவையும் சத்தியம் போலத் தோன்றி, அவற்றின் மீது மீண்டும் அவர்களுக்கு ஆசை உண்டாகும்).

காலப்போக்கில், ஆசைகளற்ற நிலை மாறி, மீண்டும் இராகம் அல்லது ஆசைகள் தோன்றக் கூடிய, திடமற்ற புத்தியால் அஞ்ஞானிகளுக்குத் தோன்றும் இந்த ஆசை அல்லது விராகம், மந்த விராகம் எனப்படும்.

ஞானிகளிடம், அபரோக்‌ஷ சத்திய புத்தியால் விளையும் விராகம், திடமான, நிலைத்த புத்தியால் விளையும் திட விராகம் ஆகும்.

அஞ்ஞானிகளிடம் மந்த விராகத்தால் ஆசைகளற்ற நிலை காணப்பட்டாலும் கூட, அது காலப்போக்கில் மாறக் கூடியதே.

ஞானிகளிடம் காணப்படும் ஆசைகளற்ற நிலையே திடமானது.

ஸ்ரீ பகவான், பகவத் கீதையில், ‘ஞானத்தினால் விளையும் திடபுத்தி இல்லாதவர், புலன்களால், கடலலை போல மனதில் எழும் எண்ணற்ற ஆசைகளை அறுக்க இயலாது’ என்று கூறியிருப்பதையும் அறிய வேண்டும்.

அஞ்ஞானிகள் மூன்று வகையான ஆசைகளைத் தியாகம் செய்த போதிலும், அவர்கள் மனதில், வெளித் தெரியாத வண்ணம், சூக்ஷமமாக, ஆசைகள்  நிறைந்து இருக்கும்.

அப்படி மனதுக்கும், கண்ணுக்கும் புலப்படாமல் விளங்கும் ஆசையே அநுற்புத்த ஆசைஎன அழைக்கப்படுகின்றது.

அஞ்ஞானிகள், பிரபஞ்ச தோஷ திருஷ்டியாலும், பரோக்‌ஷ மித்யா புத்தியாலும், விருப்பத்துடன் கூடிய, அத்தனைக்கும் ஆசைப்பட்ட மந்த விராகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் கொண்டுள்ள விராகம், காலப்போக்கில் புதிய ஆசைகளாக மாறும். அது மட்டுமன்றி, அஞ்ஞானிகளிடம், ஆசைகள் சூக்ஷம வடிவில், அவர்களுக்கே புலப்படாவண்ணம் விளங்கவே செய்யும்.

அதனால் ஆசை இல்லாதவர்கள் எல்லாம் ஞானிகள் என்றால் அது சரியாக இருக்காது.

‘ஆதியில்லாத சன்மாத்திரமாம் அறிவின் சொரூப ஞானம் பெற்ற நிலைத்த புத்தியுடையவர்களே ஆசைகளை வென்றவர்கள். மெய்யறிவில்லாத அஞ்ஞானிகள் ஆசைகளை கடக்க இயலாது’

என்கின்றது யோக வாஸிஷ்டம் என்னும் நூல்.

ஆசைகளற்று இருக்கும் தன்மை ஞானிகளின் இலக்ஷணமாகவும், ஆசைகள் வசப்பட்டு இருப்பது அஞ்ஞானிகளின் இலக்ஷணமாகவும் கூறப்படுகின்றது.

ஓம் தத் சத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *