ஆத்மநிச்சயம் (பகுதி – 6)

இவ்வாறு, வேதாந்தத்தின் சித்தாந்தத்தில் இரண்டு முடிவான விசயங்கள் உள்ளன. அவைகள், 1. ஆத்மா, 2. அனாத்மா என்பனவாகும்.

இதில், ஆத்ம, ஆனாத்ம பேதத்தை மட்டும் அறிந்தால் போதாது, ஆத்மாவைத் தவிர மற்ற அனாத்மாக்கள் அனைத்துமே உண்மையல்ல. அவை கற்பிக்கப்பட்டவைகள் என்ற ஞானம் அவசியம். ஆத்மா மட்டுமே சத்தியம் என்ற அத்வைத ஞானமும் உண்டாக வேண்டும். இதைத்தான் வேதத்தின் மஹாவாக்கியங்கள் உண்டு பண்ணுகின்றன.

இதிலே சாங்கியர்கள் அனாத்மாவான இந்த பிரக்ருதியை மித்யா என்று ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது இந்த அஞ்ஞானம் அவர்களை பிரம்மத்தை அறிய தடையாக உள்ளது.

இந்த ஆத்மா, அனத்மா என்ற இரண்டில் அஞ்ஞானம் (அறியாமை) எதனுடன் சேர்ந்தது என்று பார்த்தால், பெரும்பாலனவர்களின் நினைப்பு அறியாமையே அறியாமைக்குக் காரணம் என்பதாகும்.

ஆனால், இங்கு ஒரு உண்மை நன்கு புலப்படவேண்டும். அதாவது அறியாமையே அறியாமைக்கு காரணமாக எப்படி இருக்க முடியும். அதாவது, இல்லாமையிலிருந்து இந்த உலகம் எப்படி உண்டாக முடியும்? ஒன்றுமில்லாத சூன்யத்திலிருந்து ஏதாவது உண்டாக முடியுமா? என்று வேதமே கேள்வி கேட்கின்றது.

இங்கு அறியாமை என்றால், அறிவு இல்லை என்ற அர்த்தம் கொள்ளக்கூடாது. இது ஒரு இருத்தலேயன்றி இல்லாமையல்ல. கனவு காணாத ஆழ்ந்த தூக்கத்தின் போது, ஒரு வஸ்துவையும் நாம் அறிவதில்லை. அதனால், இதை அறியாமை என்று கூறிவிட முடியாது. இது ஒரு இருத்தலையே காட்டுகின்றது. அது எப்படியென்றால், ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன், நான் நன்றாக தூங்கினேன் என்று கூறினான் என்றால், அவன் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினான் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லாமை என்பது ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். அதாவது, ஒரு புத்தகம் இந்த அறையில் இல்லை என்று கூறுவது, அந்த புத்தகத்தையும், அந்த அறையையும் அறிந்தவனால் மட்டுமே அப்படிக் கூறமுடியும். ஆழ்ந்த துக்கத்தில் அப்படிப்பட்ட ஒரு பொருளையோ, அறையையோ ஒருவன் உணர்வதில்லை. உணர்வது என்றால் அவனது தூக்கம் கலைந்துவிடுமே!, ஆகையால், தூக்கத்திலுள்ள அறியாமை அறியாமையின் வெளிப்பாடு என்று கூறமுடியாது. அதாவது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை என்பதினால் அறிவே இல்லை என்று நினைப்பது தவறு ஆகும்.

ஒருவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் சில ஞாபகத்திற்கு இல்லாமல் போகலாம், அதனால், அவனுக்கு அறிவு இல்லை என்று கூறமுடியுமா?

அதனால், அறியாமை (அஞ்ஞானம்) என்பது அறிவின் இல்லமை என்று கூறிவிட முடியாது. அது ஒரு வஸ்து இருத்தலையே குறிக்கின்றது. ஆழ்ந்த தூக்கத்தில் எல்லா வஸ்துக்களைக் குறித்தும் அறிவின்மை இருக்கின்றது. ஆனால், அந்த வஸ்துக்களுக்கு தனியாக இருத்தல் என்ற நிலை கிடையாது. இதிலிருந்து ஆத்மஸ்வரூபமானது கூட அஞ்ஞானத்தினால் தோற்றுவிக்கப்படுகின்றது என்பதை அறியலாம்.

இதை மேலும் ஒரு உதாரணத்தின் வாயிலாக அறியமுற்படலாம்.

ஆகாசம் எங்கும் நிறைந்து இருக்கின்றது என்பதற்காக ஒரு பானைக்குள் இருக்கும் ஆகாசமும், பானைக்கு வெளியே உள்ள அறையில் இருக்கும் ஆகாசமும் ஒன்றாகி விடாது. அதன் இருப்பு நிலை இடத்திற்கு தக்கதாக மாறி அமைகின்றது. காரணம் பானை சிறியது, அந்த அறை பெரியது. ஆகவே இரண்டும் ஒன்று என்று எப்படிக் கூறுவது? என்ற சந்தேகம் வரும். இங்கு குடத்தில் உள்ள ஆகாசமும், அறையில் உள்ள ஆகாசமும் குணத்தால் ஒன்று, ஆனால் இருத்தலினால் வேறுபடுகின்றது என்பது புரிகின்றது.

அதுப்போல, தத்வமஸிஎன்ற வாக்கியத்தினால் ‘தத்’ என்ற பதத்திற்கு கண்ணுக்குத் தெரியாத அந்த பிரம்மத்தையும், ‘துவம்’ என்ற பதத்திற்கு கஷ்டத்தை அனுபவிக்கும் மனிதனையும் குறிக்கும்பொழுது, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையான சேதனத்தத்துவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய, அந்த சேதன தத்துவத்தின் இருப்பிடத்தைப் பார்த்து, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று அர்த்தம் செய்துக் கொள்ளக்கூடாது.

உண்மையில், அந்த சேதனத்தத்துவத்தின் இருப்பிடமான மனிதன் துக்கங்களற்ற ஆனந்த ஸ்வரூபி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மா என்பது சுத்த சின்மயமானது. இதுவே, ஜீவனிடத்தில் பிரகாசிக்கின்றது. இந்த பிரகாஷமான சைதன்யத்தின் பிரதிபிம்பமே அந்தக்கரணத்தில் பிம்பித்து அறிவைக் கொடுக்கின்றது. அந்த அறிவுக்காரணமான சேதன தத்துவம் மனிதனிடத்தில் இல்லாவிட்டால், அவனால், நான் நன்றாக தூங்கினேன்என்றும் ஆழ்ந்த தூக்கத்தில் என் அருகே என்ன நடந்தது என்பதுக்கூட எனக்குத் தெரியாது என்று கூறவே முடியாது. இதிலிருந்து அறியாமைக்கூட அந்த சேததத்துவத்தின் அறிவின் வாயிலாக மட்டுமே பிரதிபிம்பிக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நீ அதுவாகவே இருக்கின்றாய் என்ற வாக்கியத்திலுள்ள நீ என்று கூறப்பட்ட அந்தக் காரண விருத்தியுடன் கூடிய ஜீவனுக்கு, ஆதாரமாக உள்ள ஆத்ம சைதன்யத்தைக் குறித்தே இரண்டிற்கும் ஒற்றுமை கூறப்படுகின்றது என்பதை அறிய வேண்டும்.

மேலும், அந்தக்கரணத்திற்கு (புத்திக்கு) தானாக அறியும் சக்தி உண்டு. இந்த அம்சத்தில் இதற்கும், ஆத்மாவிற்கும் சாமான்யமான ஒற்றுமை இருக்கின்றது. சில வேற்றுமைகளும் இருக்கின்றது. மனது பலவிதமான வஸ்துக்களின் தன்மைகளை அதனதன் ரூபங்களினால் அறிகின்றது. ஆனால், ஆத்மாவோ எந்தவிதமான மாறுதலுமில்லாமல் ஸ்வயம் ஜோதி பிரகாசமாக இருக்கின்றது. மேலும் அந்தக்கரணங்களினால் உண்டாகும்  அறிவு அந்தந்த வஸ்துவைப் பொருத்தமட்டில் உள்ளே ஏற்படுவதுதான், ஆனால், ஆத்மா விசயத்திலோ எந்த விதமான வரம்பிற்கும் உட்படாமல், அகண்டமான ஸ்வயம் பிரகாசமான அறிவு ஆகும்.

மனம் எதை உணர்கின்றதோ, அதைப்பொருத்தமட்டில் மட்டுமே அறிவு உடையதாக இருக்கின்றது. இந்த அறிவு ஏற்படும் அம்சத்தில் இந்த அறிவு ஆத்மசைதன்யத்திற்கு சமமானது என்று கூறலாம்.

புத்தியின் விசயத்தில் அறியப்படும் பொருள், அறியும் தன்மை இரண்டிலும் வித்தியாசத்தைக் காணலாம். ஆனால், ஆத்மாவிடத்திலோ அது ஸ்வயம்ஜோதி ஆனதாலும், சாசுவதமானதாலும், ஸர்வவியாபியானதாலும், மேலே கூறப்பட்ட பேத அம்சங்களை அதில் காணமுடியாது.

இதில் இந்த புத்தி நான் என்ற நிலையில் சில சமயம் மறைந்து விடுகின்றது. உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் புத்தி வேலை செய்யாது. ஆனால், சாக்ஷியாக சைதன்யம் மட்டுமே உள்ளது. ஆகவே, புத்திக்கும், சைதயத்திற்கும் வித்தியாசத்தை நாம் உணரலாம். ஆத்மா சுத்த ஞான மயமானது. எப்போதும் உள்ளது. ஆகையால், அதில் காண்பது, காணப்படுவது என்ற வித்தியாசமே கிடையாது.

ஆத்மா சின்மயமானது, முக்காலத்திலும் உள்ளது. ஆகவே, அதற்கு இரண்டாவதாக ஒரு வஸ்துவே கிடையாது. மனது ஆத்மாவின் அறிவை பெற்றுக்கொண்டு பிரதி பிம்பிப்பதால், அதனால், தானாக அறியும் சக்தி கிடையாது. மேலும் மனது நாசத்தை உடையது, அது ஆத்மாவைப்போல சாசுவதமானதல்ல.

அதுபோலவே, அந்தக்கரணத்தின் அறிவு நிலையும் அந்தந்த வஸ்துவைப் பொருத்து அந்தந்த சமயத்தில் மட்டுமே ஏற்படுகின்றது. ‘நான் புத்தகத்தை அறிகின்றேன்’, ‘நான் சுகமானவன்’, ‘நான் துக்கமானவன்’ என்று சமயம்வெவ்வேறானவை.

வெளித்தோற்றத்தை அளிக்கும் சரீரத்தினடத்தில் உள்ள புலன்களைக் கொண்டு அறிந்தே மனமானது செயல்படுகின்றது. ஆனால், ஆத்மாவின் வியாபகம் ஆகாசம் போன்று எங்கும் பரவிக்கிடக்கின்றது.

புதியதாக அனுபவமோ, அல்லது அபிப்பிராயமோ ஏற்படும் போது மனது அறிகின்றது என்கின்றோம். ஆனால், ஆத்மா தானே அறிவு மயமானது. அதனால், புத்தியினால் உண்டாகும் அறிவுக்கு சந்தர்பங்களும், காரணங்களும் உண்டு. ஆத்மாவி அறிவுக்கு எந்தக் காரணங்களும் இல்லை. அது ஸ்வயமாக எப்போதும் இருக்கின்றது.

உதாரணமாக, நம்முடைய மனதில் தோன்றும் எண்ணங்கள் சில அனுகூலமாகவும், சில பிரதிகூலமானதாகவும் இருப்பதினால், அதை ஒப்புக்கொள்ளவும், தள்ளவும் முடிகின்றது. இதில் ஒப்புக்கொள்ளவு, தள்ளவும் வேண்டும் என்று தீர்மானிக்கின்ற மாறுதலுக்கு உட்படாத ஒரு பேரறிவு இருக்கவேண்டுமல்லவா? அதனால்தான் பேரறிவு இருக்கின்றது, அது மனதிற்கு அப்பாற்பட்டது.

இப்படி மாறுதலை அடையும் வஸ்துக்கள் அனைத்துமே அனாத்மா என்று தத்வமஸி என்ற மஹாவாக்கியம் உணர்த்துவதுடன், சிருஷ்டிக்கு காரணம் அஞ்ஞானமே என்றும், அந்த அஞ்ஞானத்தை அறியவைப்பது ஆத்மஞானமே என்றும் போதிக்கின்றது.

மேலும், அறியாமையினால் மங்கிய இருட்டில் கயிற்றை பாம்பு என்று நினைப்பது போன்று, துவம் (நீ) என்ற பதத்தை சரீரத்துடன் ஒப்பிட்டுக்கொள்கின்றனர். அதுவே, வெளிச்சம் வந்தவுடன் அந்தக் கயிறு பாம்பல்ல என்பதை அறிவது போன்று, விசாரத்தினால் ஆத்ம ஞானம் உண்டாகியவுடன் இந்த சரீரம் நான்” அல்ல. தன்னுள்ளே இருக்கின்ற சேதனம் மட்டுமே ஆத்மா என்பதை அறிகின்றான். இந்த அனுபவ ஞானம் வேதத்தினலே அவனுக்கு தெளிவாகியுள்ளது. இந்த சாஸ்திர அறிவு ஒளியினாலேயே அவன் சரீரம், புலன்கள், அந்தக்கரணமான மனம் போன்ற எல்லாமே அனாத்மா என்பதை அறிகின்றான். இப்படி அறிபவனே தன்னுள்ளே இருக்கின்ற ஆத்மாவை உற்று நோக்குகின்றான். அவனுக்கு தான் தனியானவன் என்ற எண்ணம் நீங்குவதுடன் துவம் என்ற பதத்திற்கு அர்த்தமான வஸ்துவில் தத் என்ற அர்த்தம் உட்புகுந்திருப்பதையும் அறிவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *