ஆத்மநிச்சயம் (பகுதி – 5)

ஜீவனும், பிரம்மமும் ஒன்றென்றால், ஜீவனிடத்தில் காணப்படுகின்ற சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காதா? என்றால், அந்த ஆத்மாவுக்கு இதில் எதுவுமே சம்பந்தம் கிடையாது.

உதாரணமாக, ஆகாயத்தை நீல நிறமாக எண்ணுகின்றான். ஆனால், உண்மையில் ஆகாயத்திற்கு நிறமில்லை. அதுப்போல, இவனுக்கு வருகின்ற சுக, துக்கங்கள் இவனை பாதிப்பதாக எண்ணுவதினால், அவ்வாறு தோன்றுகின்றது.

அதனால், இவனது கற்பனையான நீல நிறம் எப்படி ஆகாயத்தைப் பாதிக்காதோ, அதுப்போல, இவனது, சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காது. இதுபோன்ற மனதில் தோன்றும் தேவையற்ற கற்பனைகளால், இவனது அந்தக்கரணம் ஆத்மா ஆகிவிடமுடியாது.

இவ்வாறு அந்தக்கரணத்தின் வாயிலாக பார்க்கப்படும் வஸ்துவக்கும் (உலகத்துக்கும்), ஆத்மாவுக்கும் அறியப்படுகின்ற சம்பந்தம் ஏற்படுகின்றது. வஸ்துவிடத்தில் தோன்றும் சைதன்யம் அந்தக்கரணத்தின் மூலம் சம்பந்தப்படுவதால், நான் இதை அறிகின்றேன், பார்க்கின்றேன் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இவ்வாறு அஹங்காரத்தின் மூலமே திருஷ்யம் (பார்க்கப்படும் பொருள்), திருஷ்டா (பார்க்கின்றவன்) இரண்டிற்கும் சம்பந்தம் உண்டாகின்றது. இந்த அஹங்காரம் நீங்கினால், அந்த நிலையும் நீங்கி அத்வைத நிலை உண்டாகும்.

அப்படியானால், அஹம் பிரம்மாஸ்மி என்பதில் ‘அஹம்’ என்ற பதமும், ‘பிரம்மம்’ என்ற பதமும் எப்படி ஒன்றாகும்? என்ற சந்தேகம் வருகின்றது.

இங்கும் அஹம் என்பது அந்தக்கரணத்தை குறிப்பிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் (சுஷுப்தி) அந்தக்கரணம் வேலை செய்வதில்லை. ஆனாலும், நான் நன்றாக உறங்கினேன் என்ற ஒன்றை அறிய முடிகின்றது. அல்லது எனக்கு நல்ல தூக்கத்தில் என் அருகே என்ன நடந்தது என்று தெரியவில்லை என்ற ஒன்றையும் அறிய முடிகின்றது.

இந்த நன்றாக உறங்கினேன் என்பதுவும், என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்பதுவும் அந்தக்கரணம் அறிவதுப் போல தெரிந்தாலும், உண்மையில் ஆத்மாவின் சேர்க்கையினால் அவ்வாறு தெரிகின்றது.

இதையும் ஒரு உதாரணத்தின் வாயிலாக அறிய முற்படலாம்.

ஒரு இரும்புக் கம்பியை நெருப்பில் காட்டிச் சூடு செய்யும் பொழுது, அந்த கம்பி நெருப்பின் வெப்பத்தைப் பெற்றுக் கொண்டு சிவந்த பொன் நிறமாக ஒளிர்கின்றது. மேலும், அது வெப்பமடைந்தும் காணப்படுகின்றது. இப்பொழுது, அந்தக் கம்பியை தொட்டால் சுட்டுவிடும்.

ஆனால், உண்மையில் அந்த இரும்புக்கம்பியின் சுபாவம் குளிர்ச்சியானது. அதை எப்பொழுது தொட்டாலும் சுடாது. ஆனால், நெருப்புடன் சம்பந்தப்படுவதினால், அது சுடுகின்றது.

அதுபோல, அந்தக்கரணம் ஆத்மாவுடன் சம்பந்தப்படுவதால், அது தன்னை (அஹம்) நான் என்று நினைத்துக் கொள்வதைப் போன்று தோன்றுகின்றது.

மெலும் ஆத்மா இல்லாமல், அந்தக்கரணம் தனியாக இருக்க முடியாது. ஆத்மாவின் சித் (ஒளி) அந்தக்கரணத்தில் பட்டால்தான் அது வேலை செய்யும். அதனால், வேதத்தில் கூறப்பட்ட மஹாவாக்கியத்தில் அஹம் என்ற வார்த்தை ஆத்மாவைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

அதனால், ஆத்மா கர்த்தா அல்ல. அதன் சிதாபாசத்தினால் அந்தக்கரணம் மட்டுமே கர்த்தாவாக செயல்படுகின்றது. இதனால், அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம், மற்றும் அஹங்காரம் அனைத்துமே ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்படுகின்றது. அதனால், சுக, துக்கம் உண்டாகின்றது.

இதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால், ஒரு ஸ்படிகத்தின் அருகே ஒரு செம்பருத்தி பூ வைக்கப்பட்டதும் அந்த ஸ்படிகம் உடனடியாக அந்த செம்பருத்தி பூவின் நிறத்தை தன் மீது ஏற்றிக்கொண்டு, காண்பதற்கு சிவந்த நிறமாக மாறிவிடுகின்றது.

ஆனால், உண்மையில் அந்த ஸ்படிகம் அந்த நிறத்தை அடைந்து விட்டதா என்றால், இல்லை. அந்த செம்பருத்தி பூவின் நிறத்தை தன்மீது ஏற்றிக் கொண்டு காண்பதற்கு அப்ப்டி இருக்கின்றது.

உண்மையில் இந்த சுக, துக்கத்திற்கும், ஆத்மாவிற்கும் சம்பந்தம் இல்லை. ஆத்மாவிற்கும், அந்தக்கரணத்தின் செயலுக்கும் சம்பந்தமே கிடையாது

ஆத்மா சுத்த சைதன்யம், மாறுதல் இல்லாதது. ஆனாதி காலமாக வந்த அவித்தையின் (அஞ்ஞானத்தின்) காரணமாக ஆத்மா சுக, துக்கங்களை அடைவது போன்று தோன்றுகின்றது.

அதுப்போல, பிரம்மத்தின் மீது இந்த உலகம் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அந்த பரமா(ஆ)த்மா எந்த குணங்களுடனும் சம்பந்தப்படாத அஸங்கன் என்பதே உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *