ஆத்மநிச்சயம் (பகுதி – 8)

மேலும், விழிப்பு, கனவு, மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்ற அனுபவத்தின் வாயிலாக, சாக்ஷியாக இருக்கும் மாறுதலில்லாத சைதன்யம் இருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொள்ளலாமே, இந்த அனுமானத்தை வைத்து ஆத்மாவை அறிந்துக்கொள்ளலாமே? இதற்கு சாஸ்திரப் பிரமாணத்தின் அவசியம் என்ன இருக்கின்றது? என்றும் சிலருக்கு சந்தேகம் வரலாம்.

இங்கு என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஞானம் என்பது அறிவை அடையும் விசயம். அந்த தெளிந்த அறிவு ஒருவனுக்கு சாஸ்திரத்தின் வாயிலாக மட்டுமே உண்டாக முடியும், அது அனுமானத்தினால் உண்டாக முடியாது.

ஆழந்த உறக்கத்தில் இருந்து ஒருவன் விழிப்படைந்தவுடன் மீண்டும் அவனிடம் அறியாமை ஒட்டிக்கொள்ளும், அதனால், அவனுக்கு அனுமானத்தின் வாயிலாக ஸ்வயம் பிரகாசமான ஆத்மா ஒன்று இருக்கின்றது என்ற அறிவு இருக்கலாம். ஆனால், சந்தேகமில்லாத ஆத்மாவின் அனுபூதி நிலை சாஸ்திரத்தின் வாயிலாக மட்டுமே ஏற்படும்.

நம்முடைய ஊனக்கண்ணினால், அனுமானத்தினால் ஏற்படுகின்ற ஞானம் பொது அறிவுதான். அதாவது எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்தது ஒரு வஸ்து என்ற சாமானிய அறிவுதான் அனுமானத்தினால் கிடைக்கும். இதனால், ஆத்மாவின் ஒப்பற்ற ஒற்றை நிலை தெரியாது. மனம் என்ற அந்தக்கரணத்திற்கு மீறியதாக உள்ள ஞானம்தான் முக்தி பெறுவதற்குத் தேவை.

இந்த நிலை வேத வாக்கியத்தினால் மட்டுமே உண்டாகும். ‘எந்த ஆத்மாவை அடைவதற்கு முயற்சி செய்கின்றானோ, அந்த ஆத்மாவின் அனுகிரகத்தினால் அதை அடைகின்றான்’ என்று வேதமே கூறுகின்றது.

ஆந்த உறக்கத்தில் மனம் அடங்கி விடுகின்றதே, அப்படியிருக்கும் பொழுது, வேதவாக்கியத்தினால் என்ன பயன் என்ற அடுத்த சந்தேகம் எழக்கூடும்.

அதாவது, ஆழ்ந்த உறக்கத்திலும் அஞ்ஞானம் அழிவதில்லை, அப்படி அழிந்துவிடுமானால், தூங்கும் பொழுதே அனைவரும் முக்தர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா? அவர்கள் தூங்கி எழுந்த உடனும் முன்பு இருந்த அதே நிலையிதான் இருக்கின்றார்கள். அவர்களது அறிவில் எந்த மாற்றமும் உண்டாகிவிடுவதில்லை.

இதிலிருந்து அந்தக்கரணமான மனம் அடங்கினால், ஒருவித அமைதியும், ஆனந்தமும் உண்டாவது உண்மைதான், ஆனால், அது ஆழந்த உறக்கத்தின் மூலமாக கிடைத்தாலும், ஞானம் உண்டாவதில்லை.

உண்மையில், ஆத்ம சைதன்யம் அந்தக்கரணத்தில் பிரகாசிக்கும் பொழுது ஏற்படும் அறிவு நான் என்று தோற்றம் கொள்கின்றது. வெளிவஸ்துவை மனம் அறியும் பொழுது, மனதின் விருத்தி பார்க்கப்படும் பொருளின் ரூபத்தை அடைகின்றது. அப்பொழுதுதான் அந்த வஸ்துவைப்பற்றி மனம் அறிகின்றது என்பதாகும்.

ஒவ்வொரு சரீரத்திலும் உள்ள அந்தக்கரணம் வெவ்வேறானது, ஆகவே அந்தந்த மனதின் மனோ விருத்திகளும், அதன் மூலம் உண்டாகின்ற அறிவும் வெவ்வேறானதே.

ஆத்மாவிற்கும், அந்தக்கரணத்திற்கும் அறிபவன், அறியப்படுவது என்ற சம்பந்தம் மட்டும்தான். ஆத்மா அந்தக்கரணத்துடன் கலந்து ஜீவனாகக் காணப்படும் பொழுது அஞ்ஞானத்தால் அஹங்கார சம்பந்தமாகி (நான் என்ற சரீர எண்ணம்) வெளியில் உள்ள வஸ்துக்களின் சம்பந்தத்தினால் நல்லதாகவோ, கெட்டதாகவோ பாதிக்கப்பட்டவனாக காணப் படுகின்றான்.

உலகத்தை தவிர ஆத்மா வேறுபட்டது என்பதை அறிந்தால், ஆத்ம, அனாத்ம ஞானம் நன்கு விளங்குகின்றது. இது வேத வாக்கியத்தினால் மட்டுமே ஏற்படும். அதனால், ‘தத்வமஸி’ என்ற மஹாவாக்கியங்கள் தேவையற்றது என்று நினைக்கக்கூடாது. காரணம், அதனால் மட்டுமே மூல அஞ்ஞானம் நிவர்த்தியாகும்.

  1. ஆத்மாவை அறிவிக்கும் சாஸ்திரம்

எவன் ஒருவனுக்கு ஆத்ம, அனாத்ம விவேகம் இருந்தும், அவனது சுய அறிவினால் ஞானம் வராமல் இருக்கின்றதோ, அவன் அவசியம் வேத விசாரத்தினால் மட்டுமே அதை அடைய முடியும்.

ஒரு காட்டில் 10 நபர்கள் மரம் வெட்ட சென்று, பல பகுதிகளில் பிரிந்து சென்று விடுகின்றார்கள். மாலை நேரத்தில் அனைவரும் ஒன்று கூடுகின்றார்கள். அனைவரும் வந்து விட்டோமா என்று ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்கின்றார்கள். அப்படி எண்ணிப்பார்க்கின்ற ஒவ்வொருவனும் தன்னை விட்டு விட்டு எண்ணிப்பார்க்கையில் 9 நபர்கள் மட்டுமே கணக்கில் வருகின்றது.

காரணம் ஒவ்வொருவனும் தன்னை விட்டு விட்டு மற்றவர்களை மட்டுமே எண்ணுகின்றான்.

10 நபரைக் காணவில்லை என்று ஒவ்வொருவனுமே கூற, அங்கு புதியதாக வந்த வழிபோக்கனான மற்றொரு நபர் இவர்களை நிறுத்தி எண்ணிக்காட்டி அந்த 10 – வது நபர் நீதான் என்று எண்ணியவனிடம் கூற அவனுக்கு சரியான அறிவு வந்து விட்டது. அதுபோலத்தான் வேதவாக்கியம் இங்கு உபயோகப்படுகின்றது.

இதுப்போல, உலகத்தைக் காணும் போது, இரண்டு வஸ்துக்கள் உண்டு என்ற அறியாமையே காரணமாகும். அஞ்ஞானமும், அதன் விளைவுகளும் ஞானத்தினால் மட்டுமே நீங்கும். உலகில் உள்ள மாயைக்கு காரணம் அஞ்ஞானம். அந்த அஞ்ஞானம் ஆத்மாவைப் பொருத்து ஏற்பட்டிருப்பதினால், பித்யக்ஷம், அனுமானம் போன்றவற்றால் நீக்க முடியாது. இந்த மூல அஞ்ஞானத்தை வேத வாக்கியத்தினால் மட்டுமே நீக்க முடியும்.

முன்பு கூறப்பட்ட உதாரணத்தில் அந்த 10 வது நபர் நீதான் என்று கூறியவுடன் அவனுக்கு அறிவு உண்டாகி, அவனது சந்தேகம் நீங்கியதுப் போல, ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிய ஆவலுடன் இருப்பவனிடம் வேதம் நீதான் அந்த ஆத்மாஎன்று கூறினால், அவனுக்கு அஞ்ஞானம் நீங்கும்.

இதுவும்கூட, தத்வமஸி என்ற வேத வாக்கியத்தைக் கேட்டவனுக்கெல்லாம் இந்த ஞானம் வந்துவிடாது. யார் ஒருவனுக்கு ஆத்ம, அனாத்ம விவேகம் இருக்கின்றதோ, அவனுக்கு மாத்திரமே இந்த ஞானம் உண்டாகும்.

இன்னும் ஒரு சிலர், இந்த வேதவாக்கியத்தை படித்து விட்டு. வேதம் ‘நீ அதுவாகவே இருக்கின்றாய்’ என்று கூறுவதினால் ‘நான் பிரம்மம்’ என்ற உபாசனையை தியானமாகச் செய்து வருவார்கள்.

இப்படிச்செய்வதினால், ஜீவனுக்கு உள்ள சுக, துக்கங்கள் நிவர்த்தியாகி விடுமென்றும், தான் அந்த பிரம்மமாக ஆகிவிடுவோம் என்றும் கருதி தியானத்தில் முயற்சிக்கின்றனர்.

இங்கும் ஒரு உண்மையை அறிய வேண்டும், அதாவது, பிரத்யக்ஷமான அறிவிற்கு மாறாக தியானத்தினால் இதை சாதிக்க முடியாது. தியானத்தினால் சித்த ஏகாக்கிரம் மட்டுமே உண்டாக முடியுமே தவிர பரப்பிரம்மமாக ஆகிவிடமுடியாது.

ஒரு வஸ்துவைக் குறித்து திவிரமாக தியானம் செய்யும் பொழுது, அந்த வஸ்து வாஸ்தவத்தில் இல்லாமல் இருந்தாலும், அது இருக்கின்றதாகவே தோற்றம் கிடைக்கின்றது அல்லவா? அதுபோல, ஜீவனே ஆத்மா என்று தியானம் செய்வதினால், ஜீவனிடத்தில் உள்ள துக்கம் போய்விடுமா? என்றால், தியானம் மன ஒருமைப்பாடினைக் கொடுத்து, அதன் வாயிலாக துக்கம் நீங்கி விடுவதாக இருந்தாலும், அது நிரந்தரமான நீக்கமாக இருக்காது. மீண்டும் மனம் உளைச்சலுக்கு உட்படும் போது துக்கம் மீண்டும் வந்து விடும். ஏனெனில், காரியத்தினால் ஏற்படும் வஸ்து சாஸ்வதமாக இருக்காது.

அதுபோல, தியானத்தினால் ஏற்பட்ட ‘நானே பிரம்மம்’ என்ற நிலையும் நீடிக்காது. அதாவது பிரத்யக்ஷ ஞானம் வெளியே உள்ளவைகளால் உண்டாவது, அதுவே ஆத்மானுபவம் உள்ளே உண்டாகுவது. இந்திரியங்கள் வெளி நோக்குடையன, அவைகள் உள் நோக்குபவைகள் அல்ல.

அதனால், இந்த இந்திரியங்களினால் ஏற்பட்ட ஞானம் எப்பொழுது நிராகரிக்கப்படுகின்றதோ, அப்பொழுதே ஜீவாத்மாவின் ஸ்வருபம் விளங்கும் என்று கட உபநிஷதம் விளக்குகின்றது.

நான் என்ற பதத்தினால் ஆத்மா குறிப்பிடப்படுவது ஏனெனில், ஆத்மாவிற்கு மிகவும் நெருங்கியதாக காணப்படுவது நான் என்ற பதத்தால் குறிக்கப்படும் மனிதன் மட்டுமே ஆவான்.

இது அவனது உள் நோக்கில் கிடைக்கும் அறிவு. இதைவிட நெருங்கிய வஸ்து இருக்க முடியாது என்பதினால் நான் என்று குறிப்பிடுகின்றோம்.

ஆத்மாவை வேறு வார்த்தைகளினால் அறிவிக்கமுடியுமானால், அது அனாத்மா ஆகிவிடும். வேதவாக்கியம் பிரமாணமற்றதாகிவிடும். ஆகவே, ‘நான்’ என்ற வார்த்தை அந்தக்கரணத்தையே குறிக்கின்றது, ஆத்மாவை மறைமுகமாக தெரிவிக்கின்றது.

ஆதனால், ஆத்மாவை எந்தப் பதத்தினாலும் நேரடியாக விளக்கிக் கூறமுடியாது. நான் என்ற பதத்தினாலும் ஆத்மாவை நேரடியாக குறிக்க முடியாது. ஒரு வஸ்து குறிக்கப்பட வேண்டுமானால், அதற்கு சில நிலைகளும், குணங்களும் இருக்க வேண்டும். ஆனால், ஆத்மாவிற்கு எந்த குணங்களும் கிடையாது. வெட்டவெளியான ஆகாசத்தைப் பார்த்து அது நீல நிறமாக உள்ளது, மேகங்களால் சூழ்ந்துள்ளது என்று அறியாதவன் கூறுவது போன்று, அஞ்ஞானத்தின் காரணமாக ஆத்மாவிற்கு சுக, துக்கங்கள் உள்ளது போன்று எண்ணுகின்றோம்.

ஒரு வார்த்தையால் ஒரு வஸ்துவைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால், அந்த வஸ்துவுக்கு சம்பந்தப்பட்ட குணமோ, காரியமோ குறிக்கப்பட வேண்டும். அல்லது பொதுவாக அந்தக் குணம் இருப்பதாக உலகத்தில் அனுபவத்தில் இருக்க வேண்டும்.

ஆத்மாவிற்கு இது போன்ற சம்பந்தமே கிடையாது. இதற்கு குணம் இல்லை. கிரியை இல்லை. சாமான்ய பேச்சில் கலந்து கூறப்படுவதுமில்லை. ஆகவே வார்த்தைகளினால் ஆத்மா குறிப்பிடப்படமுடியாது.

இப்படி வார்த்தைகளினால் குறிப்பிடப்படமுடியாத ஆத்மாவை ‘தத்வமஸி’ என்ற வார்த்தை மட்டும் எப்படி குறிப்பிட முடியும் என்ற சந்தேகம் வரலாம்.

‘நான்’ என்பது அந்தக்கரணத்தைக் குறிக்கின்றது. அந்தக்கரணம் ‘சித்’ உடன் சம்பந்தப்பட்டது. ஆகவே அந்தக்கரணத்தின் வாயிலாக ஆத்மாவை உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

ஒரு வஸ்துவை மறைமுகக் குறிப்பினால் அறியப்படலாம். ஆனால், இல்லாத வஸ்துவை எப்படி அறிவது? அதனால், ‘நான்’ என்ற வார்த்தையினால் அப்படி மறைமுகமான அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. வேறு காரணங்களினால் அறிவிக்கப்படாத ஆத்மா தானே அறிவு மயமாக இருக்கின்றது என்பதுதான் இதற்குக் காரணம்.

இதை ஒரு உதாரணத்தின் வாயிலாக அறிய முற்படலாம். ராமன் என்ற ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான். அவனை, அவனது பெயர் கூறி அழைத்ததும் அவன் எப்படி விழித்துக் கொள்கின்றான் என்று கவனித்தோமானால், அவன் விழித்துக் கொண்டிருந்தாலன்றி வார்த்தையைக் கேட்க முடியாது. கேட்டாலன்றி வார்த்தையின் உட்கருத்தின் அர்த்தத்தை அறிய முடியாது. இதை அவன் உணரவேண்டுமானால், விழித்திருக்க வேண்டும். விழித்திருந்தால் அவனை பெயர் கூறி எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை. அவன் தூங்கும் போது அந்த வார்த்தைக்கும், அதன் உட்கருத்துக்கும் உள்ள சம்பந்தம் அறிவிற்கு வராமல் இருந்த போதிலும், அந்த வார்த்தையினால்தான் எழுப்பமுடிகின்றது என்பதை அறியவேண்டும்.

அப்படிப்பார்த்தால், பொய்யான ஒன்றிலிருந்து உண்மையை அறிய முடியுமா? அதாவது அந்தக்கரணத்தின் வாயிலாக ஆத்மாவை எப்படி அறிய முடியும் என்ற அடுத்த சந்தேகம் எழலாம்.

அதாவது இருமைகள் நிறைந்தது இந்த உலகம். உண்மை – பொய், வெளிச்சம் – இருள், இன்பம் – துன்பம் போன்ற இருமைகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது, இவைகள் இரண்டுமே இருந்தால் மட்டுமே மற்றொன்றை தெரிந்து கொள்ள முடியும்.

அதுபோல, எதுவுமே உண்மை, பொய் இரண்டும் கலந்ததுதான். உதாரணமாக, ஒரு குடம் இருக்கின்றது. இதில் உண்மை, பொய் கலந்து இருக்கின்றது. குடம் ‘இருக்கின்றது’ என்ற அம்சம் அந்த குடம் இருக்கின்றவரை பொருந்தும். அந்த குடம் உடைந்து விட்டாலோ ‘இல்லை’ என்பது பொருந்து.ம். ஒரே சமயத்தில் ‘இருத்தல்’, ‘இல்லை’ என்ற இரண்டும் சேர்ந்து இருக்காது.

அடுத்தடுத்து அந்த நிலை வரும் என்றும் கூறமுடியாது. ஏனெனில், மாறி, மாறி தோன்றும் எதுவும் சத்தியமாக இருக்க முடியாது. ஆகவே, இது உண்மையுமல்ல, பொய்யுமல்ல, எல்லாம் தோற்றமே ஆகும். அதுபோல, இந்த உலகம் இருந்த போதிலும், அது பல காரியங்களுக்கு பயன் படுகின்றது.

அதேபோன்று, அந்தக்கரணம் முற்றிலும் உண்மையில்லாமல் போனாலும், அது தோன்றுகின்றது, வேலை செய்கின்றது. அதன் மூலம் ஆத்மாவை அறிய முடிகின்றது.

ஆத்மா நித்யமானது, மாறுதல் அற்றது. ஞான மயமானது. இப்படிப்பட்ட ஆத்மாவுடன் அஞ்ஞானம் எப்படி சேர்ந்து இருக்க முடியும் என்றால், நம்முடைய மனதினிலே ‘எனக்குத் தெரியவில்லை’ என்று தோன்றுவதினாலேயே அஞ்ஞானம் அங்கு இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே, அஞ்ஞானம் இருந்தால் ஒழிய அந்த எண்ணம் வராது. ஆத்மா அறிவு மயமானதாலும், அஞ்ஞானம் இருக்கின்றது என்று உணர்கின்றோம்.

இதை எப்படி அறியலாம் என்றால், ஒரு பானை இருகின்றது, அது உடைந்த பின்பு அங்கு இல்லை. ஆனால், அந்த பானை என்ற நாம, ரூபங்கள் கொடுப்பதற்கு முன்பு அங்கு என்ன இருந்திருக்கும் என்று தீர விசாரித்து அறிய முயன்றோமானால், நமக்கு கிடைக்கும் அறிவு ‘மண்’ என்ற மூலப்பொருள் அந்த பானை தோன்றுவதற்கு காரணமாக இருந்திருப்பது தெரியவரும்.

அதுபோல, ஆத்மாவிடம் அஞ்ஞானம் இருப்பதாக தோன்றுவது எல்லாமே அந்தக்கரணத்தின் வெளிப்பாடே ஆகும். இங்கும் நாம் வேதவாக்கியத்தை பிரமாணமாகக் கொண்டு ஆராய்ந்தோமானால், ஆத்மாவைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது என்பது புரியும்.

ஞானம் வருவதற்கு முன்பு நம்மிடம் அஞ்ஞானம் இருந்ததை நாம் அறிவோம். ஞானம் வந்திவிட்ட பிறகு அஞ்ஞானம் நீங்கி விட்டதையும் நாம் அறிவோம். இந்த இரண்டு அறிவுகளையும் கொடுப்பது எது என்று பார்த்தால், அது ஆத்மாவைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

நல்ல உத்தம அதிகாரிக்கு இந்த வேத வாக்கியம் மட்டுமே போதும், அவன் ஞானத்தை அடைய, அதை விடுத்து, வேறு பிரமாணங்களினால் (ஜபம், கர்மா, தியானம்) முயற்சி செய்வது என்பது, கண் என்ற புலனினால், சப்தத்தை கேட்க முயற்சிப்பதுப் போலாகும்.

இதிலிருந்து, நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், ‘ஆத்மா’ (பிரம்மம்), ‘அனாத்மா’ (உலகம் மற்றும் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும்) இரண்டும் எல்லோருக்கும் பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்களினால் விளங்குகின்றது.

இதில், அனாத்மாவை நாம் அறிகின்றோம். ஒரு வஸ்து அறியப்படவேண்டுமானால், அறிபவன் ஒருவன் இருக்க வேண்டும். அப்படி அறிபவனே ஆத்மா. இது முதலிலேயே அறியப்பட வேண்டும்.

இங்கு பிரச்சனையே என்னவென்றால், அறிபவனான ஆத்மாவுக்கும், அறியப்படுகின்ற வஸ்துக்களான அனாத்மாவிற்கும் இடையில் இருக்கும் அஞ்ஞானமே பிரச்சனை ஆகும்.

அதனால், நித்ய, அநித்ய வஸ்து விவேகம் யாரிடம் முதலில் உண்டாகின்றதோ, அவனே ஆத்மாவை அறியக்கூடிய அதிகாரி ஆகின்றான். அந்த அதிகாரிக்கே சாஸ்திரத்தில் கூறப்பட்ட மஹா வாக்கியத்தின் பொருள் உணர்ந்து, அவன் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியும்.

அப்படி ஆத்மாவை அறிந்தவனுக்கு, இனி அறிவதற்கு ஒன்றுமில்லை.

ஓம் தத் சத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *