ஆத்மநிச்சயம் (பகுதி – 4)

நேரடியாக மோக்ஷத்தை கர்மாவினால் கொடுக்க முடியாது. ஞானம் உண்டாகுவதற்கு உபயோகமான சூழ் நிலைகளை வேண்டுமானாலும் கர்மா உண்டாக்க முடியும். எனென்றால், உண்டுபண்ணுதல், அடைதல், தூய்மைப்படுத்துதல், மாறுபாடு செய்தல் போன்ற எந்த கர்மாக்களினாலும் மோக்ஷம் சித்திக்காது. அதனால், மோக்ஷத்திற்கு கர்மா சாதனமல்ல என்பது நிச்சயம்.

இதுவரை கர்மா தானாகவே மோக்ஷத்தை கொடுக்காது என்று அறிந்தோம், இனி கர்மா ஞானத்துடன் சேர்ந்து மோக்ஷத்தை உண்டாக்குமா?

இதிக் கர்மாவினால் சித்த சுத்தி உண்டாகி, அதன் வாயிலாக அவன் ஞானத்த அடைய தக்க சூழ்நிலை உண்டாகி, அவன் கர்மா செய்ததினாலோ, அல்லது கர்மாவை விட்டதினாலோ ஞானம் சித்தியாகின்றது என்றவுடன், கர்மா முடிந்த பின்புதான் இது உண்டாகும்.

ஆக, மோக்ஷத்தை அளிப்பதில் இரண்டும் சமமான சாதனமாக இருக்கலாமா என்றால், அதுவும் முடியாத காரியம். காரணம் ஒன்றுக்கு ஒன்று விரோதமானவை. கர்மாவை செய்வதற்குக் காரணமே அஞ்ஞானம் ஆகும். அஞ்ஞானம் நீங்கினால்தான் ஞானம் உண்டாகும். இதிலிருந்து இரண்டும் ஒன்றுக்கு ஒன்று விரோதமானவை ஆகும்.

கர்ம ஸாதனம் எதுவும் நிரந்தரமில்லை. அது மாறுதலுக்கு உட்பட்டது. உண்மையில்லாதது. இது அஞ்ஞானத்தினாலும், மாயையினாலும் தோன்றுவது. ஆகவே, கர்மமும், ஞானமும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அதாவது, இருட்டும், வெளிச்சமும் எப்படி ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காதோ, அதுபோல, கர்மாவும், ஞானமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்க முடியாது.

ஒருவன் ஆத்மஞானியானவுடன் அவனுக்கு காரியம் என்பது எதுவும் கிடையாது. அதனால், அவன் வேதத்தின் கட்டு, திட்டங்களுக்கு அப்பாற்பட்டவனாகின்றான். தேக சம்பந்தமில்லாத ஞானி அந்த தேகத்தை வைத்து எந்த கர்மாவும் செய்யமாட்டான்.

ஒரு குழந்தை எப்படி மரக்குதிரையை உண்மையான குதிரையாக நினைத்து அதன் மீது ஏறி சவாரி செய்கின்றதோ, அதுபோல, அஞ்ஞானி இந்த சரீரத்தை உண்மை என்று எண்ணி அதையே ஆத்மாவாக நினைக்கின்றான்.

இந்த கர்மமும், ஞானமும் அஞ்ஞானிய்டம் மட்டுமே காணப்படும். அது எவ்வாறு எனில், ஒரு மங்கிய வெளிச்சத்தில் ஒரு மரக்கிளையைப் பார்த்த ஒருவன் அதைப் பிசாசு என்று பயந்து ஓட்டம் பிடிக்கின்றான். இந்த இடத்தில் அவனது ஞானம் அது பிசாசு என்பதினால், அவனது செயல் ஓட்டமாக மாறியது.

ஆனால், ஞானியின் விசயத்தில், அவன் தெளிந்த அறிவைக் கொண்டவனாதலால், அவன் இதற்கெல்லாம் மயங்கமாட்டான்.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு அறிவு தேவையாகின்றது. அந்த காரியத்தைப்பற்றிய அறிவு இன்றி அந்த காரியத்தைச் செய்ய முடியாது. ஆனால், ஆத்மஞானம் என்பது காரியமாகாது. அது அறியாமையை நாசம் செய்து வந்துள்ளதால், அவன் செய்ய வேண்டிய காரியமோ, செய்யப்படும் வஸ்துவோ எதுவும் இல்லை.

அஞ்ஞானி அறியாமையினால் ஆசை உண்டாகி, அந்த ஆசையினால் அவன் செயல் செய்கின்றான். ஆனால், ஞானியோ ஆசை அற்றவனாக இருப்பதினால், அவனது அனைத்து செயல்களுக்கும் கர்தாவாக அந்த இறைவனே இருக்கின்றான். அதனால்தான் ஞானி எந்த கர்மாவும் செய்வதில்லை என்று அறியவேண்டும்.

இதில் ஒருசிலர், நானேபிரம்மம்என்ற வாக்கியத்தினால், உண்டாகும் ஞானம் மட்டுமே அஞ்ஞானத்தைப் போக்கடித்து விடாது என்றும், அதைத் தொடர்ந்து அபியாஸம் செய்து அதனால் உண்டாகும் ஞானத்தினால்தான் அஞ்ஞானம் நீங்கும் என்றும், இதன் காரணமாக ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் இருக்கின்றது என்று வாதிடுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர், நானே பிரம்மம்என்ற வார்த்தையினால் மட்டுமே ஒருவனுக்கு ஆத்மசாஸாத்காரம் உண்டாகிவிடாது என்றும், அது அறிவு என்ற ஒரு எண்ணத்தினால் உண்டானது என்றும், இது சுத்த பிரம்மத்தைக் காட்டாது என்றும், அந்த பிரம்மத்தை இடைவிடாது தியானிப்பதினால் மட்டுமே ஒரு புதிய ஞானம் உண்டாகி, அதன் வாயிலாக மட்டுமே அவன் மோக்‌ஷத்தை அறிகின்றான் என்றும் வாதிடுகின்றனர்.

இங்கு கூறப்பட்ட மேற்கண்ட இரண்டு கருத்துக்களுமே தவறானது என்பதை இனி காணலாம்.

ஒருவன் நானேபிரம்மம் என்று தினம், தினம் கூறிக்கொண்டே வருவது என்பது, அவனது மனதை ஒரே நிலையில் இருக்கும்படிச் செய்து, அந்த மனதில் வேறு இடையூறான எண்ணங்களோ, தோற்றங்களோ வராமல் தவிர்ப்பதற்காகத்தான் ஆகும். இதனால், அவனது மனம் ஒரு நிலைப்பட்டு நானேபிரம்மம் என்ற தத்துவார்த்தத்தில் நிலைப்படும். இங்கு கர்மாவிற்கு சிறிதும் இடம் கிடையாது. அதனால், ஞானமும், கர்மாவும் சேர்ந்து இருப்பது சாத்தியமாகாது என்று நிருபிக்கப்படுகின்றது.

இருப்பினும் மற்றொரு உதாரணத்தின் வாயிலாக இதை மேலும் அறிய முயற்சிக்கலாம். ஜீவனும் பிரம்மமும் ஒன்றே என்ற அடிப்படையில் கூறுவதை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களில் இரு பிரிவினர் உள்ளனர்.

ஒரு பிரிவினர், ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு என்றும் ஆனால், ஜீவனும், பிரம்மமும் ஒன்றாகாது என்கின்றனர்.

மற்றொரு பிரிவினர், ஜீவனாக இருக்கும் நிலையில் பிரம்மத்திடமிருந்து வேறுபட்டதுதான், ஆனால், அவன் முக்தி அடைந்த பிறகு ஒற்றுமை உண்டு என்கின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தாலும் கர்மாவும், ஞானமும் ஒன்றாக இணைய முடியாது என்பதையும் காணலாம்.

இதை எப்படி அறியலாம் என்றால், ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் எதில் ஒற்றுமை என்று அவர்கள் நினைத்தாலும், சிலவற்றில் ஒற்றுமை இல்லை என்று நினைத்தாலும் அந்த பேதமை என்பதே அறியாமை எனப்படும். அதனால், அவர்கள் கர்மாவினால் இதை நீக்கிக் கொள்ள முடியாது. அல்லது ஞானத்தினால் பிரம்மத்தை அறிந்தும், அதை தெரியவிடாமல் ஏதோ ஒன்று மறைத்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினாலும், அதை மாற்ற மேலும் ஒரு புதிய கோணத்தில் உபதேசிக்கப்படும் ஞானத்தினால்தான் முடியுமே தவிர கர்மாவினால் முடியாது.

அடுத்து, ஜீவனும், பிரம்மமும் வேறு, வேறு என்று கூறினால், அங்கும் கர்மாவினால் இதை நிருபிக்க முடியாது. எப்படியென்றால், இரண்டும் தனித்தனியான சத்தியப் பொருளாக இருப்பின் அவைகள் இரண்டும் இணைந்து ஒன்றாக முடியாது என்பதினால், பாரமார்த்திக சத்தியம் என்ற உண்மை அடிப்பட்டு விடும். இதனால், என்ன பிரச்சனை உண்டாகும் என்றால், பிரம்மத்திற்கு வேறான மற்றொரு சத்திய வஸ்து இருப்பின் அது பிரம்மத்திற்கு விரோதமாக செயல்படும் என்ற நிலை உருவாகிவிடும். இதனால் பிரம்மத்தின் இருப்பும், மதிப்பும் பொய்யாகிவிடும்.

இதனால், ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி பிரம்மமாக மாற முயற்சித்து, பற்பல கர்மங்களை வருண பேதத்தின் அடிப்படையில் மாற்றி, மாற்றி செய்து, இது உயர்ந்த பிரம்மம், இது தாழ்ந்த பிரம்மம் என்ற பேதமை புத்தி உண்டாகிவிடும்.

இதில் பிரம்மம் தனியாக இருக்கும், ஒவ்வொரு ஜீவனுக்கும் பலவாக இருக்கும், அதாவது பல ஆத்மாக்களாக இருக்குமென்று கூறினாலும், அந்த அந்த ஜீவர்கள் அவரவர்களுக்கு உகந்த கர்மாக்களைச் செய்து, அவர்கள் அடைய விரும்பும் மோக்ஷமான சாயுஜ்யம், சாமீபம், சாலோகம் போன்ற முக்திகளினால் அங்கும் பேதமை இருப்பதைப் பார்ர்கின்ற பொழுது, இந்த கர்மாக்களினாலும் பயன் இல்லை என்பதை அறிய முடிகின்றது.

இதைப்போன்றே, ஒருசிலர், நித்ய கர்மாக்களை மட்டுமே செய்து, இனிவர இருக்கின்ற பாவ கர்மாக்களை தவிர்த்து, மோக்‌ஷத்தை அடையலாம் என்று கருதுகின்றனர்.

இங்கும் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒருவனுடைய பிராரப்த கர்மாவை அவன் அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். அதில் எந்த மாற்றமும் செய்யமுடியாது. ஆனால், பாவ கர்மாக்களை கழிக்க, பல புண்ணிய கர்மாக்களை ஆகாமிய கர்மாக்களாகச் செய்து பாவத்தைக் கழிக்கலாம் என்றாலும், அதிலும் பிரச்சனை உள்ளது. எப்படியென்றால், இந்த புண்ணிய கர்மாக்களினால் உண்டாகின்ற பிறவியை தடுக்க முடியாது. அதன் பயனாக மீண்டும் வருகின்ற சுக, துக்கங்களை தவிற்க முடியாது. இதுபோன்ற எந்த கர்மாவைச் செய்தாலும் அதன் பலன் நன்மையோ, தீமையோ நிச்சயம் உண்டு. இதிலிருந்து ஒருவன் தப்பிக்க முடியாது.

அதனால், எந்த கர்மாவைச் செய்தாலும் பிரம்மத்தை அறிய முடியாது. கர்மாவை கர்மாவினால் மாற்ற முடியாது.

இதற்கு ஒரே தீர்வு ஆத்ம ஞானம் மட்டுமே ஆகும்.

இந்த அத்ம ஞானத்தினால் ஒருவன் அடைந்த உண்மை ஸ்வரூபம் அவனை கர்மங்களில் பந்தப்படுத்தாது. ஞானத்தினால் அந்த கர்மங்கள் அனைத்தும் நிஷ்காமிய கர்மமாக மாறிவிடுவதினால், அவனுக்கும் புதியதான ஆகாமியமோ, சஞ்சிதமோ உண்டாகாது. பிராரப்தத்தை அவன் உடல் இருக்கின்றவரை அனுபவித்துத் தீர்ப்பான்.

அப்படியானால், கர்மாவினால் எந்த பயனும் இல்லையா என்றால், அப்படியும் கூற வழியில்லை. இந்த கர்மாவினால் ஒருவன் தன்னுடைய மனதினை செம்மைப்படுத்தி, அதன்பிறகு அந்த ஈஸ்வரனை அவன் அறிந்து, ஞானத்திற்கு வரவேண்டும் என்பதாகும். இதில் ஞானம் என்பது அறிவு சார்ந்த விஷயமாக இருப்பதினால், அது அனைவராலும் அடைந்திட முடியாது என்பதை அறியவேண்டும்.

ஆம், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அனைவருமே அறிவாளிகளாக இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியதோ, அதுப்போல, இந்த ஞானத்திற்கு அனைவருமே தகுதியானவர்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் அஞ்ஞானமாகும்.

ஒரு சூரியனுடைய பிரதி பிம்பம் பிரதி பிம்பிக்கின்ற தண்ணீர் பானையின் நீரின் தெளிந்த தன்மையைப் பொருத்தே பிரகாசமாக பிரதி பிம்பிக்கும். கலங்கிய, மங்கிய, அழுக்கான நீரில் அந்த சூரியனின் பிரதி பிம்பம் அவ்வளவு பிரகாசமாக இருக்காது.

அதுபோல, மனித மனம் தெளிந்து இருந்தால், அந்த அறிவின் வெளிப்பாடு ஞானமாக பிரகசிக்கும். அதுவே கலங்கிய, மந்தமான, கெட்ட மனம் கொண்ட மனிதர்களில் அறிவு வெளிப்பாடு அவ்வளவு எளிதாக வெளிப்படாது.

இது அனைத்துமே உபாதிகளின் தன்மையைப் பொருத்தே இருக்கின்றது. அதனால், இப்படிப்பட்டவர்கள் கர்மத்தினால் மட்டுமே நல்ல மனதினைப் பெற்று, ஞானத்திற்கு வர முடியும். அதற்கு பல பிறவிகள் கூட உண்டாகலாம். இதில் நம் செயலாவது ஒன்றுமில்லை என்பதை அறியவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *