ஆத்மநிச்சயம் (பகுதி – 7)

உண்மையில், ஜீவாத்மாவே பரமாத்மாதான். ஆனால், இதை உணராதவனுக்கு ‘துவம்’ என்ற பதத்திற்கு விளக்கம் தெரிந்து கொள்ளாமல் சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுகின்றான்.

இவன் பரமாத்மாவை மற்ற வஸ்துக்களைப் போன்று தனக்கு வேறானதாகவும், சரீரத்தினால் அறியப்பட வேண்டியது போலவும் எண்ணுகின்றான். ஆத்மா இவனுக்கு பிரத்யக்ஷமாக தோன்றுவதில்லை. அனாத்மாவான சரீரம்தான் பிரத்யக்ஷமாக தோன்றுகின்றது.

இது எப்படியென்றால், மஞ்சள்காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றது. ஆனால், இவன் காணும் வஸ்துக்கள் மஞ்சள் நிறத்தில் இல்லை. அது இவனது கண்ணின் குறைபாடாகும்.

அதுபோன்று, இவனுக்கு தன்னுள் இருக்கும் சைதன்யம் எங்கோ வெளியில் இருப்பது போன்று தெரிகின்றது.

மோக்ஷம் அடைய விரும்புபவனுக்கு ஆத்மா, அனாத்மா இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாச அறிவும், வேத வாக்கியமும் சேர்ந்துதான் ஞானத்தைக் கொடுக்கும். ஆத்ம, அனாத்ம விவேகம் மட்டும் இருந்தால் போதாது. அனுமானத்தினால் புத்தி, அந்தக்கரணம் போன்றவைகள் ஆத்மா அல்ல என்று மட்டுமே அறிந்துகொள்ள முடியும். முடிவான ஞானம் பெறுவதற்கு இது போதாது. சுருதி வாக்கியம் மட்டுமே (தத்துவமஸி) அதைக்கொடுக்கும்.

வேதவாக்கியத்தை பிரமாணமாக ஏற்காமல், அனுமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆதாரமாக எண்ணினால், லக்ஷியத்தை அடையாமல், கஷ்டமான நிலையும் உண்டாகும்.

உதாரணமாக, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் வேதத்தை ஏற்காமல், அனுமானத்தையும், புத்தியையும், யுக்தியையுமே மட்டும் ஆதாரமாக ஏற்றதினால், ஆத்மாவே கிடையாது என்றும், சூன்னியம் மட்டுமே எஞ்சியுள்ளது என்ற தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர்.

வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது என்ற ஞானம் இவர்கள் வேதத்தை அறியாததினால் தெரியாமல் போனது பரிதாபத்திற்கு உரியது.

ஆத்மாவுக்கு துக்கம் என்பதே கிடையாது. அது சிருஷ்டிக்கப்பட்டவைகளைச் சேர்ந்தது அல்ல என்ற உண்மை வேறு எங்கு இருந்தும் பெறமுடியாது என்று வேதமே கூறுகின்றது. இதை தவறு என்று கூறவோ, மறுக்கவோ முடியாது. ஆகவே வேதம் நம்பத்தகுந்த பிரமாணம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்படிப் பிரமாணங்களினால் அனாத்மாக்களைப் பற்றிய சந்தேகங்களெல்லாம் நீக்கப்பட்டபின் சுருதி வாக்கியத்தில் எவ்வித சந்தேகமும் ஏற்பட இடமில்லை. அறிவிற்குப் புலனாகும் உலகத்தைப் பொருத்து மட்டுமே சந்தேகம் ஏற்பட வாய்புண்டு. ஆனால், ஆத்மாவை அறிந்த பின் அறிவுக்கு விசயமாகும் இதர வஸ்துக்களே இல்லை என்று ஏற்பட்டபின் வேதவாக்கியத்தில் கூறியிருக்கும் விசயத்தில் சந்தேகம் ஏற்பட நியாயமே இல்லை.

உண்மையில் சந்தேகத்திற்கு காரணமாக உள்ள பொருள் ஆத்மாவாக இருக்க முடியாது. வேதவாக்கியம் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது. ஆனால், நமக்கு அந்த தத்துவார்த்தம் விளங்கவில்லையே என்றால், அதற்கு வேதம் காரணமில்லை. நாமேதான் காரணம் ஆகும்.

இதற்குக் காரணம் ஏற்கனவே கூறப்பட்ட உவமானத்தினைப் போன்றே மஞ்சள் காமாலை வந்தவனுக்கு அனைத்தும் மஞ்சளாகத் தெரிவது போன்று, இவனது புத்திக் குறைவினால், இவனால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதே ஆகும்.

மேலும் வேதத்தின் தத்துவார்த்தம் (அபரோக்ஷானுபூதி) அதற்கு யோக்கியதை உடைய உத்தம அதிகாரிக்கு மட்டுமே புலப்படும். ஆகவே நாம் நம்மை உத்தம அதிகாரிகளாகச் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி சாதன சதுஷ்டயம் அறிய வேண்டும்.

பொதுவாக, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹா வாக்கியத்தின் உண்மைப்பொருள் அஹம் என்பது அந்த ஆத்மாவைக் குறிக்கின்றது. அதைவிடுத்து,  நான் என்று இந்த உடலை நினைத்துக் கொண்டிருக்கின்றவன் மஹா வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாமல், நானோ ஒரு வரம்பிற்குட்பட்டவன், துக்கமுடையவன் என்பதினால் நான் (அஹம்)  எப்படி பிரம்மம் ஆக முடியும் என்ற சந்தேகம் உண்டாகலாம்.

ஆனால், வேதவாக்கியம் ஆதீதமான ஆத்மாவைக் குறிக்கின்றது. அதனால், எண்ணுபவன், எண்ணம், எண்ணப்படுகின்ற வஸ்து ஆகிய இந்த மூன்றும் அடங்கிய இந்த உலகமும், மாறுதலுக்கு உட்படாத ஆத்மாவும் வெவ்வேறு என்று வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஆத்மாவைத்தான் வேதம் தத்வமஸி என்றுபோது குறிப்பிட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சுகமும், துக்கமும் மாறுதலுக்கு உட்பட்டவையே, இவைகளுக்கு மீறி எது இருக்கின்றதோ அதுவே அறிவு மயம், ஆனந்த ஸ்வரூபம், அந்த பரப்பிரம்மம், இதுவே சுருதியின் தாத்பர்யம் ஆகும்.

வேதப்பிரமாணத்தினை வைத்து இந்த மஹாவாக்கியத்தின்படி ஏற்றுக் கொள்ள முடியாது என்பவர்கள் கருத்துப்படி, புதிய பிரமாணங்களின் வாயிலாக நிருபிக்கப்படவேண்டும் என்று எண்ணினால், அதற்கு செய்கை தேவை. அப்படிப்பார்க்கின்ற பொழுது, செய்கைக்கு ஆசை தேவை, ஆத்மா நமக்குள்ளேயே இருப்பதினால், அது எங்கோ வெளியில் இருப்பதைப் போன்று அதற்கு ஆசைப்பட்டு, காரியத்தை செய்ய முடியாது. ஏனெனில், ஆத்மா வேறு எதனாலும் அறியக்கூடிய வஸ்து இல்லை.

ஆத்மா பார்க்கப்பட முடியாதது, அளவிடப்பட முடியாதது, இந்திரியங்களுக்கு லக்ஷியமாக முடியாது. பிரத்யக்ஷ அறிவிற்கு விசயமாகாது. தேசம், இடம், காலம் முதலியவைகளை மீறியது. ரூபமற்றது, ஸ்வயம் பிரகாசமானது. ஆகையால்தான் வேதம் பார்க்கும் சக்தியை, பார்ப்பவனை நாம் பார்க்கமுடியாதுஎன்றது.

அனுமானத்தினாலும் ஆத்மாவைக் காணமுடியாது. அனுமானம் உண்டாக வேண்டுமானால், எண்ணப்படுகின்ற வஸ்துவுக்கும், எண்ணத்திற்கு காரணமான வஸ்துவுக்கும் சம்பந்தம் நேரிடையாக இருக்க வேண்டும். அப்படியான நேரிடைப்பார்வை வெளியில் உள்ள தனிப்பட்ட வஸ்துவைப் பொருத்துத்தான் முடியும். ஆத்மாவைப் பொருத்து இவ்விதம் ஊகங்கள் செய்ய முடியாது.

பிரத்யக்ஷம், அனுமானம் முதலிய பிரமாணங்களினால் வரும் அறிவு ஆத்மாவிற்கு வெளியான வஸ்துக்களைப் பொருத்தது. அவைகளைப் பொருத்துத்தான் அறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆகவே, இதர அறியும் கருவியோ, காரணங்களோ, இல்லாமலேயே தானாகவே ஆத்மாவைப் பற்றிய இரண்டற்ற நிலை விளங்கக்கூடியது.

இருத்தல், இல்லாமை என்று மேலே கூறப்பட்ட சோதனைகளினால் சரீரம், இந்திரியங்கள், பிராணவாயு இவைகள் ஆத்மாவல்ல என்று தெரிந்துக் கொண்ட பிறகு நமக்குள் நான் யார்? என்ற கேள்வி பிறக்கின்றது. அப்போது வேதம் கூறுகின்றது தத்வமஸி, (நீ அதுவாக இருக்கின்றாய்) என்று.

ஆத்மாவிற்கும், அனாத்மாவிற்கும் வித்தியாசம் நன்கு அறிந்தவனுக்கு ‘தத்வமஸி’ என்ற வேத வாக்கியத்தின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது, நம்முடைய சரீரமும், இந்திரியங்களும், மனம் போன்ற அந்தக்கரணமும் அறியப்படக்க்கூடியவை. ஆகவே, இவைகள் அறிபவனை விட வேறானவை. எவைகள் உண்டாகின்றனவோ, இருக்கின்றனவோ, மாறுபாட்டையும், நாசத்தையும் அடைகின்றனவோ அவைகள் எல்லாம் அனாத்மாவே ஆகும்.

இப்படி மாறிக்கொண்டு வரும் வஸ்துக்களின் ஆரம்பத்தையும், முடிவையும் அறியும் சாக்ஷியானவர் தனக்கு எவ்வித மாறுதலும் இல்லாமல், இதர வஸ்துக்களிடமிருந்தும் வேறுபட்டவராவார்.

மனிதர்களின் இந்திரியங்களினால் அறியப்படுகின்ற வஸ்துக்கள் அனைத்துமே அனாத்மா ஆகும். இப்படிப்பட்ட அனாத்மாவான வஸ்துக்கள் வந்துக்கொண்டும், போய்க்கொண்டும் இருக்கின்றன. இவைகளின் வருகையையும், போவதையும் பார்ப்பவன் வேறு. ‘நான்’ என்ற அஹங்காரமும், ஆத்மாவும் ஒன்றாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *